தேடுதல்

Vatican News
மியான்மாரின் புத்தமத துறவி  Sitagu Sayadaw  திருத்தந்தைக்கு நிதியுதவி மியான்மாரின் புத்தமத துறவி Sitagu Sayadaw திருத்தந்தைக்கு நிதியுதவி 

மியான்மாரின் புத்தமத துறவி திருத்தந்தைக்கு நிதியுதவி

Sitagu Sayadaw அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, 2017ம் ஆண்டில் யாங்கூனிலும், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களை, 2011ம் ஆண்டில், வத்திக்கானிலும் சந்தித்துள்ளார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

Sitagu Sayadaw எனப்படும் மியான்மாரின் முக்கிய புத்தமத துறவி Ashin Nyanissara அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உருவாக்கியுள்ள, கோவிட்-19 அவசரகால நிதியமைப்பிற்கு, பத்தாயிரம் டாலரை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

ஏப்ரல் 16, இவ்வியாழனன்று, மியான்மாரின் Mandalay  உயர்மறைமாவட்ட பேராயர் Marco Tin Win அவர்களிடம் இந்நிதியுதவியை வழங்கியிருப்பதோடு, அந்த உயர்மறைமாவட்டத்தில் இயங்கும், கருணை இல்லங்கள் மற்றும், ஏனையோருக்கென, அரிசி, சமையல் எண்ணெய், சோயா, வெங்காயம், உப்பு போன்ற உணவுப்பொருள்களையும் வழங்கியுள்ளார்.

Sitagu Sayadaw அவர்கள், இயேசுவின் திருஇதய பேராலயத்தில் நடைபெற்ற நிகழ்வில், புத்தம், கிறிஸ்தவம், இஸ்லாம் மற்றும், இந்து மதங்களுக்குப் பொதுவான அன்பிரக்கம் என்ற பண்பின் அடையாளமாக, இந்த நன்கொடைகளை வழங்கினார் என்று யூக்கா செய்தி கூறுகிறது.

கோவிட்-19 கிருமி பரவலை தடுப்பதற்கு, ஒருமைப்பாட்டுணர்வு வழியாக, நாம் எல்லாரும் ஒன்றுசேர்ந்து பணியாற்ற வேண்டும் என்றும், Sitagu Sayadaw அவர்கள் எடுத்துரைத்தார்.

Sitagu Sayadaw அவர்களின் இந்த நன்கொடைகள் பற்றிக் கூறிய பேராயர் Tin Win அவர்கள், இந்த புத்தமதத் துறவியின் செயல், மியான்மாரிலுள்ள அனைத்து மக்களுக்கும், பல்சமய நல்லிணக்கப் பண்பையும், நன்மனம் மற்றும், தோழமையுணர்வையும் வெளிப்படுத்தியுள்ளது என்று பாராட்டினார். 

Sitagu Sayadaw அவர்கள், 2017ம் ஆண்டு நவம்பரில், மியான்மாருக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டபோது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களையும், 2011ம் ஆண்டில், வத்திக்கானில், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களையும் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாப்பிறை மறைப்பணி கழகங்கள் வழியாக, 1,110க்கும் அதிகமான மறைமாவட்டங்களுக்கு உதவி வருகிறார். இவற்றில் பெரும்பாலானவை, ஆசியா, ஆப்ரிக்கா, ஓசியானியா மற்றும், தென் அமெரிக்காவின் ஒரு பகுதியிலுள்ள மறைமாவட்டங்கள் ஆகும். (UCAN)

18 April 2020, 14:06