தேடுதல்

Vatican News
தொமினிக்கன் குடியரசின் ஆயர்கள் தொமினிக்கன் குடியரசின் ஆயர்கள் 

கோவிட்-19: தொமினிக்கன் குடியரசில் தேசிய செப நாள்

காங்கோ குடியரசில் கொரோனா தொற்றுக்கிருமி பரவலைத் தடுப்பதற்கு அரசு உருவாக்கியுள்ள தேசிய நிதி திட்டத்தின் (FNSCC) தலைவராக, அந்நாட்டு கர்தினால் Fridolin Ambongo அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உலகில் கோவிட்-19 கொள்ளை நோய் முற்றிலும் அழியும்படியாக, தேசிய அளவில் கடைப்பிடிக்கப்படும் செப நிகழ்வில், நாட்டு மக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு, தொமினிக்கன் குடியரசின் ஆயர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

ஏப்ரல் 26, இஞ்ஞாயிறு காலை 9 மணி முதல் 11 மணி வரை, நாடு முழுவதும் இதே கருத்துக்காகச் செபிக்குமாறு, ஆயர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்நிகழ்வு, அந்நாட்டின் திருத்தூதர் யாக்கோபு பேராலயத்திலிருந்து, பல்வேறு சமூகத்தொடர்பு சாதனங்கள் வழியாக, தேசிய மற்றும், பன்னாட்டு அளவில் ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இஞ்ஞாயிறு பகல் 11 மணிக்கு, தொமினிக்கன் குடியரசின் ஒவ்வோர் ஆயரும், தங்களது மறைமாவட்டத்தில் திருப்பலி நிறைவேற்றுவார்கள் என்றும், இத்திருப்பலி, உள்ளூர் தொலைக்காட்சி வழியாக ஒளிபரப்பப்படும் எனவும், ஆயர்களின் அறிக்கை கூறுகிறது. (Zenit)

கர்தினால் Ambongo

மேலும், ஆப்ரிக்காவின் காங்கோ குடியரசில் கொரோனா தொற்றுக்கிருமி பரவலைத் தடுப்பதற்கு அரசு உருவாக்கியுள்ள தேசிய நிதி திட்டத்தின் (FNSCC)  தலைவராக, அந்நாட்டு கர்தினால் Fridolin Ambongo அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

காங்கோவில், கோவிட்-19 கிருமி பரவலைத் தடுப்பது குறித்து, Kinshasa பேராயர் கர்தினால் Ambongo அவர்கள், சமயத் தலைவர்களுடன் கூட்டம் நடத்தியபின், அரசுத்தலைவர் Felix Tshisekedi அவர்களைச் சந்தித்து, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, தாங்கள் மேற்கொண்டுள்ள ஒருங்கிணைந்த யுக்திகளை அறிவித்தார். அதற்குப்பின், காங்கோ குடியரசின் அரசுத்தலைவர், தேசிய நிதி திட்டத்தின் (FNSCC)  தலைவராக, கர்தினால் Ambongo அவர்களை நியமித்துள்ளார் என்று செய்திகள் கூறுகின்றன.

25 April 2020, 14:00