தேடுதல்

Vatican News
'அட்சயம்' என்ற பிறரன்பு அமைப்பினரின் பசிபோக்கும் பணி 'அட்சயம்' என்ற பிறரன்பு அமைப்பினரின் பசிபோக்கும் பணி 

விவிலியத்தேடல்: அப்பம் பகிர்ந்தளித்த மற்றொரு புதுமை 1

"உண்பதற்கு இவர்களிடம் எதுவும் இல்லை; இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிடவும் நான் விரும்பவில்லை" என்று கூறி, அவர்களுடைய பசியைப் போக்க உணவளித்த இயேசுவின் புதுமை, இன்றும் நம்மிடையே தொடர்கிறது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

அப்பம் பகிர்ந்தளித்த மற்றொரு புதுமை 1

சிலுவையில் அறையப்பட்ட நிலையில், இயேசு கூறிய இறுதி ஏழு வாக்கியங்களை, தவக்காலத்தின் ஏழு விவிலியத் தேடல்களில் நாம் சிந்தித்து வந்தோம். தவக்காலத்தின் பெரும் பகுதியை, குறிப்பாக, புனித வாரத்தை, நாமும் கல்வாரியில் கழித்ததைப் போன்ற உணர்வு நமக்கு உள்ளது.

மரணமும், கல்லறையும் நிரந்தர முடிவுகள் அல்ல என்பதைப் பறைசாற்ற உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் வெற்றியை, உயிர்ப்புக் காலத்தில் கொண்டாடி வருகிறோம். கொரோனா தொற்றுக்கிருமி உருவாக்கியுள்ள மரணங்களையும், கல்லறைகளையும் முடிவுக்குக் கொணரும் புதுமையை, உயிர்த்த ஆண்டவரிடமிருந்து எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இத்தருணத்தில், நாம் மீண்டும், நம் விவிலியத்தேடல்களில் இயேசு ஆற்றியப் புதுமைகளை சிந்திப்பது, நமக்குக் கூடுதல் நம்பிக்கையை வழங்கும் என்ற உணர்வுடன், நம் தேடல்களைத் தொடர்வோம்.

கல்வாரியில் இயேசு கூறிய ஏழு வாக்கியங்களில் நம் தேடல்களை மேற்கொள்வதற்கு முன், மத்தேயு, மாற்கு ஆகிய இரு நற்செய்திகளில் பதிவாகியிருந்த ஒரு பொதுவான புதுமையில் நாம் தேடல்களை மேற்கொண்டிருந்தோம். கானானியப் பெண், அல்லது, சிரிய பெனிசிய இனத்தைச் சேர்ந்த கிரேக்கப்பெண் ஒருவரின் மகளை இயேசு குணமாக்கிய புதுமையை தவக்காலத்திற்கு முன் நாம் சிந்தித்து வந்தோம். அந்தப் புதுமையைத் தொடர்ந்து, மத்தேயு, மாற்கு ஆகிய இரு நற்செய்தியாளர்களும் பதிவு செய்துள்ள அடுத்த பொதுவான புதுமை, இயேசு, 4000த்திற்கும் அதிகமான மக்களுக்கு அப்பத்தைப் பகிர்ந்தளித்த புதுமை. மத்தேயு 15ம் பிரிவிலும், (மத்தேயு 15:32-39) மாற்கு 8ம் பிரிவிலும் (மாற்கு 8:1-13) இப்புதுமை கூறப்பட்டுள்ளது.

இயேசு ஆற்றியதாக, நான்கு நற்செய்திகளில் பதிவு செய்யப்பட்டுள்ள புதுமைகளின் எண்ணிக்கை 35 என்பது, பொதுவான கருத்து. எந்த ஒரு நற்செய்தியாளரும், அனைத்துப் புதுமைகளையும் ஒரே நூலில் தொகுத்துத் தரவில்லை. ஒரே ஒரு புதுமை மட்டுமே, நான்கு நற்செய்திகளிலும் பதிவாகியுள்ளது. அதுதான், இயேசு, 5000த்திற்கும் அதிகமான மக்களுக்கு உணவளித்தப் புதுமை - (மத். 14:13-21; மாற். 6:30-44; லூக். 9:10-19; யோவா. 6:1-14).

இந்தப் புதுமை மத்தேயு நற்செய்தி 14ம் பிரிவிலும், மாற்கு நற்செய்தி 6ம் பிரிவிலும் கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, நற்செய்தியாளர்கள் மத்தேயுவும், மாற்கும், இயேசு கடல் மீது நடந்த புதுமையையும், கானானியப் பெண்ணின் மகளைக் குணமாக்கியப் புதுமையையும் ஒருசேரப் பதிவு செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து, 4000த்திற்கும் அதிகமான மக்களுக்கு இயேசு உணவளிக்கும் புதுமையைக் கூறியுள்ளனர்.

இவ்விரு நற்செய்திகளிலும், இப்புதுமைக்கு முன்னர் கூறப்பட்டுள்ள விடயங்கள் நமக்குள் சிந்தனைகளை உருவாக்குகின்றன. கானானியப் பெண்ணின் மகளுக்கு இயேசு நலம் வழங்கும் புதுமையில், இயேசுவுக்கும், அப்பெண்ணுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில், உணவைப் பற்றிய கருத்துக்கள் இடம்பெற்றன.

மாற்கு 7:27-28 (காண்க. மத். 15:25-26)

இயேசு அவரைப் பார்த்து, "முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும். பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல" என்றார். அதற்கு அப்பெண், "ஆம் ஐயா, ஆனாலும் மேசையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள், சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்னுமே" என்று பதிலளித்தார்.

"சிந்தும் சிறு துண்டுகள்" தனக்குப் போதும் என்று கானானியப் பெண் கூறிய அந்தப் புதுமையைத் தொடர்ந்து, இயேசு, 4000த்திற்கும் அதிகமானோருக்கு உணவளித்தப் புதுமையில், தன்னைத் தேடிவந்த மக்களுக்கு, அவர்கள் கேட்காமலேயே ஒரு விருந்தைப் படைக்கிறார்.

மத்தேயு நற்செய்தியில், 4000த்திற்கும் அதிகமான மக்களுக்கு இயேசு உணவு வழங்கியப் புதுமையின் ஆரம்ப வரிகள் இவ்வாறு அமைந்துள்ளன:

மத்தேயு 15:32

இயேசு தம் சீடரை வரவழைத்து, "நான் இம்மக்கள் கூட்டத்தின்மீது பரிவு கொள்கிறேன். ஏற்கெனவே மூன்று நாள்களாக இவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். உண்பதற்கும் இவர்களிடம் எதுவும் இல்லை; இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிடவும் நான் விரும்பவில்லை; அனுப்பினால் வழியில் தளர்ச்சி அடைந்துவிடலாம்" என்று கூறினார்.

"இம்மக்கள்" என்று இயேசு குறிப்பிடும் சொல்லின் விளக்கம், இந்த இறைவாக்கியத்திற்கு முன்னர் கூறப்பட்டுள்ள 2 இறைவாக்கியங்களில் காணப்படுகிறது. அங்கே நாம் வாசிப்பது இதுதான்:

மத்தேயு 15:29-30

இயேசு அவ்விடத்தை விட்டு - அதாவது, கானானியப் பெண்ணைச் சந்தித்த தீர், சீதோன் பகுதிகளை விட்டு - அகன்று கலிலேயக் கடற்கரை வழியாகச் சென்று அங்கே ஒரு மலையின் மீது ஏறி அமர்ந்தார். அப்பொழுது பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்தனர். அவர்கள் தங்களோடு கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர், உடல் ஊனமுற்றோர், பேச்சற்றோர், மற்றும் பிற நோயாளர் பலரையும் அவர் காலடியில் கொண்டுவந்து சேர்த்தனர். அவர்களை அவர் குணமாக்கினார்.

மக்களின் பிணிகளை இயேசு அகற்றிய புதுமையையும், மக்களின் பசியை அவர் போக்கிய புதுமையையும், நற்செய்தியாளர் மத்தேயு ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து பதிவு செய்துள்ளார். இந்தத் தொடர் பதிவை மையப்படுத்தி, Marcus Dods என்ற விவிலிய விரிவுரையாளர் கூறியுள்ள சில எண்ணங்கள், நம் கவனத்தை ஈர்க்கின்றன.

இப்பகுதியில், பிணிகளை நீக்க இயேசு ஆற்றிய புதுமைகள், மக்களின் வேண்டுகோளுக்கிணங்க நிகழ்த்தப்பட்டன. இப்பகுதியில், "நோயாளர் பலரையும் அவர் காலடியில் கொண்டுவந்து சேர்த்தனர். அவர்களை அவர் குணமாக்கினார்" (மத். 15:30) என்பதை, நற்செய்தியாளர் மத்தேயு தெளிவாகக் கூறியுள்ளார்.

குணமடைந்த மக்களுக்கும், அவர்களை இயேசுவிடம் கொணர்ந்தவர்களுக்கும் உணவளிக்கும் புதுமை, யாருடைய வேண்டுகோளும் இன்றி இயேசுவால் நிகழ்த்தப்பட்டது. தன்னைச் சூழ்ந்திருந்த மக்களைக் கண்டு, "நான் இம்மக்கள் கூட்டத்தின்மீது பரிவு கொள்கிறேன். ஏற்கெனவே மூன்று நாள்களாக இவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். உண்பதற்கும் இவர்களிடம் எதுவும் இல்லை; இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிடவும் நான் விரும்பவில்லை; அனுப்பினால் வழியில் தளர்ச்சி அடைந்துவிடலாம்" (மத். 15:32) என்று இயேசு தன் சீடர்களிடம் கூறினார். அவர் கூறியச் சொற்கள், நாம் தற்போது வாழ்ந்துவரும் 'முழு அடைப்பு' காலத்தில், பல இடங்களில், பல்வேறு நல்மனம் கொண்டோர் உள்ளங்களில் எதிரொலித்து வருவதையும், அதன் பயனாக, மக்களின் பசியைப்போக்கும் முயற்சிகள் நடைபெறுவதையும் நாம் உணர்கிறோம்.

மார்ச் மாத இறுதி வாரத்தில், இந்தியாவில் முழு அடைப்பு என்ற ஆணை, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பிறப்பிக்கப்பட்டதும், பல கோடி வறியோரின் வாழ்வு மிகவும் பாதிக்கப்பட்டது. ஊர்விட்டு, ஊர் சென்று உழைக்கும் பல இலட்சம் தினக்கூலி தொழிலாளிகள், தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப இயலாமல் தவித்தனர். அவ்வேளையில், அவர்களுக்கு உணவு வழங்க, அரசு சார்பில் ஒரு சில ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பொதுவாகவே, எந்த ஒரு துன்பத்திலும், மக்களுக்கு உதவிகள் செய்வது, அரசுகளின் கடமை. ஆனால், மக்களிடம் நிலவும் பசி, பட்டினி, பிணி என்ற அனைத்துக் கொடுமைகளின்போதும், தங்களுக்கென விளம்பரங்களைத் தேடிக்கொள்ளும் அரசியல் கட்சிகளின் போலித்தனமான உதவி நாடகங்கள், கொரோனா தொற்றுக்கிருமி நெருக்கடி வேளையிலும் வெளியாகியிருப்பது, நம்மைத் தொற்றியுள்ள தீர்க்கமுடியாத கிருமி என்பதை அறிந்து வேதனைப்படுகிறோம்.

அதே வேளையில், யாருடைய வேண்டுகோளும் இன்றி, எவ்விதத் தூண்டுதலும் இன்றி, எள்ளளவும் விளம்பரங்களைத் தேடாமல், தனிப்பட்ட மனிதர்கள், குறிப்பாக, இளையோர், மற்றும் அரசுசாரா தன்னார்வ அமைப்பினர், பல இலட்சம் மக்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.

அஸ்ஸாமில், வறிய குடும்பங்களுக்கு ஒவ்வொரு நாளும் உணவு வழங்கி வரும் ஜயந்த போரா (Jayanta Bora) என்பவரைப் பற்றிய ஒரு துணுக்குச் செய்தி, ஏப்ரல் 8, ‘இந்தியா டுடே’ (India Today) இணையதள செய்தியில் வெளியாகி இருந்தது. அம்மாநிலத்தின் பிஸ்வநாத் (Biswanath) மாவட்டத்தில் வாழும் வறிய குடும்பங்களுக்கு உணவு வழங்கிவரும் போரா அவர்கள், குறைந்தது 10,000 குடும்பங்களுக்கு உதவி செய்வது தன் இலக்கு என்று கூறியுள்ளார். அத்துடன், அக்குடும்பங்களுக்கு உணவு வழங்குகையில், கொரோனா தொற்றுக்கிருமியிலிருந்து அவர்கள் தங்களையே காத்துக்கொள்ளும் வழிமுறைகளையும் போரா அவர்கள் கூறிவருகிறார் என்று அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது. அதேபோல், தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில், 'அட்சயம்' என்ற பிறரன்பு அமைப்பின் வழியே, நவீன்குமார் என்ற இளையவரும் அவருடன் இணைந்துள்ள இளையோரும், தங்கள் பகுதியில் தெருக்களில் வாழ்வோரின் பசிபோக்கும் பணியில் ஒவ்வொருநாளும் ஈடுபட்டு வருவதை நாம் செய்திகளில் வாசித்தோம்.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், கத்தோலிக்கத் திருஅவை, தன் மறைமாவட்டங்கள், பங்குத்தளங்கள், துறவற நிறுவனங்கள், காரித்தாஸ், புனித வின்சென்ட் தே பால் அமைப்புகள் வழியே மக்களின் துயர் நீக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்பதை நாம் அறிவோம்.

செய்திகளாக வெளிவராமல், ஊடகங்களின் கவனத்தை ஈர்க்காமல், ஏன், அடுத்திருப்பவர் கவனத்தையும் ஈர்க்காமல், மக்களின் பசியைப் போக்கிவரும் மனிதர்கள் நம்மைச் சுற்றி உள்ளனர். இவர்கள், அனைவரும், மனிதம் இவ்வுலகில் ஒருபோதும் அழியாது என்பதற்கு, உயிருள்ள சாட்சிகள். "உண்பதற்கு இவர்களிடம் எதுவும் இல்லை; இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிடவும் நான் விரும்பவில்லை" என்று கூறி, அவர்களுடைய பசியைப் போக்க உணவளித்த இயேசுவின் புதுமை, இன்றும் நம்மிடையே தொடர்கிறது என்பதை எண்ணி, இறைவனுக்கு நன்றி கூறுவோம். இந்த பசிபோக்கும் முயற்சிகளில் நாமும் ஈடுபட, இறைவன் நமக்கு வழிகாட்டுவாராக!

14 April 2020, 14:33