தேடுதல்

Vatican News
ஒடிசா திருஅவையின் உதவிகள் ஒடிசா திருஅவையின் உதவிகள் 

கோவிட்-19: தொழுநோயாளர்களிடையே ஒடிசா திருஅவை

குடிபெயர்ந்த தொழிலாளர்கள், வாகன ஓட்டுனர்கள், சிறு தொழில்முனைவோர், தினக்கூலிகள், கைம்பெண்கள், முதியோர், இரந்துண்போர், வீடற்றோர் ஆகியோருக்கு ஆற்றிவரும் பணிகளை மேலும் அதிகரித்துள்ளது, ஒடிசா திருஅவை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

இரக்கத்தின் ஞாயிறை சிறப்பிக்கும் விதமாக இந்தியாவின் ஒடிசா மாநில ஆயர்களும் விசுவாசிகளும் இணைந்து, ஏழைகளிடையே தங்கள் பணிகளை அதிகரித்துள்ளனர்.

கோவிட் -19 கொள்ளை நோயால் அனைத்தும் முடக்கப்பட்டுள்ள நிலையில், பொருளாதாரக் கடைநிலையில் இருப்போர், குடியேற்றதாரர், உதவித்தேவைப்படுவோர் என அனைத்து தரப்பு மக்களுக்கும், மேலும் சிறப்பு உதவிகளை வழங்க விசுவாசிகளுடன் இணைந்து இந்த இரக்கத்தின் ஞாயிறில் தீர்மானித்ததாக, ஒடிசா திருஅவைத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, ஏழைகள், தினக்கூலிகள் உட்பட, துன்புறுவோரிடையே சேவையாற்றிவரும் ஒடிசா தலத்திருஅவை,  குடிபெயர்ந்த தொழிலாளர்கள், வாகன ஓட்டுனர்கள், சிறு தொழில் முனைவோர், தினக்கூலிகள், கைம்பெண்கள், முதியோர், இரந்துண்போர், வீடற்றோர் ஆகியோருக்கு ஆற்றிவரும் பணிகளை மேலும் முடுக்கிவிட உள்ளதாக அறிவித்துள்ளது.

ஒருவருக்கொருவர் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டிய இந்த கொரோனா தொற்று நோய்க் காலத்தில், மக்களோடு மனத்தளவில் ஒன்றித்திருப்பதாகக் கூறும் தலத்திருஅவைத் தலைவர்கள்,  மனிதகுலம் பாவத்தில் உழன்றாலும், அவர்களுக்குரிய இறைவனின் அன்பை வெளிக்காட்டி நிற்கும் இந்த இரக்கத்தின் ஞாயிறில், தங்கள் பணிகளுக்குரிய உறுதிப்பாட்டை மேலும் அதிகரிக்க வேண்டியது அவசியம் என  மேலும் கூறியுள்ளனர்.

ஒடிசா மாநிலத்திலுள்ள பங்குத்தளங்களும், பள்ளிகளும், அனைத்து நிறுவனங்களும், உணவு நிதி சேகரிப்பை அதிகரித்து, ஏழைகளுக்கு உதவ  வேண்டும் என  தலத்திருஅவை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ஒடிசா மாநிலத்திலுள்ள பங்குத்தளங்களும், பள்ளிகளும், அனைத்து நிறுவனங்களும், உணவு நிதி சேகரிப்பை அதிகரித்து, ஏழைகளுக்கு உதவ  வேண்டும் என  தலத்திரு அவை   அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மிகவும் வறுமை நிலையிலுள்ள 700 குடும்பங்களுக்கு முகக்கவசம், சோப்பு, தொற்றுக் கிருமி அகற்றும் திரவம் போன்றவைகளையும், Burla தொழு நோய் குடியிருப்பில் வாழும்  நோயாளிகளுக்கு உணவுப்பொருட்களையும் வழங்கியுள்ளது தலத்திருஅவை.

ஒரு சேரியில் வாழும் 250 குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படைத் தேவைகளையும் நிறைவு செய்துள்ளனர் தலத்திருஅவை அதிகாரிகள். இந்த குடும்பங்கள் அனைத்தும் பிற மதங்களைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது (Zenit)

21 April 2020, 14:52