தேடுதல்

Vatican News
புனித திருத்தந்தை 23ம் யோவான் புனித திருத்தந்தை 23ம் யோவான்  

சாம்பலில் பூத்த சரித்திரம்: 20ம் நூற்றாண்டு திருத்தந்தையர்-17

திருத்தந்தை 23ம் யோவான். தான் சொல்லியபடி, 1962ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தைக் கூட்டினார். ஆயினும் அதன் நிறைவை இவர், விண்ணகத்தில் இருந்தபடியே கண்டார்

மேரி தெரேசா: வத்திக்கான்

புனித திருத்தந்தை 23ம் யோவான் (ஜான்)-4

திருத்தந்தை 23ம் யோவான் அவர்கள் பெயரைச் சொன்னாலே, நவீன உலகில் முத்திரை பதித்த, இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கமே பலரின் நினைவுகளில் நிழலாடும். 1958ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி திருத்தந்தையாகப் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை 23ம் யோவான் அவர்கள், தலைமைப் பணியைத் தொடங்கிய மூன்று மாதங்களுக்குள், உரோம் மறைமாவட்டத்திற்கு, ஒரு மாமன்றத்தையும், உலகளாவிய திருஅவைக்கு ஒரு பொதுச் சங்கத்தையும் கூட்டவும், திருஅவை சட்டத்தை சீரமைக்கவும் விரும்புவதாக அறிவித்தார். உரோமன் கத்தோலிக்கத் திருஅவையில், 21வது பொதுச் சங்கம் கூட்டப்படும் என்று, 1959ம் ஆண்டு சனவரி 25ம் தேதி அவர் அறிவித்தார். இப்பொதுச் சங்கம், உரோமன் கத்தோலிக்கத் திருஅவை வரலாற்றில், 92 ஆண்டுகளுக்குப்பின், முதல்முறையாக நடைபெற்றதாகும். இதன் வழியாக பிற கிறிஸ்தவ சபைகளோடு ஒரு பிணைப்பு ஏற்படவும் இத்திருத்தந்தை வழியமைத்தார். இது, கத்தோலிக்கத் திருஅவை வரலாற்றில், வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் நடைபெற்ற இரண்டாவது பொதுச் சங்கமாகும். 1963ம் ஆண்டிலேயே, இவ்வளவு விரைவில் இத்தகைய ஒரு பிரமாண்டமான பொதுச்சங்கத்தைக் கூட்டுவது இயலாத காரியம் என்று, வத்திக்கான் அதிகாரி ஒருவர் திருத்தந்தையிடம் கூறினார். அப்படியானால், 1962ம் ஆண்டிலே அதனை கூட்டிவிடுவோம் என்று சொல்லி, அதற்கு செயலுரு கொடுத்தவர், திருத்தந்தை 23ம் யோவான். தான் சொல்லியபடி, 1962ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தைக் கூட்டினார். ஆயினும் அதன் நிறைவை இவர், விண்ணகத்தில் இருந்தபடியே கண்டார். இப்பொதுச் சங்கம், புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களின் தலைமைப்பணிக் காலத்தில், 1965ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவுற்றது.

இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம்

இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம், உரோமன் கத்தோலிக்கத் திருஅவைக்கும், நவீன உலகுக்கும் இடையே, முற்றிலும் ஒரு புதிய உரையாடலைத் துவக்கி வைத்தது என்று சொன்னால் மிகையாகாது. 1962ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில், உலகின் 2,500 ஆயர்கள், வல்லுனர்கள், வாக்களிக்கும் அதிகாரமின்றி, உலகிலுள்ள பெரிய கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகள் என, ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் மற்றும், பொதுநிலையினர் கூடியிருக்க, அப்பொதுச் சங்கத்தை ஆரம்பித்து வைத்தார், திருத்தந்தை 23ம் யோவான். அவர் ஆற்றிய தொடக்கவுரையில், இச்சங்கம், தூய ஆவியாரின் தூண்டுதலால் மட்டுமே கூட்டப்பட்டது என்று கூறினார். தான் முழு மனித சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டுள்ளதாகவும், உலகில் ஒற்றுமையை அதிகமாகக் கொணர்வதற்கு ஒரு வழியாக, கிறிஸ்தவ சபைகளுக்கு இடையேயும், குறிப்பாக, யூதர்களோடும், மற்ற மதத்தினரோடும் ஒன்றிப்பு நோக்கி புதிய முயற்சிகள் எடுக்க விரும்புவதாகவும் திருத்தந்தை அறிவித்தார். அனைத்து கிறிஸ்தவர்களையும் பாரபட்சமின்றி ஏற்பதில் புதிய ஆர்வம், புதிய மகிழ்வு மற்றும், அமைதியான மனநிலை, இக்காலத்திற்குத் தேவை என்றார். கீழ்ப்படிதலால் விசுவாசிகள் ஏற்கும் சில மாற்ற இயலாத கோட்பாடுகளுக்கு, காலத்திற்கேற்ற வார்த்தைகளில் மீள்உருவம் கொடுப்பது அவசியம் என்றார் அவர். திருஅவை, உண்மையிலேயே, அதிகமதிகமாக, ஆன்மீகத் துடிப்புக்கொண்டதாய் மாறுவதைக் காண விழைவதாகக் கூறினார். திருஅவையில், புதிய பெந்தக்கோஸ்துக்காக, தூய ஆவியாரின் வருகைக்காக அவர் செபித்தார். உலகுக்கும், அதன் உண்மையான தேவைகளுக்கும் திறந்த உள்ளம்கொண்ட, அதிகமான மறைப்பணிகள் இடம்பெறும் திருஅவைக்காகவும் செபித்தார், திருத்தந்தை 23ம் யோவான்.

இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் முதல் நாள் அமர்வில், அச்சங்கத்தில் சமர்ப்பிக்கப்படும் விவகாரங்கள் குறித்து பணியாற்ற பல்வேறு பணிக்குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த முதல் நாள் அமர்வு முடிந்த அன்று இரவில், வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் திரளாகக் கூடியிருந்த மக்கள், திருத்தந்தை 23ம் யோவான் அவர்களை, அவரது அறையின் ஜன்னல் வழியாகக் காண வேண்டுமென்ற விருப்பத்தை சப்தம்போட்டு தெரிவித்துக்கொண்டிருந்தனர். திருத்தந்தையும் மக்களின் விருப்பத்தை ஏற்று, ஜன்னல் வழியாக மக்களிடம் பேசினார். நீங்கள் வீடுகளுக்குச் சென்று உங்கள் பிள்ளைகளுக்கு கட்டிஅணைத்து முத்தம் கொடுங்கள். அந்த முத்தம் திருத்தந்தையிடமிருந்து வந்தது எனச் சொல்லுங்கள் என்று கூறினார். இந்த குறுகிய உரை, பின்னாளில், 'நிலவின் உரை' என்று அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் முதல் கட்ட அமர்வு, 1962ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி ஆடம்பர விழாவுடன் முடிவடைந்தது. அடுத்த கட்ட அமர்வு, 1963ம் ஆண்டு மே மாதம் 12ம் தேதி முதல், ஜூன் மாதம் 29ம் தேதி வரை நடைபெறும் என 1962ம் ஆண்டு நவம்பர் மாதம் 12ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த முதல் கட்ட அமர்வு முடிவடைந்த நிகழ்வில், திருத்தந்தை 9ம் பயஸ் அவர்களை அருளாளராகவும், பின்னர் புனிதராகவும் அறிவிக்க விரும்புகிறேன் என்ற தன் ஆவலை அவர் வெளியிட்டார். திருத்தந்தை 9ம் பயஸ் அவர்களின், புனிதமான மற்றும், மகிமையான நினைவுகள் எப்போதும் என்னில் இருக்கின்றன. இத்தகைய புனிதமான மனிதரை, புனிதராக அறிவிக்க, தான் தகுதியற்றவன் என்று, திருத்தந்தை 23ம் யோவான் அவர்கள் கூறினார்.

இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம், திருஅவை கோட்பாடுகள் மற்றும், விசுவாசம் சார்ந்த விவகாரங்களில், பெரிய மற்றும், சிறிய சீர்திருத்தங்களைக் கொணர்ந்தது. கத்தோலிக்கர், பிற கிறிஸ்தவ சபைகளுக்காக இறைவேண்டல் செய்ய ஊக்கப்படுத்தப்பட்டனர். திருஅவையில் ஆயர்களுக்கு புதிய அதிகாரம் வழங்கப்பட்டது.  திருப்பலியில் இலத்தீனைத் தவிர, மற்ற மொழிகளும் பயன்படுத்தப்பட அனுமதியளிக்கப்பட்டது உட்பட, பல்வேறு சீர்திருத்தங்கள் இடம்பெற்றன. 1962ம் ஆண்டுக்கும், 1965ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் நடந்த நான்கு அமர்வுகளில், 16 கொள்கைத்தொகுப்புகள் தயாரிக்கப்பட்டன. இவை, இன்று நாம் காணும் உரோமன் கத்தோலிக்கத் திருஅவையின் அடித்தளமாக கருதப்படுகின்றன. இப்பொதுச் சங்கத்தின் அறிக்கைகள், ஒப்புரவை அதிகம் வலியுறுத்தியதால், இது, போருக்குப் பின்னான ஐரோப்பாவிற்கு, மிகவும் முக்கியமானதாக, பெரிய மாற்றத்தைக் கொணர்வதாக வல்லுனர்கள் கூறுகின்றனர்.

08 April 2020, 12:39