தேடுதல்

Vatican News
2019 உயிர்ப்பு பெருவிழாவன்று தாக்குதலுக்கு உள்ளான புனித அந்தோனியார் திருத்தலம், கொழும்பு 2019 உயிர்ப்பு பெருவிழாவன்று தாக்குதலுக்கு உள்ளான புனித அந்தோனியார் திருத்தலம், கொழும்பு  (AFP or licensors)

தாக்குதல்கள் நடத்திய குற்றவாளிகள் பற்றிய விவரங்கள் தேவை

இலங்கையில் கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழாவன்று இடம்பெற்ற தாக்குதல்களை நடத்திய குற்றவாளிகள் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லையெனில், மக்கள் தெருக்களில் வந்து போராடுவார்கள்

மேரி தெரேசா : வத்திக்கான் செய்திகள்

இலங்கையில் கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழாவன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான குற்றவாளிகளை அரசு வெளிப்படுத்தவில்லையெனில், தெருக்களில் வந்து போராட்டம் நடத்த தயாராக இருப்பதாக, அந்நாட்டு கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் கூறியுள்ளார்.

கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழாவன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களில் 40 வெளிநாட்டவர் உட்பட ஏறத்தாழ 300 பேர் இறந்தனர் மற்றும், குறைந்தது 500 பேர் காயமடைந்தனர் என்று கூறியுள்ள கர்தினால் இரஞ்சித் அவர்கள், இந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல்கள் தொடர்பாக இலங்கை அரசு நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை என்று குறை கூறியுள்ளார்.

இலங்கை அரசில் மிக மூத்த நபர், இக்குற்றவாளிகளை, குற்றவியல் விசாரணைத் துறையின்முன் நிறுத்தியிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள கர்தினால், அந்த நபர், இக்குண்டு வெடிப்பு தாக்குதல் குறித்து, முன்கூட்டியே அறிந்திருந்தாரா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

மார்ச் 08, இஞ்ஞாயிறன்று, Tewatta ஆலயத்தில், இவ்வாறு உரைத்த கர்தினால் இரஞ்சித் அவர்கள், கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழாவன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர் என்ற செய்திகள் நிலவுகின்றன என்பதையும் குறிப்பிட்டார்.

இத்தாக்குதல்களை நடத்திய குற்றவாளிகள் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லையெனில், மக்கள் தெருக்களில் வந்து போராடுவார்கள்,  இலங்கையில் திட்டமிடப்பட்டுள்ள தேர்தல், நடைபெற வேண்டுமா, வேண்டாமா என்பது பற்றி மக்கள் தீர்மானிப்பார்கள் என்றும் இலங்கை கர்தினால் தெரிவித்தார்.  

இலங்கையில் வருகிற ஏப்ரல் 25ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. (UCAN)

10 March 2020, 16:09