தேடுதல்

Vatican News
காமரூன் நாட்டில் அருள்பணித்துவ திருநிலைப்பாடு காமரூன் நாட்டில் அருள்பணித்துவ திருநிலைப்பாடு  

நேர்காணல்: 57வது உலக இறையழைத்தல் ஞாயிறு

திருஅவையில் இறையழைத்தல்களைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தவும், விசுவாசிகள், தங்கள் வாழ்வில் கடவுளின் அழைப்பை நன்றியோடு கண்டுணரவும், கடவுளின் அந்த அழைப்பிற்குத் துணிவோடு, ஆகட்டும் என்று சொல்லவும், திருஅவை, அவர்களின் இதயங்களைத் தொடர்ந்து ஊக்குவித்து வருவதாக

மேரி தெரேசா: வத்திக்கான்

நல்லாயன் ஞாயிறு என அழைக்கப்படும், பாஸ்கால கால நான்காம் ஞாயிறன்று, கத்தோலிக்கத் திருஅவையில் ஒவ்வோர் ஆண்டும்,  இறையழைத்தல்களுக்காகச் செபிக்கும் உலக நாள் சிறப்பிக்கப்படுகின்றது. இந்நாளில்,   அருள்பணித்துவ மற்றும், துறவற வாழ்வைத் தேர்ந்துகொண்டவர்கள், தங்களின் இறையழைப்புக்காக ஆண்டவனுக்கு நன்றி சொல்கின்றனர் மற்றும், அவ்வாழ்வைக் கொண்டாடுகின்றனர். இந்த அழைப்பை பற்றுறுதியுடன், இறைச் சேவையில் தங்களைத் தொடர்ந்து அர்ப்பணிக்கவும் உறுதி எடுக்கின்றனர். அதேநேரம், இத்தகைய அழைத்தல்களைப் பல உள்ளங்கள் தெளிந்து தேர்வு செய்ய வேண்டுமென்றும், இந்நாளில் அவர்கள் மட்டுமல்ல, கத்தோலிக்கர் எல்லாரும் சிறப்பாகச் செபிக்கின்றனர். மே 03, வருகிற ஞாயிறன்று, 57வது இறையழைத்தல்களுக்காகச் செபிக்கும் உலக நாள் சிறப்பிக்கப்படுகின்றது. இந்நாளை முன்னிட்டு, அருள்பணி சவுரி ராஜ் அவர்கள், தனது துறவற அழைப்பு பற்றியும், இந்த உலக நாளுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள செய்தி பற்றியும் வத்திக்கான் வானொலி நேயர்களுடன் இன்று பகிர்ந்து கொள்கிறார். அருள்பணி சவுரி ராஜ் அவர்கள் மரியின் ஊழியர் சபையைச் சார்ந்தவர், மற்றும், அச்சபையின் பொது ஆலோசகர்களில் ஒருவர்.

நேர்காணல்: 57வது உலக இறையழைத்தல் ஞாயிறு

அருள்பணி சவுரி ராஜ், ம.ஊ.ச.

“வந்து பாருங்கள்” -என் வாழ்வை மாற்றிய இறைவார்த்தை

வத்திக்கான் வானோலி நேயர்கள் அனைவருக்கும் வணக்கம். 57வது உலக இறையழைத்தல் தினத்தை மே மாதம் 3 ஆம் தேதி தாய்த் திருச்சபை கொண்டாடுகின்றது. இந்தக் காலகட்டத்தில், என் இறையழைத்தல் அனுபவத்தைப் பற்றி உங்களோடு பகிர்ந்துகொள்வதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். என் இறையழைத்தலைப் பற்றிப் பேசவேண்டும் என்றால், விவிலியத்திலும், வரலாற்றிலும் பார்க்கின்ற பலரின் மனநிலைதான் எனக்கும் இருந்தது. இறையழைத்தல் பற்றிய அறியாமை, தெளிவின்மை, பயம் போன்ற உணர்வுகள் எனக்குள்ளும் இருந்தன. இத்தகைய உணர்வுகளுக்கு காரணம்:

1. என் சமூகப் பின்னணி.

2. என் குடும்பச் சூழ்நிலை.

3. என் கிறிஸ்தவ விசுவாச வாழ்க்கை.

வேலைக்காக இடம்பெயர்ந்த குடும்பங்களில் என் குடும்பமும் ஒன்று. அதனால் கிறிஸ்தவர்கள் இல்லாத ஒரு கிராமத்தில் வாழவேண்டிய சூழ்நிலை. கோவிலுக்கோ அல்லது திருப்பலிக்கோச் செல்லவேண்டுமென்றால் குறைந்தது 15 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். இப்படிப்பட்ட சமூகப் பின்னணியில், குடும்பச் சூழலில் கிறிஸ்தவ விசுவாசத்தில் வேரூன்றி வளரவேண்டுமென்றால், குடும்பத்தில் யாரேனும் ஒருவர் ஆழ்ந்த கிறிஸ்தவ நம்பிக்கை கொண்டவராக இருக்கவேண்டும். என் அம்மாவின் ஆழமான கிறிஸ்தவ விசுவாசம் என் குடும்பத்தில் அனைவரையும் இறை நம்பிக்கையிலும், அன்னை மரியாவின் மிது கொண்ட அசைக்க முடியாத பக்தியிலும் வளர்த்தெடுத்தது என்றால் அது மிகையாகாது. என் அம்மாவின் விசுவாசம்தான் எனக்குள் இறையழைத்தல் என்ற விதையை விதைத்தது மட்டுமன்றி, என்னை அறியாமலேயே இறையழைத்தல் ஆர்வத்தை என்னுள் வளரவைத்தது. இறுதியாக என் சுய சம்மதத்தோடு இறையழைத்தலுக்கு பதில் அளிக்கவும் செய்தது. நான் இறையழைத்தலை உணர்ந்ததையும், அதற்கு ஆம் என்று பதிலளித்ததையும் பற்றிப் பேசவேண்டுமென்றால் இரண்டு முக்கிய நிகழ்வுகளை நான் நினைவு கூறவேண்டும்:

முதல் நிகழ்வு என் வாழ்வில் நாடந்த ஒரு புதுமை. நான் குழந்தையாக இருந்தபோது என் வலது காதையொட்டிய கன்னம் மற்றும், கழுத்துப் பகுதியில் மூன்று கட்டிகள் இருந்ததாகவும், அவற்றில் ஒன்றை அறுவைசிகிச்சையால் நீக்க முடியாது என்றும், அதையும் மீறி செய்தால் குழந்தையின் உயிருக்கு ஆபத்தாக முடியும் என்று மருத்துவர்கள் கூறி விட்டதாகவும், இருப்பினும் வேளாங்கன்னி புனித ஆரோக்கிய மாதாவிடம் வேண்டிக்கொண்டு என் அம்மாவே அந்த கட்டியை ஊசியால் குத்தி உடைத்துவிட்டதாகவும். நான் இன்று உயிரோடு இருக்கிறேன் என்றால் என் வாழ்வில் நடந்த இந்த புதுமையே காரணம் என்றும், என் அம்மா அடிக்கடி என்னிடம் கூறுவார். மேலும், இந்த புதுமைக்குப் பிறகு என்னை மாதாவுக்கு நேர்ச்சையாக அளித்துவிட்டதாகவும், நிச்சயமாக ஒரு நாள் நான் குருவாவேன் என்று சொல்வார். ஆனால் பள்ளியில் படிக்கின்ற காலக்கட்டங்களில் குருவாக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை. இரண்டாம் நிகழ்வு எனக்கு வந்த முதல் கடிதம். நான் 12 வது வகுப்பு அரசுப் பொதுத்தேர்வினை எழுதிக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் எனக்கு மரியின் ஊழியர் சபையிலிருந்து இறையழைத்தல் முகாமிற்கு வருமாறு அழைப்புக் கடிதம் வந்தது. இதுதான் என் வாழ்நாளில் நான் பெற்ற முதல் கடிதம். இதில் என்ன ஆச்சரியம் என்றால், நான் யாருக்கும் என் முகவரியை கொடுக்கவில்லை. என் நண்பர்கள் விளையாட்டாக என் முகவரியைக் மரியின் ஊழியர் சபையின் இறையழைத்தல் ஊக்குனருக்கு கொடுத்திருக்கின்றனர். அந்த கடிதத்தில் வந்து பருங்கள் என்று எழுதியிருந்தது. வந்து பாருங்கள் என்ற கடிதத்திற்குச் சென்றுதான் பார்ப்போமே என்று வந்தேன். இதுதான் இறையழைத்தலுக்கான என் பதிலாக இருந்தது. இந்த நேரத்தில் என் அம்மாவையும் என் முகவரியை என் சம்மதமே இல்லாமல் கொடுத்த என் நண்பரையும் நன்றியோடு நினைவுகூறுகிறேன். அனைத்தும் நான் எம் மரியின் ஊழியர் சபையில் இணைந்த பின்புதான் கற்றுக்கொண்டேன். உருவாக்க காலம், என்னை ஒரு மரியின் ஊழியர் துறவற குருவாக உருவாக்கியது. 11 ஆண்டுகள் நித்திய வார்த்தைப்பாடு எடுக்க தயாரிப்பு. குருவாக திருநிலைப்படுத்தபட மேலும் 2 ஆண்டுகள்.

இந்த 13 ஆண்டுகால நீண்ட தயாரிப்பு என்னை மாற்றியமைத்தது.

படிப்பு மட்டும் தயாரிப்பல்ல, உருவாக்க காலம் என்னை

1. மனிதனாக வளர்த்தது

2. கிறிஸ்தவனாக வாழ வைத்தது

3. ஆன்மீகத்தில் வளர்த்தது

4. அறிவைப் பெருக்கியது

5. சமுதாயத்தை எதிர்கொள்ளச் சக்தியைக் கொடுத்தது

6. பணிசெய்ய கற்றுத்தந்தது

7. மரியின் ஊழியனாக என்னை மாற்றியது

சென்று பார்ப்போம் என்று துவங்கிய என் இறையழைத்தல் வாழ்க்கை பயணம், வாழ்ந்து பார்ப்போம் என்று மாறியது இந்த உருவாக்க காலத்தில்தான். உருவாக்ககாலத்தில் காற்றுக்கொண்டவற்றை இன்று என் பணிவாழ்வில் நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.

திருத்தந்தையின் செய்தி

மே மாதம் 3ஆம் தேதி சிறப்பிக்கப்படும் 57வது உலக இறையழைத்தல் தினத்தை முன்னிட்டு கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி செய்தி வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைமக்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் கடவுளின் அழைப்பை நன்றியுணர்வோடு கண்டுகொள்வதற்குத் திருஅவை உதவி செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி அனைத்து அருட்பணியாளர்களுக்கும் நன்றிகூறி, அவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில் தான் எழுதிய மடலில், வேதனை, நன்றியுணர்வு, ஊக்கப்படுத்துதல் மற்றும் இறைவனைப் போற்றுதல் என்ற நான்கு சொல்லாடல்களைப் பயன்படுத்தியதுபோல, உலக இறையழைத்தல் தினத்திற்கான செய்தியில் இறையழைத்தலின் வார்த்தைகள் என்ற தலைப்பில் நான்கு வார்த்தைகளை எடுத்துகூறி அவற்றை வாழ்வாக்கிட நம் ஒவ்வொருவரையும் அழைக்கின்றார் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், இறையழைத்தல் பயணம் என்பது ஒரு படகுப் பயணத்தைப் போன்றது என்றுகூறி இயேசுவின் சீடர்களின் படகுப் பயணத்தோடு (மத். 14: 22-33) ஒப்பிட்டு கூறியுள்ளார் திருத்தந்தை.

நன்றியுணர்வு

இறையழைத்தலின் முதல் வார்த்தை நன்றியுணர்வு. கடவுள் நம்மை அழைக்கும்போது, நாம் சேரவேண்டிய இடம் எதிரேயுள்ள கரை என்று சுட்டிக்காட்டுகிறார். படகில் பயணம் செய்ய நமக்குத் துணிச்சலைத் தருகின்றார். இறைவன் நம்மை அழைக்கும்போது, நாம் சென்றடைய வேண்டிய துறைமுகமாகவும் அவர் இருக்கிறார். நம் பயணத்தில் நம்மோடு உடன் இருந்து, பயணத்தில் வரும் சவால்களை சந்திக்கவும் நமக்கு ஊக்கமளிக்கின்றார். அலைகள் நிறைந்த கடல் நீரில்கூட நம்மை கரம்பிடித்து நடக்கச் செய்கின்றார். ஆகவே அழைத்த இறைவனுக்கும், அழைத்தல் வாழ்வில் நிலைத்திருக்க உதவிய அனைவருக்கும் நன்றிவுணர்வோடு வாழ அழைக்கிறார் திருத்தந்தை. நம் வாழ்வு என்னும் படகு புயலில் சிக்கித் தவிக்கும் நேரத்தில், நம்மை சந்திக்கவரும் ஆண்டவரின் அன்புப் பார்வையிலிருந்து பிறக்கிறது நம்முடைய இறையழைத்தல் பயணம். இறையழைத்தல் என்பது, நாமாகத் தேர்ந்துகொள்வது அல்ல, மாறாக, ஆண்டவரின் விலைமதிப்பற்ற அழைப்பிற்கு பதிலளிப்பதாகும். நன்றியுணர்வுடன் நாம் நம் இதயங்களை இறைவனுக்காகத் திறந்துவைத்து நம் வாழ்வில் கடவுளின் அழைப்பை கண்டுணர்ந்து, அவ்வழைப்பை ஏற்றுக்கொண்டு;ரூபவ் நம் பெற்றுக்கொண்ட இறையழைப்பை வாழ்வில் வாழும்போதும் வெற்றியடைவோம் என்கிறார்.

துணிவு

இறையழைத்தலின் இரண்டாவது வார்த்தை, துணிவு என்று குறிப்பிட்டு அதைப் பற்றி விளக்கியுள்ள திருத்தந்தை, இயேசு கடல்மீது நடந்துவருவதைப் பார்த்த சீடர்கள் முதலில் பேய் என்ற அச்சத்தால் அலறினர். அச்சமயத்தில் இயேசு அவர்களிடம், துணிவோடிருங்கள், நான்தான் அஞ்சாதீர்கள் (மத். 14:27) என்று சொன்னார். இயேசுவின் துணிவுதரும் இவ்வார்த்தைகளே நம் இறையழைத்தல் பயணத்தில் தொடர்ந்து நம்மோடு துணைவர வேண்டும். நம் பயணத்தை நம் வளர்ச்சியை ஆண்டவர் நமக்கென குறித்துவைத்த பாதையைத் தேர்ந்தெடுக்கையில், சில பேய்கள் நம் இதயங்களைத் துன்புறுத்துகின்றன. திருமணம், திருப்பணி குருத்துவம், அர்ப்பணிக்கப்பட்ட துறவு வாழ்வு போன்ற வாழ்வின் நிலைகளை நாம் ஏற்கும்போது இந்த அழைப்பு எனக்குரியதல்ல. இது சரியான பாதையா? கடவுள் என்னிடம் இதைதான் எதிர்பார்க்கிறாரா? போன்ற எதிர்மறை எண்ணங்கள் நம்பிக்கையின்மை என்ற பேயிடம் இருந்து வருகிறது என்று திருத்தந்தை கூறுகிறார். இத்தகைய பேய்களை இயேசு நம்மோடு இருக்கிறார் என்ற துணிவோடு துரத்தியடிக்கவேண்டும் என்று ஊக்கப்படுத்துகிறார் திருத்தந்தை.

சோர்வு

இறையழைத்தலின் மூன்றாவது வார்த்தை சோர்வு. ஒவ்வொரு அழைப்பும் தன்னகத்தே தனக்கென்று கடமைகளைக் கொண்டிருக்கின்றது. நம் வாழ்வில் சோர்வோ அச்சமோ நம்மை மூழ்கடிக்கையில் இயேசு நமக்கு தன் கரங்களை நீட்டுகின்றார். நம் பெற்றுக்கொண்ட அழைப்பை மகிழ்வோடும், மனஉறுதியோடும் வாழ்வதற்குத் தேவையான ஆர்வத்தை அவர் அருளுகின்றார். இயேசு தன் சீடர்களின் படகில் ஏறியதும் காற்று அடங்கியது. அதேபோல் நம் வாழ்வின் சோர்வு, சோதனை போன்ற புயல் நேரங்களில் இயேசு நம்மோடு இருக்கிறார் என்ற நம்பிக்கை நம்மை வழிநடத்தவேண்டும் என்கிறார் திருத்தந்தை.

சமுதாயத்தில் முக்கியமான பொறுப்புக்களில் இருப்போர், குறிப்பாக திருப்பணி குருத்துவம் மற்றும் அர்ப்பணிக்கப்பட்ட துறவு வாழ்வை மேற்கொண்டுள்ளோர், பணிச்சுமையால் தனிமையை உணரக்கூடும். வருங்காலம் பற்றிய அச்சம், நிச்சயமற்ற மற்றும் பதுகாப்பற்ற நிலை போன்ற வாழ்வின் சோர்வுகள் இறையழைப்பின் ஆர்வச்சுடரை மெல்ல மெல்ல அணைக்கக்கூடும். அந்நேரங்களில் இயேசுவின் சொற்களை இதயத்தில் இருத்துமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அறிவுறுத்துகிறார்.

போற்றுதல்

புயலால் அலைக்கழிக்கப்படும் கடல் அலைகள் நடுவிலும், நம் வாழ்வு இறைவனைப் போற்றுவதற்கு எப்போதும் தயாராக இருக்குமாறு மாறவேண்டும். இறைவனைப் போற்றுவதே இறையழைத்தலின் நான்காவது மற்றும் இறுதி வார்த்தை என்று திருத்தந்தை தமது செய்தியில் தெரிவித்துள்ளார். இறைவனின் அழைப்பிற்கு ஆகட்டும் என்று பதில் சொன்ன அன்னை மரியாவின் மனநிலை அனைவரிலும் இருக்கவேண்டும் என்கிறார். கடவுளின் கருணைக்கண் பார்வை தன்மேல் பட்டதற்கு நன்றியுணர்வு உள்ளவராகவும், பயம் மற்றும் அலைகழிப்புக்களுக்கு மத்தியிலும் நம்பிக்கையோடும், துணிச்சலோடும் இறைவனின் அழைப்பை ஏற்று தனது வாழ்வையே இறைவனைப் போற்றிப் பாடும் ஓர் உன்னத கீதமாக மாற்றியவர் அன்னை மரியா. இறைமக்கள் ஒவ்வொருவரும் இறைவன் தங்களுக்குக் கொடுத்த அழைப்பை நான்றியுணர்வோடு கண்டுணரவும், அதை துணிவோடு ஏற்றுக்கொண்டு ஆம் என்று பதில் அளிக்கவும், இயேசுவில் விசுவாசம் கொண்டு சோர்வை வெற்றிகொள்ளவும், இறுதியாக தங்களது வாழ்வை இறைவனுக்கும், மக்களுக்கும், உலகிற்கும் உகந்த உன்னத புகழ் கீதமாக அர்ப்பணிக்க திருஅவை உதவி செய்ய வேண்டும் என்ற அழைப்போடு தனது செய்தியை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

முடிவுரை

இறுதியாக என்னுடைய இறையழைத்தல் வாழ்க்கைப் பயணத்தில் இந்த நான்கு வார்த்தைகளையும் நான் நன்கு உணர்திருக்கிறேன் என்று மகிழ்ச்சியடைகிறேன். திருத்தந்தையின் இந்த இறையழைத்தலின் வார்த்தைகள் இன்றைய இளைஞர்களுக்கும் இளம் பெண்களுக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் வந்து பாருங்கள் என்ற அழைப்பை உங்கள் முன் வைக்கிறேன். என் இறையழைத்தல் அனுபவத்தை திருத்தந்தையின் செய்தியோடு சேர்த்து உங்களுடன் பகிர்ந்துகொள்ள வாய்ப்பளித்த வத்திக்கான் வானொலிக்கும், இதுவரை என் உரையைக் கேட்டுக்கொண்டிருந்த அன்பு நேயர்களுக்கும் நன்றி. (அருள்பணி சவுரி ராஜ், ம.ஊ.ச.)

30 April 2020, 14:26