தேடுதல்

Vatican News
தோமா இயேசுவைப் பார்த்து, "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!" என்றார். (யோவான் 20: 28) தோமா இயேசுவைப் பார்த்து, "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!" என்றார். (யோவான் 20: 28) 

இறை இரக்கத்தின் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை

இறைவனின் இரக்கத்தை நம்பும்போது, நம் வாழ்வில் உருவாகும் சந்தேகப் புயல்கள் தானாகவே அடங்கும்; சந்தேக சுவர்களால் நாம் உருவாக்கிக்கொள்ளும் கல்லறைகளிலிருந்து உயிர் பெறுவோம்.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

இறை இரக்கத்தின் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை

சீனாவின் பெரு நகர் ஒன்றில், சென்ற ஆண்டின் இறுதியில் தோன்றிய கிருமியொன்று, கடந்த 4 மாதங்களாக, உலகின் பல நாடுகளில், மக்களை, அவரவர் வீடுகளில் சிறைப்படுத்தியுள்ளது. இந்தக் கிருமியைப்பற்றிய, உறுதியான, முழுமையான, அறிவியல் விவரங்கள் இல்லாத நிலையில், இக்கிருமியைக் குறித்த பல்வேறு வதந்திகள் கட்டுக்கடங்காமல் வலம் வருகின்றன. இந்தக் கிருமியின் தாக்குதல்களைக் குறித்து, செய்திகள் என்ற பெயரில், ஊடகங்கள், ஒவ்வொருநாளும் வெளியிட்டு வரும் தகவல்கள், நமக்குள் அச்சத்தையும், சந்தேகத்தையும் வளர்த்து வருகின்றன.

அச்சம், கலக்கம், சந்தேகம் ஆகிய உணர்வுகளுடன் நாம் போராடிவரும் இச்சூழலில், இயேசுவின் சீடர்களில் ஒருவர், சந்தேகத்தின் பிடியில் சிக்கித்தவித்த நிகழ்வை, தாய் திருஅவை, நமக்கு நற்செய்தியாக (யோவான் 20:19-31) வழங்கி, நம்மை சிந்திக்க அழைக்கிறார். இரக்கமும், சந்தேகமும் ஒன்றையொன்று சந்தித்ததையும், சந்தேகத்தை இரக்கம் வென்றதையும், இன்று, இறை இரக்கத்தின் ஞாயிறன்று, கொண்டாடுகிறோம்.

இறை இரக்கம், அல்லது, இறைவனின் பேரன்பு என்ற கதிரவன் எழும்போது, சந்தேகப் பனிமூட்டம் கலைந்துவிடும் என்பதை, இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கிறது. உயிர்த்த இயேசு, இன்று நம்முன் தோன்றினால், உடனே, அவர் திருவடி பணிந்து, நம் விசுவாசத்தையும், நம்பிக்கையையும் வெளியிட நமக்கு எவ்விதத் தயக்கமும் இருக்காது. ஆனால், இவ்வாண்டு நாம் கொண்டாடிய உயிர்ப்புப் பெருவிழா, வழக்கமான, ஆர்ப்பாட்டமான உயிர்ப்பு விழாவாக அமையவில்லை.

இயேசு உயிர்த்தெழுந்த அந்த முதல் உயிர்ப்பு நாளும், ஒரு திருவிழாவாக இருந்ததா என்பதே சந்தேகம்தான். உயிர்த்த இயேசுவை, சீடர்கள் சந்தித்த நிகழ்வுகள் அனைத்திலும், அடிப்படையில் இழையோடிய ஓர் உணர்வு, சந்தேகம். இந்நிகழ்வுகள் அனைத்தின் சிகரமாக, இன்று, நாம் நற்செய்தியில் காண்பது, சந்தேகம் கொண்டிருந்த தோமாவை இயேசு சந்தித்த அழகான நிகழ்ச்சி.

நம் வாழ்வை ஆட்டிப்படைக்கும் உணர்வுகளிலேயே அதிக ஆபத்தானது எது தெரியுமா? சந்தேகம். சந்தேகம் ஓர் உணர்வா என்று கூட நம்மில் சிலர் சந்தேகப்படலாம். சந்தேகம் ஒரு தனி உணர்வு அல்ல, மாறாக, அதை ஒரு கூட்டு உணர்வு என்று நாம் எண்ணிப்பார்க்கலாம். சந்தேகம், பல உணர்வுகளின் பிறப்பிடம். சந்தேகம் குடிகொள்ளும் மனதில், கூடவே, பயம், கோபம், வருத்தம், விரக்தி என்ற பல உணர்வுகள், கூட்டுக்குடித்தனம் செய்யும்.

சந்தேகத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாக, விவிலியத்தில் கூறப்படும் ஒரு மனிதர், தோமா. உண்மை பேசும் எவரையும், "அரிச்சந்திரன்" என்றும், தாராள மனதுடையவரைப் "பாரி வள்ளல்" என்றும் அழைக்கிறோமே, அதேபோல், சந்தேகப்படும் யாரையும், “சந்தேகத் தோமையார்” என்று அழைக்கிறோம். அவ்வளவு தூரம், தோமா, சந்தேகத்தின் மறுபிறவியாக, அடையாளமாக மாறிவிட்டார்.

தோமா, இயேசுவின் உயிர்ப்பைச் சந்தேகப்பட்டார் என்று கேட்டதும், நம்மில் பலர், (என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன்) உடனே, ஒரு நீதியிருக்கை மீது அமர்ந்துவிட வாய்ப்புண்டு. "என்ன மனிதர் இவர்? இயேசுவோடு மூன்று ஆண்டுகள் நெருக்கமாய் பழகிவிட்டு, எப்படி இவரால் சந்தேகப்பட முடிந்தது?" என்ற கேள்வியை கேட்டு, "தோமா இப்படி நடந்துகொண்டது தவறு" என்ற தீர்ப்பையும் எழுதிவிடக்கூடும். நீதியிருக்கைகளில் ஏறி அமர்வதும், அடுத்தவர் மீது தீர்ப்பை எழுதுவதும் எளிது. ஒரு விரலை நீட்டி, தோமாவை, குற்றவாளி என்று சுட்டிக்காட்டும்போது, மற்ற மூன்று விரல்கள் நம்மை நோக்கித் திரும்பியுள்ளதை எண்ணி, கொஞ்சம் நிதானிப்போம்.

இயேசுவின் உயிர்ப்பைப்பற்றி தலைமுறை, தலைமுறையாய், ஆயிரமாயிரம் விளக்கங்களை வழங்கிவரும் கிறிஸ்தவப் பாரம்பரியத்தில் பிறந்து வளர்ந்துள்ள நமக்கே, அந்த உயிர்ப்பு குறித்த விசுவாசத்தில் அவ்வப்போது தடுமாற்றம் ஏற்படுகிறது. அப்படியிருக்க, உயிர்ப்பைப்பற்றி தெளிவற்ற எண்ணங்கள் கொண்டிருந்த யூத சமுதாயத்தில், 2000 ஆண்டுகளுக்கு முன் பிறந்து வளர்ந்த சீடர்களில் ஒருவர், இயேசுவின் உயிர்ப்பைச் சந்தேகித்தார் என்பதற்காக, அவரைக் கண்டனம் செய்வது தவறு. தீர்ப்பிடுவது தவறு.

கல்வாரியில், இயேசு இறந்ததை, நீங்களோ, நானோ நேரடியாகப் பார்த்திருந்தால், ஒருவேளை, தோமாவை விட இன்னும் அதிகமாய் மனம் உடைந்து போயிருப்போம். அந்த கல்வாரி பயங்கரத்திற்குப் பின் ஒன்றுமே இல்லை என்ற முடிவுக்கும் வந்திருப்போம். எனவே, தீர்ப்பு வழங்க நாம் அமர்ந்திருக்கும் நீதி இருக்கைகளிலிருந்து முதலில் எழுவோம். குற்றவாளிக் கூண்டில் நாம் நிறுத்தியுள்ள தோமாவின் நிலையில் நம்மை நிறுத்தி, இந்த நிகழ்வைச் சிந்திப்போம்.

உயிர்த்த இயேசுவைக் கண்டதும், ஏனையச் சீடர்களுக்கும் கலக்கம், குழப்பம், சந்தேகம் எழுந்தன என்பதை நற்செய்திகள் கூறுகின்றன (மத்தேயு 28:17; மாற்கு 16:13-14; லூக்கா 24:37-39). இயேசுவிடம் கேட்கமுடியாமல், மற்ற சீடர்கள் மனதுக்குள் புதைத்து வைத்திருந்த சந்தேகத்தைத்தான் தோமா வாய்விட்டுச் சொன்னார். எனவே தோமாவை மட்டும் சந்தேகப் பேர்வழி என்று கண்டனம் செய்யாமல், எல்லாச் சீடர்களுமே சந்தேகத்தில், பயத்தில் வாழ்ந்துவந்தனர் என்பதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும். சீடர்களின் பயம், சந்தேகம் எல்லாவற்றிற்கும் காரணம் இருந்தது. அதையும் புரிந்து கொள்ள முயல்வோம்.

தங்கள் குடும்பங்களையும், மீன் பிடிக்கும் தொழிலையும் விட்டுவிட்டு, இயேசுவை நம்பி, மூன்றாண்டுகள் வாழ்ந்தவர்கள், இச்சீடர்கள். இந்த மூன்று ஆண்டுகளில், இயேசுதான் தங்களது உலகம் என்று, நம்பிவந்தனர். அவர்கள், கண்ணும், கருத்துமாய் வளர்த்துவந்த நம்பிக்கை மரம், ஆணி வேரோடு பிடுங்கப்பட்டு, சிலுவையில் தொங்கவிடப்பட்டது. இயேசுவை அடித்தளமாய் வைத்து, அவர்கள் கட்டியிருந்த கனவுக் கோட்டைகளெல்லாம், தரை மட்டமாக்கப்பட்டன. எருசலேமில், கல்வாரியில், அவர்கள் கண்ட காட்சிகள், அவர்களை முற்றிலும் நிலை குலையச் செய்துவிட்டன. இயேசுவின் கொடுமையான மரணம், அவர்கள் வாழ்வில் விட்டுச்சென்ற வெற்றிடத்தை, சந்தேகமும் பயமும் நிரப்பிவிட்டன. யாரையும், எதையும் சந்தேகப்பட்டனர். உரோமைய அரசும், மதத் தலைவர்களும் தங்களைத் தாக்கக்கூடும் என்ற அச்சத்தில் அவர்கள் வாழ்ந்து வந்தனர்.

இன்று, நமது நிலை என்ன? இவ்வுலகையே முற்றிலும் ஆள்வதாக எண்ணிக்கொண்டிருந்த நாம், இன்று, கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமியினால், எப்போது, எவ்வகையில் தாக்கப்படுவோம் என்பதை அறியாமல் அடைபட்டு கிடக்கிறோமே!

தங்களில் ஒருவர் இயேசுவைக் காட்டிக்கொடுத்ததால், தங்களில் ஒருவர் இயேசுவை மறுதலித்ததால், இயேசுவின் சீடர்கள், அதுவரை, ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த நம்பிக்கை தொலைந்து போனது. சிலுவையில் கந்தல் துணிபோல் தொங்கிக் கொண்டிருந்த இயேசுவை, உடலோடு புதைப்பதற்கு முன்பே, அவரால் இனி நடக்கப்போவது ஒன்றுமில்லை என்று, மனதால் அவரைப் புதைத்துவிட்டனர் சீடர்கள்.

நம் வாழ்வையும் சந்தேகம் ஆட்டிப் படைக்கும்போது நாம் செய்வது என்ன? உள்ளத்தையும், சிந்தனையையும், இறுகப் பூட்டிவிட்டு, இருளில் புதையுண்டு போகிறோம். உறவுகளில் ஏற்படும் சந்தேகங்களைத் தீர்க்கும் சிறந்த வழி என்ன? மனம் விட்டுப் பேசுவது. இதைத்தான் இயேசு செய்துகாட்டினார். மனதில் துளிர்க்கும் சந்தேகத்தை வேரறுக்க, வாய் வார்த்தைகள் மட்டும் போதாது. ஆங்கிலத்தில் சொல்வதுபோல், சில வேளைகளில், 'physical proof', அதாவது, உடலளவு நிரூபணங்கள் தேவைப்படலாம். உயிர்த்தபின் இவை அனைத்தையும் இயேசு வழங்கினார் என்பதை இன்றைய நற்செய்தி தெளிவாக்குகிறது.

கொரோனா தொற்றுக்கிருமியின் நெருக்கடியால் இல்லங்களிலேயே அடைபட்டிருக்கும் நமக்கு, குடும்பத்தினரோடு மனம்விட்டுப் பேசும் நேரங்கள் இந்நாள்களில் உருவாகலாம். அல்லது, அத்தகைய உன்னத நேரங்களை நாம் உருவாக்கிக்கொள்ளலாம். அந்த நேரங்களை, அருள்நிறை தருணங்களாகப் பயன்படுத்த, இறைவன் நமக்கு வழிகாட்டவேண்டும் என்று செபிப்போம்.

வாய் வார்த்தைகளாலும், தன் உடலையே நிரூபணமாக அளித்ததாலும், தோமாவையும், ஏனையச் சீடர்களையும், அவர்கள் எழுப்பியிருந்த விரக்தி என்ற கல்லறையிலிருந்து வெளியே வருமாறு அழைத்தார், இயேசு. சீடர்களின் சந்தேகங்களுக்கு, தோமாவின் சந்தேகங்களுக்கு, இயேசு விடுத்த அழைப்பு: "இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்... நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்" (யோவான் 20:27,29). இயேசு, உயிர்த்தெழுந்த பின், தன் காயங்களைத் தொடுவதற்கு, தன் சீடர் தோமாவுக்கு விடுத்த இவ்வழைப்பு, இறை இரக்கத்தின் ஞாயிறன்று நாம் வாசிக்கும் நற்செய்தியில், ஒவ்வோர் ஆண்டிலும் நம்மை வந்தடைந்தாலும், இவ்வாண்டு, இது, கூடுதல் சிந்தனைகளை உருவாக்குகின்றது.

இயேசு மலைமீது வழங்கிய பல பேறுகளை நாம் அறிவோம். ஒருவேளை, தன் பணிவாழ்வின்போது, இன்னும் பல பேறுகளை ஆசிமொழிகளாக அவர் வழங்கியிருக்கக் கூடும். உயிர்த்தெழுந்தபின், இறுதியாக, அவர் வழங்கிய மற்றுமொரு பேறு, "காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்" (யோவான் 20:29) என்ற அந்த இறுதி பேறு. இவ்வாண்டு, இத்தகைய ஒரு பேற்றினை அவர் நம்மிடம் கூறுவதாக எண்ணிப்பார்க்கலாம்.

கடந்த சில வாரங்களாக, குறிப்பாக, புனித வாரம் முழுவதும், திருவழிபாடுகளில், திரு விருந்தில் நேரடியாகப் பங்கேற்க இயலாமல், இயேசுவின் திரு உடலை உட்கொள்ள இயலாமல், ஊடகங்கள் வழியே இந்த அனுபவத்தில் பங்கேற்று வரும் நம்மிடம், ஆன்மீக வழிகளில் தன்னைத் தொடும்படி, வழிபாட்டு அனுபவங்களை நேரடியாக காணாமலே, நம்பும்படி இயேசு அழைக்கிறார். அந்த ஆன்மீக விருந்தில் முழுமையாகப் பங்குகொள்ளும் வரத்தை இறைவனிடம் வேண்டுவோம்.

காயங்களும், தழும்புகளும் இயேசுவின் வாழ்வில் வகித்த முக்கியமான இடத்தை, இயேசுவுக்கும், தோமாவுக்கும் இடையே நிகழ்ந்த சந்திப்பு நமக்கு உணர்த்துகிறது. சிலுவையில் அவர் பெற்ற ஆழமான காயங்களின் தழும்புகளை, அவர், தன் உயிர்த்த உடலிலும் பதித்திருந்தார். இயேசுவின் உயிர்ப்பு, அவரது வாழ்வு, பாடுகள், மற்றும் மரணம் ஆகியவற்றுடன் பிரிக்க இயலாதவண்ணம் பிணைக்கப்பட்டுள்ளது என்பதை, அவர், தன் உயிர்த்த உடலில், தொடர்ந்து தாங்கி நின்ற தழும்புகள் உணர்த்துகின்றன. கிறிஸ்துவின் உடலான திருஅவை, காயங்கள் அடையும் என்பதையும், இயேசுவின் உடலில் இருந்த தழும்புகள் நமக்கு உணர்த்துகின்றன.

இலங்கை கிறிஸ்தவ சமுதாயம், சென்ற ஆண்டு, உயிர்ப்பு ஞாயிறன்று அடைந்த காயங்கள், கிறிஸ்துவின் உடல், இவ்வுலகில் தொடர்ந்து காயப்படும் என்ற உண்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. உயிர்த்த இயேசுவை சந்திக்க ஆலயங்களுக்குச் சென்றவர்கள், மீண்டும், கல்வாரிச் சிலுவையில் அறையப்பட்டனர்.

அந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து, அச்சமும், சந்தேகமும் இலங்கை மக்களை பெரிதும் வதைத்திருக்க வேண்டும். அந்த எதிர்மறை உணர்வுகளிலேயே அவர்கள் தங்களைப் புதைத்திருந்தால், விரைவில், வெறுப்பு, பழிக்குப் பழி என்ற உணர்வுகள், அவர்கள் கட்டிக்கொண்ட கல்லறைகளில் முளைத்திருக்கும். ஆனால், இலங்கை கிறிஸ்தவர்கள், உயிர்த்த இயேசுவுக்கு சாட்சிகளாக வாழ முடிவெடுத்ததால், சென்ற ஆண்டு உயிர்ப்பு ஞாயிறன்று தங்களை சிலுவையில் அறைந்தவர்களை மன்னிக்கும் உன்னத நிலையை இன்று அடைந்துள்ளனர். அம்மக்களின் உணர்வுகளை, இவ்வாண்டு, உயிர்ப்பு ஞாயிறன்று, கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்:

"கடந்த ஆண்டு, தவறான முறையில் வழிநடத்தப்பட்ட சில இளையோர், எங்கள்மீது தாக்குதல்களை மேற்கொண்டனர். நாங்களும், சாதாரண மனித நிலையிலிருந்து அந்த தாக்குதல்களுக்கு சுயநலத்துடன் பதில் தந்திருக்க முடியும். ஆனால், நாங்கள் இயேசுவின் படிப்பினைகள், மற்றும் அவரது வாழ்வை தியானித்ததன் பயனாக, அவர்களை மன்னித்துவிட்டோம். உயிர்ப்பு, சுயநலத்தை முற்றிலும் அழித்தது என்பதால், நாங்கள் அவர்களை வெறுக்கவில்லை, வன்முறைக்கு, வன்முறையை, பதிலாகத் தரவில்லை."

தன் காயங்களைத் தொடுவதற்கு இயேசு விடுத்த அழைப்பை ஏற்று, தோமா இயேசுவைத் தொட்டாரா என்பதில் தெளிவில்லை. உடலால், தோமா, இயேசுவைத் தொட்டிருக்கலாம், தொடாமல் போயிருக்கலாம். ஆனால், இந்த அழைப்பின் வழியே, தோமாவின் மனதை, இயேசு, மிக ஆழமாகத் தொட்டார். எனவே மிக ஆழமானதொரு மறையுண்மையை தோமா கூறினார் - "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!" (யோவான் 20: 28). இயேசுவை, கடவுள் என்று கூறிய முதல் மனிதப்பிறவி தோமாதான். தன்னை இயேசு இப்படி ஆழமாய்த் தொட்டதால், அவர் உணர்ந்த அற்புத உண்மையை, உலகெங்கும், சிறப்பாக, இந்திய மண்ணிலும் பறைசாற்றினார், புனித தோமா.

இறைவனின் பேரன்பும், இரக்கமும் எத்தனையோ அற்புதங்களை ஆற்றவல்லது. அறிவுத்திறனுக்கு எட்டாத இறைவனை நம்பும்போது, இறைவனின் இரக்கத்தை நம்பும்போது, நம் வாழ்வில் உருவாகும் சந்தேகப் புயல்கள் தானாகவே அடங்கும்; சந்தேக சுவர்களால் நாம் உருவாக்கிக்கொள்ளும் கல்லறைகளிலிருந்து உயிர் பெறுவோம். மரணமும், கல்லறையும் நிரந்தர முடிவுகள் அல்ல என்பதைப் பறைசாற்ற உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் வெற்றியை, உயிர்ப்புக் காலத்தில் கொண்டாடி வருகிறோம். கொரோனா தொற்றுக்கிருமி உருவாக்கியுள்ள மரணங்களையும், கல்லறைகளையும் முடிவுக்குக் கொணரும் புதுமையை, உயிர்த்த ஆண்டவரிடமிருந்து எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இந்த அற்புதங்களை ஆற்றும் இறை இரக்கத்தை நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் உணர, சந்தேகத் தோமாவின் பரிந்துரை வழியாக இறைவனை மன்றாடுவோம்.

18 April 2020, 13:57