தேடுதல்

Vatican News
புலம்பெயர்வோர் புலம்பெயர்வோர்  (AFP or licensors)

புலம்பெயர்ந்தோர் பாதுகாப்பாக துறைமுகம் அடைய வழியமைக்க..

மத்தியதரைக் கடலில், அண்மையில், 47 பேர், பல நாள்களாக, மிகவும் ஆபத்தான நிலையில் கைவிடப்பட்டு, பின்னர் அவர்கள், மால்ட்டா நாட்டு உதவியுடன் லிபியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

புலம்பெயர்வோர் மத்தியதரைக் கடலிலே உயிரிழக்குமாறு விட்டுவிடுவதற்கு, கொரோனா கொள்ளை நோய்க்கு எதிரான நடவடிக்கை, ஒரு சாக்குப்போக்காக அமைந்துவிடக் கூடாது என்று, ஐரோப்பிய கத்தோலிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.

கடந்த சில நாள்களாக, EU எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு துறைமுகத்திற்கு அருகில், புலம்பெயர்ந்தோர் பலர், தக்க நேரத்திலும், பாதுகாப்பாகவும் கரையை வந்தடையவில்லை என்பதைக் குறிப்பிட்டுள்ள ஆயர்கள், இம்மக்களுக்குப் பாதுகாப்பு வழங்க, ஐரோப்பிய ஒன்றியத்தைச் சார்ந்த நாடுகள் மத்தியில், ஒருமைப்பாட்டுடன்கூடிய, செயல்திட்ட ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்படுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆயர்கள் பேரவையின் (COMECE)  கூட்டமைப்பின் புலம்பெயர்ந்தோர் பணிக்குழு, ஏப்ரல் 24, இவ்வெள்ளியன்று வெளியிட்ட அறிக்கையில்,  மத்தியதரைக் கடலில், அண்மையில், 47 பேர், பல நாள்களாக, மிகவும் ஆபத்தான நிலையில் கைவிடப்பட்டு, பின்னர் அவர்கள், மால்ட்டா நாட்டு உதவியுடன் லிபியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளது.  

இந்நிலை குறித்து, மால்ட்டா ஆயர்களும், கவலை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளதைக் குறிப்பிட்டுள்ள அப்பணிக்குழு, புகலிடம் தேடும் இம்மக்கள், பாதுகாப்பாகக் கரைக்கு வந்துசேருவதற்கு, ஐரோப்பிய ஒன்றியம், தனது 27 உறுப்பு நாடுகளுக்கு ஆதரவு வழங்குமாறு வலியுறுத்தியுள்ளது.

கடலில் காப்பாற்றப்பட்ட மக்கள், பாதுகாப்பான துறைமுகத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்ற, உலகளாவிய கடல் நிறுவனத்தின், கடலில் பயணம் மேற்கொள்வோருக்குப் பாதுகாப்பு வழங்கும் பணிக்குழுவின் விதிமுறையை, COMECE அமைப்பின் பொதுச் செயலர், Manuel Barrios Prieto அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்

25 April 2020, 13:56