தேடுதல்

Vatican News
மும்பை பேராயர் கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் மும்பை பேராயர் கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் 

இயேசுவின் சிலுவையின் சிறு பகுதியைக்கொண்டு ஆசீர்

இயேசுவின் புனிதச் சிலுவையின் ஒரு சிறு பகுதி, மும்பை உயர்மறைமாவட்டத்தில் வைத்து வணங்கப்படுகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இயேசுவின் சிலுவையிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு சிறு புனித மரத் துண்டைக்கொண்டு தன் உயர்மறைமாவட்ட மக்களை, புனித வெள்ளியன்று ஆசிர்வதித்தார், மும்பை பேராயர் கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ்.

கோவிட்-19 தொற்று நோய் அச்சம் காரணமாக, மக்கள் ஒரே இடத்தில் கூடுவது தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், புனித வெள்ளி சிலுவைப்பாதை நிகழ்ச்சியை, மும்பை திருப்பெயர் பெருங்கோவிலில் விசுவாசிகள் பங்கேற்பின்றி நடத்தி, காணொளி வழியாக அதை மக்களுக்கு  வழங்கிய மும்பை கர்தினால், சிலுவைப் பாதையின் இறுதியில் இந்த ஆசீரை வழங்கினார்.

இந்தியாவில் கொரோனா தொற்றுநோய் பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரிலிருந்து இந்த புனித சிலுவை துண்டின் ஆசீர்வாதத்தை வழங்கிய கர்தினால் கிரேசியஸ் அவர்கள், சிலுவையின் புனித துண்டு, புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களின் குடும்பத்தினரால் தனக்கு 2015ம் ஆண்டு, இத்தாலியின் Brescia மறைமாவட்டத்தில் வைத்து வழங்கப்பட்டது என்றார்.

மன்னர் கான்ஸ்டண்டைனின் தாய் புனித ஹெலன் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இயேசுவின் சிலுவையை எடுத்துக்கொண்டு வரும் வழியில், அந்த புனித சிலுவையின் ஒரு பகுதி, மன்னரால் Bresciaவிற்கு வழங்கப்பட்டது. (AsiaNews)

13 April 2020, 14:30