தேடுதல்

Vatican News
எம்மாவு நகரில் சீடர்களுடன் இரவுணவருந்திய இயேசு எம்மாவு நகரில் சீடர்களுடன் இரவுணவருந்திய இயேசு 

உயிர்ப்புக்காலம் 3ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

இஞ்ஞாயிறன்று, நம் குடும்பத்தினருடன் இணைந்து, தொலைக்காட்சி, அல்லது, வேறு ஊடகங்கள் வழியே, நாம் மேற்கொள்ளும் வழிபாட்டு முயற்சிகளில், இயேசுவைக் கண்டுகொள்ளும் அனுபவம் நமக்குக் கிடைக்கவேண்டும் என்று மன்றாடுவோம்.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

உயிர்ப்புக்காலம் 3ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

பிரேசில் நாட்டைச் சேர்ந்த Alvaro Weyne என்ற வர்த்தகர் ஒருவருக்கு திடீரென பத்து இலட்சம் ரூபாய் வந்து சேர்ந்தது. தன் அலுவலக அறையில் அதைப் பாதுகாப்பாக வைத்துவிட்டுச் செல்ல விரும்பினார். மிகவும் பாதுகாப்பான இடம், தன் மேசைக்குக் கீழ் இருக்கும் குப்பைத் தொட்டிதான், அதை யாரும் தொடமாட்டார்கள் என்று அவர் தீர்மானித்து, பணத்தை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு, குப்பைத் தொட்டியின் அடிப்புறத்தில் அதை ஒளித்து வைத்தார்.

அவர் தன் அறையை விட்டு வெளியேச் சென்றிருந்த நேரம், அவர் அறையைச் சுத்தம் செய்யவந்த துப்புரவுத் தொழிலாளி, அந்தக் குப்பைத் தொட்டியில் இருந்தவற்றை மற்றொரு பெரிய குப்பைத் தொட்டியில் கொட்டி, வெளியே எடுத்துச் சென்றார்.

இது கற்பனைக் கதை அல்ல, ஒரு சில ஆண்டுகளுக்கு முன் பிரேசில் நாட்டில் வெளியான ஒரு செய்தி. இச்செய்தியை வாசித்த John Davies என்ற கிறிஸ்தவப் போதகர், இதன் தொடர்ச்சியாக மற்றொரு கற்பனைக் கதையை இணைத்துள்ளார்.

பிரேசில் நாட்டில் ஒரு சேரியில் மிகுந்த வறுமையில் வாழ்பவர், Enrico. ஒவ்வொரு நாளும், நகரில் இருந்த குப்பைத் தொட்டிகளில் கிடைக்கும் பொருட்களைச் சேகரித்து, அவர் தன் குடும்பத்தைக் காப்பாற்றி வருபவர். அன்று, அவர் அந்த அலுவலகத்தின் அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் தேடியபோது, ஒரு 'பிளாஸ்டிக்' பையைப் பார்த்தார். திறந்தபோது, அதில் இருந்த பத்து இலட்சம் ரூபாய் அவரைப் பார்த்துச் சிரித்தது.

இந்த உண்மைச் செய்தியும், அதைத் தொடரும் கற்பனைக் கதையும் நம் வாழ்வின் அனுபவங்களைப் பிரதிபலிக்கின்றன. நம்மை வந்தடையும் கொடைகளைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல், சரியாகப் பாதுகாக்காமல், அவற்றை இழந்துவிடுகிறோம். நாம் முற்றிலும் எதிர்பாராத நேரங்களில், பெரும் மகிழ்வைத் தரும் கொடைகளை நாம் பெறுகிறோம். தவறவிட்டதால் தவிப்பு, வியப்படையவைக்கும் மகிழ்வு என்ற இவ்விரு உணர்வுகள், இன்றைய நற்செய்தியில் இடம்பெறுகின்றன. எம்மாவு என்ற ஊரை நோக்கிச் சென்ற இரு சீடர்கள் அடைந்த அனுபவம் இன்றைய நற்செய்தியாக ஒலிக்கிறது. (லூக்கா 24: 13-35)

இவ்வுலகிற்கு வழங்கப்பட்ட உன்னதக் கொடையான இயேசுவையும், அவரது உண்மையான வல்லமையையும் சீடர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. இறைவனின் அரசை இயேசு நிறுவுவார் என்று சீடர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அந்த உச்சகட்ட எதிர்பார்ப்பில், இயேசு பரிதாபமாய் கொலை செய்யப்பட்டு இறந்ததும், அவர்கள் நடுவே, ஏமாற்றம் அதிகம் உருவானது. அந்த ஏமாற்றத்தில் சீடர்கள் பலரும் மனம் உடைந்து, பயந்து, பதுங்கி, ஒருவரை ஒருவர் சந்தேகக் கண்களோடு பார்த்தபடி, காலத்தைக் கடத்தினர். அவர்கள் மத்தியில் வாழ்ந்த பெண்களோ, இன்னும் நம்பிக்கையை இழக்காமல், துணிவோடு கல்லறைக்குச் சென்றனர். உயிர்ப்பின் நற்செய்தி அவர்களுக்கு முதலில் வழங்கப்பட்டது. 'கலிலேயாவுக்குச் செல்லுங்கள், அங்கு மீண்டும் இயேசுவைக் காண்பீர்கள்' என்ற செய்தி, பெண்கள் வழியே சொல்லப்பட்டது.

இந்த நற்செய்தியைக் கேட்டும், கேட்காதது போல் தங்கள் துன்பத்தில் மூழ்கிய இருவர், இன்றைய நற்செய்தியின் நாயகர்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்டதுபோல், கலிலேயாவுக்குச் செல்லாமல், எம்மாவு என்ற ஊருக்குச் சென்ற இரு சீடர்கள், விரக்தியின் உச்சியை அடைந்தவர்கள். நமது நாயகர்களில் ஒருவரது பெயர் கிளயோப்பா என்று குறிக்கப்பட்டுள்ளது. (லூக்கா 24:18) மற்றவரது பெயர் குறிக்கப்படவில்லை. அந்த இரண்டாவது சீடராக நம்மை இணைத்து, இப்பயணத்தைத் தொடர்வோம்.

எருசலேமுக்கும் எம்மாவு என்ற ஊருக்கும் இடைப்பட்டத் தூரம் 11 கி.மீ. என்று நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ளது (லூக்கா 24:13). இந்த தூரத்தை, நடைப் பயணமாகக் கடக்க இரண்டு மணி நேரங்கள் எடுத்திருக்கலாம். ஆனால், இந்த நடைப்பயணத்தை, நடைப் பிணங்களைப் போல மேற்கொண்ட அந்த இரு சீடர்களுக்கும் இந்தப் பயணம் முடிவின்றி செல்வதுபோல் தெரிந்திருக்கும்.

இவ்விரு சீடர்களும் போகும் வழியில் ஒருவரோடு ஒருவர் உரையாடிக் கொண்டே சென்றனர் என்று நற்செய்தி கூறுகிறது. (லூக்கா 24:14) என்ன பேசியிருப்பார்கள்? அவர்களது உள்ளக் குமுறல்கள், புலம்பல்களாக, கோபமான வார்த்தைகளாக வெடித்திருக்கும். "நாங்கள் இவரை எவ்வளவோ நம்பினோம், இவரிடமிருந்து எவ்வளவோ எதிர்பார்த்தோம். ஆனால், இவ்விதம் ஆகிவிட்டதே..." என்ற குமுறல்கள் எழுந்திருக்கும். இவ்விரு சீடர்களின் குமுறல்கள் பல தலைமுறைகளாய் நம் மத்தியில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டு தானே இருக்கின்றன? நாம் எதிர்பார்த்தவை கிடைக்காதபோது, நாம் எதிர்பாராதவை வந்து சேர்ந்தபோது நொறுங்கிப்போன நேரங்களை நினைத்துப் பார்க்கலாம்.

நொறுங்கிய உள்ளத்துடன் நடந்து சென்ற சீடர்களுடன் இயேசு இணைந்து நடக்க ஆரம்பித்தார். தாயன்போடு அவர்களைத் தேடிச்சென்ற இயேசு, கனிவோடு பேசினார், கடிந்து கொண்டார், பொறுமையாய் விளக்கினார். அந்தத் தாய், இறுதியில் உணவைப் பரிமாறிய அழகில், இவ்விரு சீடர்களின் கண்கள் திறந்தன.

தங்களை வியப்படையச் செய்த மகிழ்வை, மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள அவ்விரு சீடர்களும் எருசலேமுக்கு விரைந்தனர். "மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று" (லூக்கா 24:29) தங்களை இருள் சூழ்ந்துகொண்டது என்று பலவாறு புலம்பிக் கொண்டிருந்த அவ்விரு சீடர்களின் உள்ளங்கள், எதிர்பாராத இந்த மகிழ்வால், ஒளிவெள்ளத்தில் மூழ்கின. வெளியில் சூழ்ந்திருந்த இருளைப் பற்றிய கவலை ஏதும் இல்லாமல், இரவோடு இரவாக, அவர்கள் இருவரும் எருசலேம் திரும்பிச் சென்றனர்.

கனமான, உடைந்த உள்ளத்தைச் சுமந்து அவர்கள் எருசலேமிலிருந்து புறப்பட்டபோது, அவர்கள் கடந்து சென்ற 11 கி.மீ. தூரம், பல நூறு கி.மீ. போலத் தெரிந்திருக்கும். இப்போதோ, அந்த இரவில், அதே 11 கி.மீ.தூரம், 11 மீட்டர் தூரமாகத் தெரிந்திருக்கவேண்டும். வியப்பில் ஆழ்த்தும் மகிழ்வுக்கு இந்த மந்திரச் சக்தி உண்டு.

“Surprised by Joy” அதாவது, "வியப்பில் ஆழ்த்தும் மகிழ்வு", அல்லது, "வியப்படைய வைக்கும் மகிழ்வு" என்ற சொற்றொடர், கிறிஸ்தவ சிந்தனையாளர், C.S.Lewis (Clive Staples Lewis) அவர்கள், 1955ம் ஆண்டு வெளியிட்ட ஒரு நூலின் தலைப்பு. இந்நூலில், அவர், தன் மனமாற்றத்தை விவரித்துள்ளார். கடவுள் நம்பிக்கையற்றவராக அவர் வாழ்ந்த நாட்களில், இறைவன் அவரைத் தொடர்ந்துவந்தார் என்பதை அழகாகக் கூறியுள்ளார்:

"ஒவ்வொரு நாளும், என் அறைக்குள் நான் தனிமையில், என் வேலைகளில் என்னையே புதைத்துக் கொண்டேன். அவ்வப்போது, நான் புதைந்திருந்த வேலைகளிலிருந்து என் சிந்தனை சிறிது வெளியே எட்டிப் பார்த்தபோது, அங்கு என்னைச் சந்திக்கக் காத்திருந்தார் கடவுள். யாரை நான் சந்திக்கக்கூடாது என்று தீர்மானித்து, விலகிச் சென்றேனோ, அவர் என்னைத் தேடித் தேடி வந்தார்."

சிறிது, சிறிதாக, Lewis அவர்கள் மனம் மாறத் துவங்கினார். கோவில் வழிபாடுகளில் அரை மனதோடு கலந்துகொண்டார். இங்கிலாந்திலேயே, தயங்கிய, சந்தேகப்பட்ட உள்ளத்துடன் வாழ்ந்த கிறிஸ்தவன் தான் ஒருவனாக மட்டுமே இருந்திருக்கவேண்டும் என்று அவர் தன்னையே விவரித்துள்ளார். இறுதியில், அவரை இறைவன் முழுமையாக ஆட்கொண்ட அனுபவத்தை அவர் இவ்விதம் விவரிக்கின்றார்:

"நான் எப்போது என் இறுதித் தீர்மானத்தை எடுத்தேன் என்பது நன்றாக நினைவிருக்கிறது. அன்று காலை நான் 'Whipsnade' உயிரியல் பூங்காவிற்குச் சென்றுகொண்டிருந்தேன். பயணத்தைத் துவக்கியபோது, இயேசு கிறிஸ்து இறைவனின் மகன் என்பதை நம்பாமல் இருந்தேன். அனால், நான் உயிரியல் பூங்காவை அடைந்தபோது, அந்த நம்பிக்கை உறுதி அடைந்தது" என்று Lewis அவர்கள், தன் மனமாற்றப் பயணத்தை, இறை நம்பிக்கைப் பயணத்தைக் குறிப்பிட்டுள்ளார். அவர் விவரித்துள்ள இந்த மனமாற்றக் காட்சியை வாசிக்கும்போது, ஓர் அடிப்படைக் கேள்வி நமக்குள் எழ வாய்ப்புண்டு.

ஒருவர், கோவிலுக்கோ, திருத்தலத்திற்கோ செல்லும்போது, மனமாற்றமோ, மத நம்பிக்கை வளர்ச்சியோ உருவாகும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால், ஓர் உயிரியல் பூங்காவிற்குச் செல்லும்போதும், ஒருவருக்கு மனமாற்றம் ஏற்படக்கூடுமா? என்ற கேள்வி எழுகிறது. இதற்கு நாம் தரக்கூடிய ஒரே பதில் - "கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை" (லூக்கா 1:37) என்று, வானதூதர் கபிரியேல், மரியாவிடம் கூறிய சொற்கள்.

மனமாற்றங்கள், இறைவனின் சந்திப்புக்கள் எங்கும், எவ்வேளையிலும் நிகழும். இன்றைய நற்செய்தியில் நாம் காண்பது என்ன? இஸ்ரயேல் மக்களின் உயிர் நாடியான கோவில் இருந்த எருசலேமில் இவ்விரு சீடர்களைச் சந்திக்காத இயேசு, அவர்கள் எம்மாவு சென்ற வழியில் சந்தித்தார், மனமாற்றத்தைக் கொடுத்தார். திருத்தூதர் பவுல், கொலைவெறியுடன் தமஸ்கு நகர் சென்றபோது, வழியில் அவரைச் சந்தித்தார், மனமாற்றம் தந்தார் (திருத்தூதர் பணிகள் 9: 3-9). C.S.Lewis அவர்களுக்கு, உயிரியல் பூங்காவிற்குச் செல்லும் வழியில் மனமாற்றம் தந்தார் இறைவன்.

இன்று நாம் வாழும் இந்த புதிரானச் சூழலை எண்ணிப்பார்ப்போம். இந்தியாவில் ஏறத்தாழ கடந்த 30 நாள்களாக, ஐரோப்பாவில் 40 நாள்களுக்கும் மேலாக, நமது கோவில்கள் அனைத்தும் வழிபாடுகளுக்கு மூடப்பட்ட நிலையில், நம்மில் எத்தனை பேர், நம் இல்லங்களில், இறை அனுபவத்தை, வெவ்வேறு வழிகளில் பெற்றுவருகிறோம் என்பதை எண்ணிப்பார்ப்போம். ஒரு சிலருக்கு, இத்தனை ஆண்டுகளாக, கோவிலில் நடைபெற்ற வழிபாடுகளில் அரைமனதோடு கலந்துகொண்ட வேளையில் கிடைக்காத இறை அனுபவம், இல்லங்களில், நம் குடும்பங்கள் நடுவில், இன்னும் கூடுதலாக, ஆழமாகக் கிடைத்திருக்கலாம். அதற்காக, இறைவனுக்கு நன்றி கூறுவோம்.

எம்மாவு சென்ற சீடர்களைத் தேடிச்சென்ற இயேசு, அவர்கள் தங்கியிருந்த இடத்திற்குச் சென்று, அங்கு அப்பத்தைப் பகிர்ந்த வேளையில் தன்னையே வெளிப்படுத்தினார். இஞ்ஞாயிறன்று, நம் குடும்பத்தினருடன் இணைந்து, தொலைக்காட்சி, அல்லது, வேறு ஊடகங்கள் வழியே, நாம் மேற்கொள்ளும் வழிபாட்டு முயற்சிகளில், இயேசுவைக் கண்டுகொள்ளும் அனுபவம் நமக்குக் கிடைக்கவேண்டும் என்று மன்றாடுவோம். இயேசுவோடு பெற்ற அனுபவத்தால், "நம் உள்ளம் பற்றி எரியவில்லையா?" (லூக்கா 24:32) என்று வியப்புற்ற எம்மாவு சீடர்களைப் போல், நம் உள்ளங்களையும், இறைவன், தன் சொற்களால், பற்றியெரியச் செய்து, நம்மையும் வியப்பில் ஆழ்த்துவாராக!

மரணத்தையும், நோயையும், இத்தனை நாள்களாக, செய்திகளில் பார்த்து, மனம் தளர்ந்திருக்கும் நம்மை, தாயன்புடன் தேடிவரும் உயிர்த்த கிறிஸ்துவை நாம் அடையாளம் கண்டுகொள்ளும் வரத்தை, இந்த உயிர்ப்புக் காலத்தில் நாம் ஒவ்வொருவரும் பெறுவோமாக!

25 April 2020, 13:55