தேடுதல்

Vatican News
கொழும்புவின் புனித லூசியா பேராலயம் கொழும்புவின் புனித லூசியா பேராலயம்  (AFP or licensors)

கோவிட்-19 தொற்றுக்கிருமி ஒழிய செபம், நோன்பு

இலங்கை ஆயர் பேரவை கேட்டுக்கொண்டதன்பேரில், மார்ச் 22, இஞ்ஞாயிறன்று,, கத்தோலிக்கர், வீடுகளிலிருந்தே செபம் மற்றும் நோன்பைக் கடைப்பிடித்தனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இலங்கையிலும், உலகம் முழுவதிலும் கொரோனா தொற்றுக்கிருமியால் தாக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும், அதன் நெருக்கடியை எதிர்கொள்ளும் எல்லாருக்காகவும், உண்ணா நோன்பிருந்து செபித்து வருகின்றனர், இலங்கை கத்தோலிக்கர்.

இலங்கையில், கோவிட்-19 தொற்றுக்கிருமியால் தாக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ள நிலையில், திருப்பலிகளும், பெரிய கூட்டங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன, மார்ச் 27ம் தேதி வரை ஊரடங்குச் சட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வேளையில், அந்நாட்டு கத்தோலிக்க ஆயர் பேரவை கேட்டுக்கொண்டதன்பேரில், மார்ச் 22, இஞ்ஞாயிறன்று,, கத்தோலிக்கர், வீடுகளிலிருந்தே செபம் மற்றும் நோன்பைக் கடைப்பிடித்தனர் என்று யூக்கா செய்தி தெரிவிக்கின்றது.

கொழும்பு உயர்மறைமாவட்டத்திலுள்ள Weliveriya பங்குத்தந்தை, தனியாக வாகனத்தில் திருநற்கருணையில் இருக்கும் இயேசுவை கிராமம் முழுவதும் கொண்டு சென்று மக்களை ஆசீர்வதித்துள்ளார். (UCAN) 

இதற்கிடையே, உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,78, 601-ஆக உயந்துள்ளது. அதேவேளை இதுவரை 16,505 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

கடந்த இரண்டு வாரங்களாக மிக கடுமையாக பாதிக்கப்பட்ட இத்தாலியில் 6,077 பேர் உயிரிழந்துள்ளனர். இது கொரோனா தொற்று நோயின் தொடக்கமான சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் 1 மடங்கு அதிகம் என்று செய்திகள் கூறுகின்றன.

24 March 2020, 16:11