தேடுதல்

Vatican News
கிணற்று ஓரமாய் அமர்ந்திருந்த இயேசுவும், சமாரியப் பெண்ணும்.... கிணற்று ஓரமாய் அமர்ந்திருந்த இயேசுவும், சமாரியப் பெண்ணும்....  

தவக்காலம் 3ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

ஊர்மக்கள் வாரியிறைத்த சாபங்களைச் சுமந்து வாழ்ந்த சமாரியப்பெண்ணை, அச்சாபங்களுக்கு பதிலிறுப்பாக, அதே ஊர் மக்களுக்கு, நற்செய்தியை அறிவிப்பவராக மாற்றுகிறார், இயேசு.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

தவக்காலம் 3ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

மனித வரலாற்றில் தொற்றுக்கிருமிகளின் தாக்கம் பலமுறை ஏற்பட்டுள்ளது. அவற்றிலிருந்து மீள்வதற்குரிய வழிகளையும் மக்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால், மனிதர்கள், தாங்களாகவே உருவாக்கிக்கொண்ட ஒரு தொற்றுக்கிருமியின் தாக்கத்திலிருந்து மீள வழியின்றி, பல்லாயிரம் ஆண்டுகளாக துன்புற்று வருகின்றனர். இந்தத் தொற்றுக்கிருமியின் பெயர் - பாகுபாடுகள். மதம், மொழி, இனம், பணம், பாலினம் என்ற பல நிலைகளிலும் ஏற்றத்தாழ்வுகளை உறுதிசெய்யும் ‘பாகுபாடுகள்’ என்ற தொற்றுக்கிருமியை அழிக்க மனமின்றி, இந்நோயை, போற்றி வளர்த்துவருகிறோம். ஒரு சில வேளைகளில், இந்நோயிலிருந்து குணமாகும் வழிகளைப் புரிந்துகொள்ள, இயற்கை வழியாகவோ, அல்லது, ஒரு சில மனிதர்களின் கட்டுக்கடங்கா வெறியின் வழியாகவோ, நமக்கு வாய்ப்புக்கள் வருகின்றன.

2001ம் ஆண்டு, செப்டம்பர் 11ம் தேதி, மனிதர்கள் நிகழ்த்திய ஒரு வெறியாட்டத்தை, நியூ யார்க் நகரில் கண்டோம். வர்த்தக உலகின் பெருமைக்குரிய சின்னங்களாக உயர்ந்து நின்ற உலக வர்த்தக மையத்தின் இரு கோபுரங்களின் மீது, இரு விமானங்கள் மோதி, அவ்விரு கோபுரங்களும், ஒன்றன்பின் ஒன்றாக, இடிந்து விழுந்தன.

தொடர்ந்து வந்த நாட்களில், உலக ஊடகங்கள், இந்நிகழ்வை மீண்டும், மீண்டும், பல கோணங்களில் காட்டி, அடிப்படையான பல கேள்விகளை எழுப்பின. நியூ யார்க் நகரம், அமெரிக்க ஐக்கிய நாடு என்ற வட்டங்களைக் கடந்து, நம் அனைவரையும் ஒரு தேடலில் ஈடுபடுத்தியது, இந்நிகழ்வு. மரணம், துன்பம், வன்முறை, நம்பிக்கை என்ற பல கோணங்களில் எழுந்த இத்தேடல்களின் விளைவாக, வெளியான பல பதிவுகளில், 'One' - அதாவது, 'ஒன்று' என்ற தலைப்பில், Cheryl Sawyer என்ற பேராசிரியர் எழுதியிருந்த ஒரு கவிதையின் ஒரு சில வரிகள் இதோ:

"கரும்புகையும், புழுதியும், சாம்பலும் மழைபோல் இறங்கிவந்தபோது, நாம் ஒரே நிறத்தவரானோம்.

எரியும் கட்டடத்தின் படிகளில் ஒருவர் ஒருவரைச் சுமந்து இறங்கியபோது, நாம் ஒரே வகுப்பினரானோம்.

சக்தி வேண்டி, முழந்தாள்படியிட்டபோது, நாம் ஒரே மதத்தவரானோம்.

இரத்ததானம் வழங்க வரிசையில் நின்றபோது, நாம் ஒரே உடலானோம்.

இந்தப் பெரும் அழிவை எண்ணி, கூடிவந்து அழுதபோது, நாம் ஒரே குடும்பமானோம்."

இக்கவிதை வரிகள் கூறும், ஒரே நிறம், ஒரே இனம், ஒரே மதம், ஒரே குடும்பம், ஒரே இறைவனின் மக்கள் என்ற உன்னத உண்மைகள், நாம் எழுப்பியுள்ள பிரிவுச் சுவர்களுக்குக்கீழ் புதைந்து போய்விடுகின்றன. இப்பிரிவுச் சுவர்கள், 2001ம் ஆண்டு, செப்டம்பர் 11ம் தேதி நிகழ்ந்த கொடூரத்தால் இடிந்து விழுந்தன என்பதும், அந்த வேதனை, நம்மை ஒருங்கிணைத்தது என்பதும், புதிரான உண்மைகள். அந்தக் கொடூரத்தின் தாக்கங்கள் குறையக் குறைய, காணாமற்போன பிரிவுச் சுவர்களை மீண்டும் தேடிக் கண்டுபிடித்து, கட்டியெழுப்பி, நம்மையே சிறைப்படுத்திக் கொண்டோம். மத வெறி, நிற வெறி, சாதிய வெறி, என்ற சுவர்கள் உயர, உயர, மனிதத்தன்மை காணாமற்போகிறது என்பது, கசப்பான உண்மை.

மனிதர்களின் வெறியால் உருவான இக்கொடுமை, நமக்குப் பாடங்களைச் சொல்லித்தந்ததுபோல், COVID-19 என்ற தொற்றுக்கிருமியின் கொடுமை, நமக்கு தற்போது, பாடங்களைச் சொல்லித்தந்தவண்ணம் உள்ளது. மதம், இனம், பணம், நாடு என்ற அனைத்து பிரிவுகளையும், எல்லைகளையும் தாண்டி, மனிதர்களாகப் பிறந்த அனைவருமே, சக்தியற்றவற்றவர்கள்தான் என்ற அடிப்படையான பாடத்தை நமக்குச் சொல்லித்தருவதற்கு, COVID-19 என்ற ஆசிரியர், நம் நடுவே உலவி வருகிறார்.

நாம் உருவாக்கியுள்ள பாகுபாட்டு நோய்களைத் தீர்க்க, இயேசு மேற்கொண்ட ஒரு முயற்சியை இன்றைய நற்செய்தியில் நாம் காண்கிறோம். யூதர்கள், சமாரியர்கள் என்று உருவாக்கப்பட்டிருந்த செயற்கையான பாகுபாட்டு நோயைக் குணமாக்க முயன்ற இயேசுவை, இன்றைய நற்செய்தியில் சந்திக்கிறோம்.

இயேசு வாழ்ந்த காலத்தில் நிலவிய ஆணாதிக்கச் சமுதாயத்தில், ஒரு பெண்ணாக, சமாரியப் பெண்ணாக வாழ்வதென்பது, கடுமையான எதிர் நீச்சல்தான். அதிலும் குறிப்பாக, இன்றைய நற்செய்தியில் கூறப்பட்டுள்ள பெண், ஐந்து ஆண்களுடன் வாழ்ந்தபிறகு, ஆறாவது மனிதரோடு வாழ்பவர். இனம், மதம், நன்னெறி, ஊர் கட்டுப்பாடு என்ற பல அளவுகோல்களால் நசுக்கப்பட்டிருந்த அப்பெண்ணை இயேசு சந்திக்கிறார்.

இன்றைய நற்செய்தியின் அறிமுக வரிகளில், "அப்போது ஏறக்குறைய நண்பகல்" (யோவான் 4:6) என்ற குறிப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்தப்பெண், தன் சொந்த ஊரிலேயே, எவ்வளவு தூரம் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார் என்பதை, நற்செய்தியாளர் யோவான், இந்த சிறு குறிப்பின் வழியே உணர்த்துவதாக, ஒருசில விவிலிய விரிவுரையாளர்கள் கூறியுள்ளனர்.

எந்த ஊரிலும், பெண்கள், காலையில், சிறு, சிறு குழுக்களாக, பல கதைகள் பேசியபடி ஊர் கிணற்றிற்குச் சென்று, நீர் எடுத்து வருவது வழக்கம். இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கும் இப்பெண்ணோ, நண்பகலில் நீர் எடுக்கச் செல்கிறார். காரணம் என்ன? அவரும், மற்றவர்களோடு காலையில் நீர் எடுக்கச் சென்றிருப்பார். அவ்வேளையில், மற்ற பெண்கள், அவரைப்பற்றி ஏளனமாகப் பேசி, கண்டனத் தீர்ப்புக்கள் வழங்கியிருப்பர். நடத்தை சரியில்லாத அவர், அந்தக் கிணற்றில் நீர் எடுப்பதால், கிணற்று நீரே தீட்டுப்படுவதாக அப்பெண்ணுக்கு உணர்த்தியிருப்பர். அவர்கள் விடுத்த கண்டனக் கணைகளால் மேலும், மேலும் காயப்படவேண்டாம் என்ற நோக்கத்தில், அப்பெண், ஆள் நடமாட்டம் அதிகமில்லாத நண்பகல் வேளையைத் தேர்ந்தெடுத்திருப்பார்.

தன் ஊர்மக்கள் வாரியிறைத்த சாபங்களைச் சுமந்து வாழ்ந்த அப்பெண்ணை, அச்சாபங்களுக்கு பதிலிறுப்பாக, அதே ஊர் மக்களுக்கு, நற்செய்தியை அறிவிப்பவராக மாற்றுகிறார், இயேசு. இந்த அற்புத மாற்றம், இன்றைய நற்செய்தியாக நம்மை அடைந்துள்ளது.

சமாரியப் பெண்ணிடம் மாற்றங்களை உருவாக்க, இயேசு தேர்ந்தெடுத்த பள்ளிக்கூடம்... ஒரு கிணற்றடி. அதுவும், யூதர்களின் வெறுப்புக்கும், ஏளனத்திற்கும் உள்ளான சமாரியர் வாழ்ந்த பகுதியில் இருந்த ஒரு கிணற்றடி. பல நூறு ஆண்டுகள், பகைமை, பிரிவு, பிளவு ஆகிய உணர்வுகளில் ஊறிப்போயிருந்த யூதர், சமாரியர் என்ற இரு குலத்தவரின் பிரதிநிதிகளாக, இயேசுவும், சமாரியப் பெண்ணும், கிணற்றடியில் சந்திக்கின்றனர்.

இயேசு அந்தச் சமாரியப் பெண்ணிடம் வலியச்சென்று, "குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும்" (யோவான் 4:8) என்று கேட்கிறார். வெகு எளிதாக, மேலோட்டமாக ஆரம்பமான இந்த உரையாடல், வெகு ஆழமான உண்மைகளைத் தொடுகின்றது. இந்த உரையாடலின் முடிவில், ஊரால் ஒதுக்கப்பட்டிருந்த ஒரு பெண், அந்த ஊரையே இயேசுவின் பாதம் கொண்டுவந்து சேர்த்த பெருமையைப் பெறுகிறார். இறைவனைப்பற்றிப் பேச, யாருக்கு, சிறிதும் தகுதியில்லை என்று உலகம் ஒதுக்கிவைத்ததோ, அவர்களில் பலர், இயேசுவை உலகறியச் செய்த தலைசிறந்த சாட்சிகள் ஆயினர் என்பதை, விவிலியமும், திருஅவை வரலாறும், மீண்டும், மீண்டும் கூறியுள்ளன.

இந்த நற்செய்திப் பகுதி, இன்றைய உலகில் நாம் சந்திக்கும் பல பிரச்சனைகளைக் குறித்து சிந்திக்க நம்மை அழைக்கிறது. கிணற்றுமேட்டில் நடக்கும் ஓர் உரையாடல் இது. கிணற்றுமேடு, டீக்கடை, ஊரின் நடுவே உள்ள ஆலமரத்தடி என்று, வெகு சாதாரண, வெகு எளிய இடங்களில், சமுதாயம், அரசியல், வாழ்வின் அடிப்படைத் தத்துவங்கள் அலசப்படுவது, நமக்கெல்லாம் தெரிந்ததுதான். மிகச் சாதாரணமான இவ்விடங்களில் இறைவனைப் பற்றியப் பாடங்களையும் கற்றுக்கொள்ளலாம் என்பதை, கிணற்று மேட்டில் நடக்கும் உரையாடல் வழியே, இயேசு, இன்று நமக்கு உணர்த்துகிறார். இது முதல் பாடம்.

அடுத்ததாக, தவித்த வாய்க்குத் தண்ணீர் தருவதிலும், சமுதாயப் பிரிவுகள் குறுக்கிடுவதை, இந்த உரையாடல் தெளிவாக்குகிறது. தண்ணீர் தருவதைப்பற்றி பேசும்போது, நெருடலான பல எண்ணங்கள் மனதில் அலைமோதுகின்றன. ஐக்கிய நாடுகள் அவை, மார்ச் 22ம் தேதி, வருகிற ஞாயிறன்று, உலகத் தண்ணீர் நாளை சிறப்பிக்கிறது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தண்ணீரைக் குறித்து, தன் கருத்துக்களை, உரைகளாக, செய்திகளாகப் பகிர்ந்துள்ளார். "தண்ணீரைப் பெறுவது, மனித உரிமை" என்ற தலைப்பில், 2017ம் ஆண்டு, வத்திக்கானில் நடைபெற்ற ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கில் திருத்தந்தை பேசும்போது, தன் உள்ளத்தில் இருந்த ஒரு வேதனையைப் பகிர்ந்துகொண்டார். "சிறு, சிறு துண்டுகளாக, தற்போது உலகில் நிகழ்ந்துவரும் மூன்றாம் உலகப் போரைத் தாண்டி, தண்ணீருக்காக நாம் ஒரு பெரும் உலகப் போரை நோக்கிச் செல்லவில்லையா என்பதை ஆய்வு செய்யவேண்டும்" என்று கூறினார்.

இறைவன் தந்த அற்புதக் கொடைகளில் ஒன்றான தண்ணீரை, சமுதாயத்தைப் பிரிக்கும் ஓர் ஆயுதமாக, நாம் மாற்றியுள்ளோம் சாதிக்கொரு கிணறு, குளம் என்று, நாம் உருவாக்கிய அவலம், இன்றும் பல இடங்களில் தொடர்கின்றது.

தண்ணீரை மையப்படுத்தி வேறு வகையான பிரிவுகள் இன்று உருவாகியுள்ளன. தண்ணீர், ஒரு பொருளாதார முதலீடு என்பதை உணர்ந்துள்ள பல செல்வர்கள், தண்ணீரைத் தனியுடைமையாக்கி வரும் கொடூரம் பெருகிவருகிறது. தவித்த வாய்க்குத் தண்ணீர் தந்த நம் பண்பாடு குறைந்து, தண்ணீரைக் காசாக்கும் வியாபாரம் வளர்ந்துவருகிறது. இந்த வியாபாரத்தால், தண்ணீர், 'நீலத்தங்கமாய்' மாறிவருகிறது.

இந்தியாவின் மற்றொரு காந்தி என்ற புகழுக்குரியவரும், இயற்கையைப் பாதுகாக்க, பல வழிகளிலும் போராடிவரும் பசுமைப்புரட்சி வீரருமான, 93 வயது நிறைந்த சுந்தர்லால் பகுகுணா அவர்கள் கூறியது இது: "முதல், இரண்டாம் உலகப் போர்கள், இயற்கை வளங்களைச் சுறண்டுவதில், ஐரோப்பிய நாடுகள் கொண்ட தீராதப் பேராசைப் பசியால் உருவாயின. மூன்றாம் உலகப் போரென்று ஒன்று வந்தால், அது நீரைப் பங்கிடுவது குறித்துதான் எழும்." தண்ணீரை, ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துவோருக்கும், தனியுடமைத் தங்கமாகப் பாவிக்கும் சுயநலச் செல்வந்தர்களுக்கும், சமாரியக் கிணற்றடியில் நடத்திய ஒரு பாடத்தின் வழியாக, இயேசு சாட்டையடி வழங்குகிறார்.

இறைவனின் கொடையான தண்ணீரை, சாதி, இனம், பொருளாதாரம் என்ற காரணங்களைக் காட்டி பிரித்துள்ளது போதாதென்று, இறைவனையும், பல காரணங்களுக்காக, பிரித்து, கூறுபோடும் மடமை முயற்சிகளில் மனித சமுதாயம் ஈடுபட்டுள்ளது. இதையும், இயேசு, இன்றைய நற்செய்தியில் சுட்டிக்காட்டுகிறார். இறைவனைத் தொழுவதற்கு, மலைகளையும், எருசலேம் புனித நகரையும், தேடாதீர்கள் என்று கூறும் இயேசு, தொடர்ந்து, அந்த சமாரியப்பெண்ணிடம் கூறும் அழகிய எண்ணங்களை இன்றைய நற்செய்தியிலிருந்து கேட்போம்:

யோவான் நற்செய்தி 4 : 21, 23-24

இயேசு சமாரியப் பெண்ணிடம், “அம்மா, என்னை நம்பும். காலம் வருகிறது. அப்போது நீங்கள் தந்தையை இம்மலையிலோ எருசலேமிலோ வழிபடமாட்டீர்கள்... உண்மையாய் வழிபடுவோர் தந்தையை அவரது உண்மை இயல்புக்கேற்ப உள்ளத்தில் வழிபடுவர்” என்றார்.

பாகுபாடுகள் என்ற நோயினால் துன்புறும் மனிதர்கள், இறைவனையும் பாகுபடுத்த பயன்படுத்தும் இலக்கணங்கள் அனைத்தும் இன்றைய நற்செய்தியில் அழிக்கப்படுகின்றன. அதேபோல், மனிதர்கள்மீது நாம் சுமத்தும் பாகுபாடுகள், முத்திரைகள் எல்லாம் அழிக்கப்படுகின்றன. மனிதர்கள் உருவாக்கிய பிரிவுகளைத் தாண்டி, உண்மை இறைவனை உள்ளத்தில் கண்டு, அவரை உள்ளத்தில் வழிபடுவதற்கு இத்தவக்காலம் நமக்கு உதவட்டும்.

இறுதியாக, நம் செபங்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்காக எழுப்புவோம்:

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டதன் ஏழாம் ஆண்டு நிறைவை, மார்ச் 13, கடந்த வெள்ளியன்று சிறப்பித்தோம். மார்ச் 19, வருகிற வியாழன், புனித யோசேப்பு திருநாளன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் தலைமைப் பொறுப்பை ஏற்ற நாளின் ஏழாம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கிறோம்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, இறைவன், நல்ல உடல், உள்ள நலனை வழங்க மன்றாடுவோம். பிரிவுகளைத் தாண்டி, மனித குடும்பத்தை ஒருங்கிணைக்க திருத்தந்தை மேற்கொண்டுவரும் முயற்சிகளை இறைவன் முழுமையாக ஆசீர்வதிக்குமாறு மன்றாடுவோம்.

14 March 2020, 14:25