தேடுதல்

Vatican News
இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தை கிறில் இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தை கிறில் 

இறைவனுடன் நம் ஒன்றிப்பை எதுவும் நீக்கிவிட முடியாது

துன்பம் எனும் குகைக்குள்ளேயே அலைந்துகொண்டிருக்கும் மனித குலம், நம்பிக்கை எனும் ஒளிக் கீற்றிற்காக ஏங்கிக் கொண்டிருக்கும் வேளையில் வரும் உயிர்ப்புப் பெருவிழா

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

ஏப்ரல் 19, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட ஆர்த்தடாக்ஸ் உயிர்ப்புப் பெருவிழாவையொட்டி கான்ஸ்தாந்திநோபிள் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தையும், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தையும், சிறப்பு வாழ்த்துக்களை வெளியிட்டுள்ளனர்.

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த கொரோனா தொற்று நோய்க்காலத்தில், இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட ஆர்த்தடாக்ஸ் உயிர்ப்புப் பெருவிழாவையொட்டி வாழ்த்துக்களை வெளியிட்டுள்ள கான்ஸ்தாந்திநோபிள் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தை பார்த்தலோமேயு அவர்களும், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தை கிறில் அவர்களும், இயேசுவுக்கு சொந்தமான நாம் பலவீனர்கள் எனினும், எவ்வித தடைகளும் இறைவனுடன் கூடிய நம் ஒன்றிப்பை நீக்கிவிட முடியாது என கூறியுள்ளனர். 

சில மாதங்களாக துன்பம் எனும் குகைக்குள்ளேயே அலைந்துகொண்டிருக்கும் மனித குலம், நம்பிக்கை எனும் ஒளிக்கீற்றிற்காக ஏங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் வரும் உயிர்ப்புப்பெருவிழா, நம்பிக்கை மற்றும், உயிர்ப்பின் அடையாளமாக வந்துள்ளது என தன் செய்தியில் கூறியுள்ளார் முதுபெரும்தந்தை பர்த்தலோமேயு.

மனிதர்கள் எவ்வளவு பலவீனமானவர்கள் என்பதையும், அச்சமும் அவநம்பிக்கைகளும் அவர்களை எவ்வளவுதூரம் ஆட்கொண்டுள்ளன என்பதையும் இந்த கொள்ளைநோய்க்காலம் நமக்கு எடுத்துக்காட்டியுள்ளது என்பதைக் கூறும், கான்ஸ்தாந்திநோபிள் முதுபெரும்தந்தையின் செய்தி, வேதனையும் மரணமும் நம் இறுதி உண்மை நிலையல்ல என்பதை, இந்த உயிர்ப்பு கொண்டாட்டம் வெளிப்படுத்துகிறது என உரைக்கிறது.

20 April 2020, 14:27