தேடுதல்

Vatican News
ஈராக்கில் இரமதான் ஈராக்கில் இரமதான் 

கோவிட்-19 கிறிஸ்தவ-இஸ்லாமிய ஆன்மீகத்தை உறுதிப்படுத்தியுள்ளது

ஈராக் முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், ஏப்ரல் 23, இவ்வியாழனன்று துவங்கியுள்ள இரமதான் மாதத்திற்கு, தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கொரோனா தொற்றுக்கிருமி பரவல் காலத்தில், ஈராக் நாட்டில், கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே மிகுந்த உதவி மற்றும், ஒருமைப்பாட்டுணர்வு நிலவுகிறது என்று, பாக்தாத் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் லூயிஸ் இரஃபேல் சாக்கோ அவர்கள் கூறியுள்ளார்.  

இந்த கொள்ளை நோய் காலத்தில், ஈராக்கின் நிலவரம் குறித்து ஆசியச் செய்தியிடம் பேசிய கர்தினால் சாக்கோ அவர்கள், ஈராக்கில், மனித மற்றும், சமுதாய தோழமையுணர்வை பல வழிகளில் காண முடிகின்றது என்றும், செல்வந்தர் ஒருவர், தேவையில் உள்ள மக்களுக்கு உணவுப்பொருள்களை வழங்குவதை, இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகவும் கூறினார்.  

கிறிஸ்தவர்கள், எவ்வித மத வேறுபாடுமின்றி, தேவையான உதவிகளை முஸ்லிம்களுக்கு வழங்கி வருகின்றனர் என்றும், ஈராக் கத்தோலிக்கத் திருஅவையும், 90 ஆயிரம் டாலர்களை, நாட்டின் பல்வேறு பங்குத்தளங்களுக்கு அளித்து, தேவையில் இருக்கும் மக்களுக்கு உதவுமாறு கூறியுள்ளது என்றும், கர்தினால் சாக்கோ அவர்கள் எடுத்துரைத்தார்.

இந்தக் காலத்தில், சில மசூதிகளும், முஸ்லிம்களும் ஆற்றிவரும் உதவிகளால் கிறிஸ்தவர்களும் பலன் அடைந்துள்ளனர் என்றும், நெருக்கடி காலத்தில் ஒருவர் உதவி கேட்டுவருகையில், அங்கே பாகுபாடுகள் காட்டப்படுவதில்லை என்றும், பாக்தாத் கர்தினால் சாக்கோ அவர்கள் எடுத்துரைத்தார்.

இந்த தொற்றுக்கிருமி, நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பாதுகாப்பதிலும், மனித மற்றும், சமுதாய ஒருமைப்பாட்டுணர்வை மீண்டும் உருவாக்கியுள்ளது என்று கர்தினால் சாக்கோ அவர்கள் கூறினார்.

இஸ்லாம் மதத் தலைவர்கள், அரசியல் அதிகாரிகள், ஈராக் அரசுத்தலைவர், புதிய பிரதமர் உட்பட, பலர், இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா நல்வாழ்த்து மடல்களையும், செய்திகளையும் தனக்கு அனுப்பியிருந்தனர் என்பதையும் குறிப்பிட்டார், ஈராக் முதுபெரும் தந்தை சாக்கோ.

ஏப்ரல் 23, இவ்வியாழனன்று துவங்கியுள்ள இரமதான் மாதத்திற்கும், ஈராக் முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

ஈராக்கில் கொரோனா தொற்றுக்கிருமியால் ஏறத்தாழ 1,700 பேர் தாக்கப்பட்டுள்ளனர், இவர்களில் 83 பேர் பலியாகியுள்ளனர் என்று, அதிகாரப்பூர்வ அறிக்கை கூறுகிறது. (AsiaNews)

24 April 2020, 14:04