தேடுதல்

Vatican News
தங்கள் இல்லங்களிலிருந்து பாஸ்கா திருவிழிப்பைக் கொண்டாடும் பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் தங்கள் இல்லங்களிலிருந்து பாஸ்கா திருவிழிப்பைக் கொண்டாடும் பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள்  (AFP or licensors)

பாகிஸ்தானில் முதல்முறையாக நேரடி ஒளிபரப்பில் திருப்பலி

பாகிஸ்தான் இராவல்பிண்டியின் புனித யோசேப்பு பேராலயத்தில், ஏப்ரல் 12, உயிர்ப்புப் பெருவிழாவன்று நிறைவேற்றப்பட்ட திருப்பலி, தேசிய தொலைக்காட்சியில், முதல்முறையாக, நேரடியாக ஒளிபரப்பானது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பாகிஸ்தான் இராவல்பிண்டியின் புனித யோசேப்பு பேராலயத்தில், ஏப்ரல் 12, உயிர்ப்புப் பெருவிழாவன்று நிறைவேற்றப்பட்ட திருப்பலி, தேசிய தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பானது குறித்து, அம்மறைமாவட்டத்தின் பேராயர், ஜோசப் அர்ஷத் அவர்கள், பாகிஸ்தான் தொலைக்காட்சிக்கு தன் நன்றியைக் கூறியுள்ளார்.

பொதுவாக, பாகிஸ்தான் தொலைக்காட்சியில், கிறிஸ்து பிறப்பு மற்றும் உயிர்ப்புப் பெருவிழாக்களின்போது, அவ்விழாக்களைக் குறித்த ஒரு சில செய்திகள் மட்டுமே இடம்பெற்று வருவது வழக்கம். இவ்வாண்டு, முதல் முறையாக, தேசிய தொலைக்காட்சியில், உயிர்ப்புப்பெருவிழா திருப்பலி, நேரடி ஒளிபரப்பின் வழியே மக்களைச் சென்றடைந்தது என்று UCA செய்திக்குறிப்பு கூறுகிறது.

பல்சமய அமைதி மற்றும் ஒத்துணர்வு சங்கத்தின் தலைவர், Allama Muhammad Ahsan Siddiqui அவர்கள், பாகிஸ்தான் தேசிய தொலைக்காட்சி மேற்கொண்ட இந்த நேரடி ஒளிபரப்பு, சிறுபான்மையினரும் இந்நாட்டில் சம உரிமைகள் கொண்ட குடிமக்கள் என்பதை உணர்த்தியுள்ளது என்றும், இது, உண்மையிலேயே நேர்மறையான முன்னேற்றம் என்றும் கூறியுள்ளார்.

இந்த நேரடி ஒளிபரப்பில் திருப்பலியாற்றி மறையுரை வழங்கிய பேராயர் அர்ஷத் அவர்கள், கோவிட் 19 தொற்றுக்கிருமி நெருக்கடி நேரத்தில் உழைத்து வரும் மருத்துவப் பணியாளர்களுக்கு சிறப்பான முறையில் நன்றி கூறினார்.

இஸ்லாமியரை பெரும்பான்மையாகக் கொண்டுள்ள பாகிஸ்தான் வரலாற்றில், முதல்முறையாக, கத்தோலிக்கர்களின் திருப்பலி நேரடி ஒளிபரப்பில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. (UCAN)

15 April 2020, 14:41