தேடுதல்

Vatican News
புனித திருத்தந்தை 6ம் பவுல் புனித திருத்தந்தை 6ம் பவுல் 

சாம்பலில் பூத்த சரித்திரம்: 20ம் நூற்றாண்டு திருத்தந்தையர்-20

புனித திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், மக்களின் புலம்பெயர்வு பிரச்சனை, பொருளியக் கோட்பாடு, மார்க்சீய கோட்பாடு போன்றவற்றைக் களைவதிலும், நற்செய்தி அறிவிப்பிலும் புதிய முறைகளைக் கையாண்டார்.

மேரி தெரேசா: வத்திக்கான்

புனித திருத்தந்தை 6ம் பவுல்-2

புனித திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், இத்தாலியின் பிரேஷா மாநிலத்தில், கொன்சேசியோ (Concesio, Brescia) என்ற கிராமத்தில், 1897ம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி, குடும்பத்தில் இரண்டாவது குழந்தையாகப் பிறந்தார். இவரது தந்தை ஜியோர்ஜோ மொந்தினி அவர்கள் வழக்கறிஞர், பத்திரிகையாளர், கத்தோலிக்க நற்பணி கழகத்தின் தலைவர், மற்றும், இத்தாலிய நாடாளுமன்ற உறுப்பினர். இவரது தாய் Giudetta Alghisi அவர்கள், பிரபுக்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரின் இரு சகோதரர்களில் ஒருவரான பிரான்செஸ்கோ மொந்தினி அவர்கள், மருத்துவர். மற்றொரு சகோதரர் லோதோவிக்கோ மொந்தினி அவர்கள், வழக்கறிஞர் மற்றும், அரசியல்வாதி. புனித திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், ஜொவான்னி பத்திஸ்தா என்ரிக்கோ அந்தோனியோ மரிய மொந்தினி என்ற பெயரால் திருமுழுக்குப் பெற்றார். அறிவிலும், செல்வத்திலும் சிறந்து விளங்கிய குடும்பத்தில் பிறந்த திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், 1916ம் ஆண்டில் அருள்பணித்துவ பயிற்சி இல்லத்தில் இணைந்து, 1920ம் ஆண்டு மே மாதம் 19ம் தேதி பிரேஷா மறைமாவட்டத்திற்காக அருள்பணியாளராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார். மிலானில் திருஅவை சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர், உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகம் மற்றும், சப்பியென்சா பல்கலைக்கழகங்களில், மெய்யியல், சட்டம் ஆகிய இரு துறைகளில் முனைவர் பட்டங்களைப் பெற்றார். இவர், கிறிஸ்தவக் கோட்பாடுகளை மையப்படுத்திய கலாச்சாரத்தை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில், 1925ம் ஆண்டில் பிரேஷாவில், Morcelliana நூல் பதிப்பகம் ஆரம்பிக்கப்பட உதவினார்.

அருள்பணி ஜொவான்னி பத்திஸ்தா மொந்தினி அவர்கள், 1923ம் ஆண்டில் போலந்து நாட்டு வார்சா நகரில் திருப்பீட தூதரகத்தில் பணியாற்ற நியமனம் செய்யப்பட்டார். அங்கு இவர் ஓராண்டு பணியாற்றினார். அதற்கு அடுத்த ஆண்டில் அவர் வத்திக்கானுக்குத் திரும்பி, திருப்பீட செயலகத்தில் பணியாற்றத் தொடங்கினார். இவர், அச்சமயத்தில் 1931ம் ஆண்டில், பாப்பிறை திருப்பீட தூதர்கள் பயிற்சி நிறுவனத்தில் வரலாற்றுப் பாடம் கற்பிக்க நியமிக்கப்பட்டார். திருப்பீட செயலகத்தில் இவர் பணியாற்றுகையில், திருத்தந்தை 12ம் பயஸ் அவர்களின் விருப்பத்தின்பேரில், வத்திக்கானில், போர்க்கால கைதிகள் மற்றும், புலம்பெயர்ந்தோருக்கு ஒரு தகவல் மையத்தைத் தொடங்கினார். இந்த மையம், 1939ம் ஆண்டு முதல், 1947ம் ஆண்டு வரை, காணாமல்போனவர்கள் பற்றிய ஏறத்தாழ ஒரு கோடி தகவல்களைப் பெற்றது. அதோடு, ஒரு கோடியே 10 இலட்சத்திற்கு அதிகமான பதில்களையும் அனுப்பியது. அருள்பணி மொந்தினி அவர்கள், அரசியலில் அத்துமீறி தலையிடுகிறார் என்று, இத்தாலியில் பெனித்தோ முசோலினி அரசால் பலமுறை தாக்கப்பட்டார். ஆனால், அருள்பணி மொந்தினி அவர்களுக்கு, திருப்பீடம் எப்போதும் ஆதரவாகவே இருந்தது.

அருள்பணி ஜொவான்னி மொந்தினி அவர்கள், போலந்து நாட்டில் திருப்பீட தூதரத்தில் பணியாற்றிய அனுபவம் பற்றி இவ்வாறு எழுதியுள்ளார். அக்காலக் கட்டத்தில் அந்நாட்டில் நிலவிய தேசியவாதம், வெளிநாட்டவரை, குறிப்பாக, பொதுவான எல்லைகளைக் கொண்டிருக்கும் வெளிநாட்டு மக்களை, பகைவர்களாக நடத்துகின்றது. அருகிலுள்ள நாட்டிற்கு இடர்விளைவித்து தனது நாட்டை விரிவுபடுத்தவும் முயற்சிக்கின்றது. மக்களும், கூண்டுக்குள் அடைபட்ட உணர்வில் வளர்கின்றனர். அமைதி என்பது, போரிடும் நாடுகளுக்கு இடையே இடம்பெறும் ஒரு தற்காலிக ஒப்பந்தமாக மாறுகின்றது என்று அருள்பணி மொந்தினி அவர்கள் எழுதியுள்ளார். தனக்கு இப்பணி எப்போதுமே மகிழ்வாக இல்லாதிருந்தாலும், பயனுள்ளதாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபின், இவர் போலந்திற்கு அன்னை மரியா திருப்பயணம் மேற்கொள்ள விரும்பினார். ஆனால் அக்காலக்கட்டத்தில் போலந்தை ஆட்சி செய்த கம்யூனிச அரசு அனுமதியளிக்க மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அருள்பணி மொந்தினி அவர்கள், திருத்தந்தை 12ம் பயஸ் அவர்களின் விருப்பத்தின்பேரில், அடக்குமுறைகளுக்கு அஞ்சி மறைந்து செயல்பட்ட பெண் துறவு சபை இல்லங்கள், பங்குத்தளங்கள், அருள்பணித்துவ பயிற்சிக் கல்லூரிகள், மற்றும், கத்தோலிக்கப் பள்ளிகளுக்கு உதவும் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தார். இவர், பாப்பிறை பிறரன்பு அமைப்பையும் உருவாக்கினார். இந்த அமைப்பு, 2ம் உலகப் போரினால் துன்புற்ற பெருமளவான உரோம் மக்களுக்கும், மற்றவர்களுக்கும், தங்குமிடம், உணவு, மற்ற பொருளாதார உதவிகளையும் வழங்கியது. இந்த அமைப்பு, உரோம் நகரில் மட்டும், 1944ம் ஆண்டில் ஏறத்தாழ இருபது இலட்சம் பேருக்கு இலவசமாக உணவு வழங்கியது. போரினால் புலம்பெயர்ந்தோருக்கு வத்திக்கான் நகரைத் திறந்து விட்டதுபோல, காஸ்தெல்கந்தோல்ஃபோ பாப்பிறை மாளிகையும் திறந்துவிடப்பட்டது. இந்த மாளிகையில் மட்டும், ஏறத்தாழ 15 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டு உதவிகளும் வழங்கப்பட்டனர் என்று, வரலாற்று ஏடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.  

29 April 2020, 14:36