தேடுதல்

Vatican News
உயிர்த்த கிறிஸ்து உயிர்த்த கிறிஸ்து 

இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா செய்தி

மதம், இனம், மொழி, நிறம் வேறுபாடின்றி மனுக்குலம் மீட்படைய தம்மையே கல்வாரியில், சிலுவையில் தியாகப் பலியாக்கிய இயேசு, தான் முன்னர் உரைத்தபடியே மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்

மேரி தெரேசா: வத்திக்கான் & அருள்பணி முனைவர் பிரின்ஸ் பிராங்கிளின்

எம் வத்திக்கான் வானொலியின் அன்பு இதயங்கள் எல்லாருக்கும் இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா நல்வாழ்த்துக்கள். மதம், இனம், மொழி, நிறம் வேறுபாடின்றி மனுக்குலம் மீட்படைய தம்மையே கல்வாரியில், சிலுவையில் தியாகப் பலியாக்கிய இயேசு, தான் முன்னர் உரைத்தபடியே மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். எனவே அகமகிழ்வோம், அக்களிப்போம், அல்லேலூயா எனப் பாடுவோம்.

இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா செய்தி

இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா செய்தி வழங்குகிறார், அருள்பணி முனைவர் பிரின்ஸ் பிராங்கிளின். உரோம் தூய பவுல் குருத்துவக் கல்லூரியில் உதவித் தலைவராகப் பணியாற்றும் அருள்பணி முனைவர் பிரின்ஸ் அவர்கள், வாரனாசி மறைமாநிலத்தில் மறைப்பணியாற்ற தன்னை அர்ப்பணித்திருப்பவர். இவர் பிறப்பால் கோட்டாறு மறைமாநிலத்தைச் சார்ந்தவர். இயேசுவின் பிறப்பைப் போலவே அவரது இறப்பும், உயிர்ப்பும் நமக்கு மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியாகும். இயேசு உயிர்த்து விட்டார். நீதியின் சாவு நிரந்தரமல்ல என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. இயேசுவின் உயிர்ப்பில், இறையாட்சி மலர்ந்தது, புதிய விடியல் உதயமாகிறது. இயேசுவின் உயிர்ப்பு, அவரில் வாழ்கின்ற நம் ஒவ்வொருவருக்கும், புது வாழ்வு, புது படைப்பு, மற்றும், புதிய மதிப்பீடுகளைத் தருகின்றது. ஒவ்வொரு உயிர்ப்பு விழாவும், நம்மில் நல்ல பல மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் நாமும் இயேசுவோடு உயிர்ப்போம். குறிப்பாக, கொரோனா தொற்றுக் கிருமி பரவியுள்ள இக்காலக்கட்டத்தில், எல்லா நாடுகளிலும், பலருக்கு பல்வேறு முறைகளில் உதவிகள் தேவைப்படுகின்றன. சமுதாய ஊரடங்கு முறை கடைப்பிடிக்கப்பட்டுவரும் இந்நாள்களில், நம் அன்புச் சேவை, தியாக உள்ளம், பொருளுதவி, நிதியுதவி போன்றவை தேவைப்படுகின்றன. உறவுகளின் துணையின்றி தனிமையில் வாழ்கின்ற மக்களுக்கு, குறிப்பாக, வயதானவர்களுக்கு நம் ஆறுதலும் உதவியும் கட்டாயமாகிறது. இயேசுவின் விழுமியங்களை வாழ்வாக்குவோம், அவற்றின் வழியாக இயேசுவின் உயிர்ப்புக்குச் சான்று பகர்வோம். இயேசு ஆண்டவர் நம்முடன், எல்லா நேரங்களிலும் நம்மைவிட்டு அகலாமல் இருக்கிறார். குறிப்பாக கோவிட்-19 அச்சுறுத்தல் காலத்தில், அஞ்சாதே, நான் உன்னோடு இருக்கிறேன் என்று சொல்கிறார். எனவே அவரின் அரவணைப்பில் அடைக்கலம் புகுவோம். உயிர்த்த இயேசு வழங்கும் அன்பு, அமைதி, சமாதானம் நம் எல்லார் உள்ளங்களையும் நிறைப்பதாக.

11 April 2020, 13:13