தேடுதல்

Vatican News
மியான்மார் கர்தினாலுடன் கூட்டுத்திருப்பலி மியான்மார் கர்தினாலுடன் கூட்டுத்திருப்பலி 

கோவிட்-19 தடுப்பு நடவடிக்கையில் அரசுடன் ஒத்துழைப்பு

மியான்மார் அரசின் கோவிட்-19 பரவலைத் தடுக்கும் நடவடிக்கையில் ஒத்துழைப்பு வழங்கும் விதமாக, திருஅவைத் தலைவர்கள், அருள்பணித்துவ பயிற்சி கல்லூரிகள் உட்பட, கத்தோலிக்க மையங்களை வழங்குவதற்கு முன்வந்துள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மியான்மாரில் கொரோனா தொற்றுக்கிருமியால் தாக்கப்பட்டவர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களை வைத்துக் கண்காணிக்கும் மருத்துவ மையங்களாக, கத்தோலிக்கத் திருஅவையின் இடங்களை வழங்க முன்வந்துள்ளது, தலத்திருஅவை.

மியான்மார் அரசின் கோவிட்-19 பரவலைத் தடுக்கும் நடவடிக்கையில் ஒத்துழைப்பு வழங்கும் விதமாக, திருஅவைத் தலைவர்கள், அருள்பணித்துவ பயிற்சி கல்லூரிகள் உட்பட, கத்தோலிக்க மையங்களை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளனர்.   

யாங்கூன் பேராயர் கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தேசிய ஒத்துழைப்பு குழு, அந்நாட்டு ஆயர்கள் அனைவருக்கும் விடுத்துள்ள அறிக்கையில், மருத்துவக் கண்காணிப்பு மையங்களைத் தயார் செய்யுமாறு கேட்டுக்கொணன்டுள்ளது.

அதோடு, தங்கள் மறைமாவட்டங்களில், இக்கொள்ளை நோய் தடுப்பு மற்றும் அது குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அக்குழு வலியுறுத்தியுள்ளது.

மியான்மாரில் 139 பேர் கோவிட்-19 கிருமியால் தாக்கப்பட்டுள்ளனர், மற்றும், இவர்களில் ஐந்து பேர் இறந்துள்ளனர் என்று, யூக்கா செய்தி கூறுகிறது. (UCAN)

பாக்தாத் அருள்பணியாளர்கள்

மேலும், ஈராக்கில், இப்போதைய கொரோனா தொற்றுக் கிருமி நெருக்கடி காலத்தில் மிகவும் துன்புறும் ஏழை மக்களுக்கென, பாக்தாத் நகர அருள்பணியாளர்கள் அனைவரும் தங்களின் ஊதியங்களை நன்கொடையாக வழங்குவதற்கு தீர்மானித்துள்ளனர் என்று ஆசியச் செய்தி கூறுகிறது.

பாக்தாத் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் லூயிஸ் சாக்கோ அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அருள்பணியாளர்கள், இவ்வாறு கூறியுள்ளனர். 

ஈராக்கில் 1677 பேர் கோவிட்-19 கிருமியால் தாக்கப்பட்டுள்ளனர், இவர்களில் 83 பேர் இறந்துள்ளனர் மற்றும், 1,171 பேர் குணமடைந்துள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன. (AsiaNews)

25 April 2020, 13:48