தேடுதல்

Vatican News
தமிழக ஆயர்கள் தமிழக ஆயர்கள்  

கொரோனா தொற்றுக்கிருமி – தமிழக ஆயர்களின் மடல்கள்

இறைமக்கள் அனைவருக்கும் தமிழக ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் அந்தோணி பாப்புசாமி அவர்கள் அனுப்பியுள்ள சுற்று மடலில், சமுதாய நலன் கருதி, ஏழு வழிகாட்டுதல்களை குறிப்பிட்டுள்ளார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றுக்கிருமி, தற்போது இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திலும் பரவத் துவங்கியிருப்பதனால், அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கும், முன்னெச்சரிக்கைகளுக்கும் இணங்கி செயல்பட, தமிழக இறைமக்களுக்கு, தமிழக ஆயர் பேரவையின் தலைவர் அந்தோணி பாப்புசாமி அவர்கள் ஒரு சுற்றுமடல் வழியே விண்ணப்பித்துள்ளார்.

சமுதாய நலன் கருதி, ஏழு வழிகாட்டுதல்கள்

தமிழக ஆயர்கள், அருள்பணியாளர்கள், இருபால் துறவியர் மற்றும் இறைமக்கள் அனைவருக்கும் பேராயர் பாப்புசாமி அவர்கள் அனுப்பியுள்ள இம்மடலில், சமுதாய நலன் கருதி, ஏழு வழிகாட்டுதல்களை குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு முன்னேற்பாடுகளையும், இந்த நோய் குறித்த போதிய விழிப்புணர்வையும் அனைவருக்கும் வழங்கக் கோரும் பேராயரின் மடல், நோயின் அறிகுறிகளான காய்ச்சல், சளி, இருமல் ஆகியவற்றைக் கொண்டுள்ளவர்கள், ஆலய வழிபாடுகளில் கலந்துகொள்ளாமல் இருப்பது முக்கியம் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆலயத்திற்கு வருவோர், நுழையும்போதும், வெளியேறும்போதும், கரங்களை சோப்பினால் நன்கு கழுவி சுத்தம் செய்துகொள்வதற்கு, ஒவ்வொரு கோவிலிலும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படுவது அவசியம் என்று இம்மடலில் கூறப்பட்டுள்ளது.

வழிபாடுகளை தற்காலிகமாக நிறுத்திவைக்க...

நோய் தோற்று அதிகமாக உள்ள பகுதிகளில் வழிபாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு, அந்தந்த மறைமாவட்டத்தின் பேராயரோ, ஆயரோ முடிவு செய்துகொள்ளலாம் என்றும், நோயுற்றோரைக் குறித்த தகவல்களை உரிய துறையினரிடம் தெரிவிக்க முயற்சிகள் எடுக்கவேண்டும் என்பதையும் பேராயர் பாப்புசாமி உறுதி செய்துள்ளார்.

இறுதியாக, இந்த உலகளாவிய நெருக்கடியின் பாதிப்புக்கள் நீங்க, செப வழிபாடுகள் நடத்துவதும், செப அட்டைகள் வழியே இல்லத்தில் இருப்போர், செபிக்க உதவுவதும் தமிழக திருஅவை செய்யக்கூடிய முயற்சிகள் என்பதை, பேராயர் பாப்புசாமி அவர்களின் சுற்றுமடல் வலியுறுத்துகிறது.

சென்னை-மயிலை பேராயரின் மடல்

இதற்கிடையே, சென்னை-மயிலை உயர் மறைமாவட்டத்தின் பேராயர், ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்கள், மார்ச் 18, இப்புதனன்று வெளியிட்டுள்ள ஒரு மடலில், இப்புதன் முதல், மார்ச் 31ம் தேதி முடிய நடைபெறும் ஞாயிறு கடன் திருநாள் திருப்பலிகள் மற்றும் தினசரி திருப்பலிகளில் பங்கெடுப்பதிலிருந்து இறைமக்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.

தவக்காலத்திற்கென்று சிறப்பாகத் திட்டமிடப்பட்டிருந்த திருப்பயணங்கள், தியானங்கள், திருச்சிலுவைப்பாதைகள், பொது செப வழிபாடுகள், பொது ஆராதனைகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன என்று கூறும் பேராயரின் மடல், இல்லங்களில் முதியோர், மற்றும் நோயுற்றோருக்கு திரு நற்கருணை வழங்கும் வழக்கத்தை தொடர்வது மிகச் சிறந்தது என்றும் கூறுகிறது.

பொது வழிபாடுகளில் கலந்துகொள்வதற்குப் பதில், அவரவர் இல்லங்களில் இருந்தவண்ணம் தொலைக்காட்சி அல்லது, இணையத்தளம் வழியே, திருவழிபாடுகளில் பங்கேற்பது, வரவேற்கப்படுகிறது என்று, பேராயரின் மடல் பரிந்துரைக்கிறது. (Indian Sec.)

19 March 2020, 15:03