தேடுதல்

Vatican News
பாகிஸ்தானின் ஷபாஸ் பாட்டி பாகிஸ்தானின் ஷபாஸ் பாட்டி  

பாகிஸ்தானின் ஷபாஸ் பாட்டி நினைவு நிகழ்வுகள்

சட்டம், நீதி, அமைதி, சம உரிமை, விடுதலை என்ற பல உயரிய கொள்கைகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் பாகிஸ்தான் நாட்டில், அக்கொள்கைகளை நிலைநாட்ட ஷபாஸ் பாட்டி அவர்கள் உழைத்தார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில், 2011ம் ஆண்டு, மார்ச் 2ம் தேதி மத அடிப்படை வாதிகளால் கொல்லப்பட்ட ஷபாஸ் பாட்டி (Shahbaz Bhatti) அவர்களின் நினைவு நிகழ்வுகள், நாட்டின் பல்வேறு இடங்களில் சிறப்பிக்கப்பட்டு வருகின்றன என்று, பீதேஸ் செய்தி கூறுகிறது.

தன் 42வது வயதில் கொல்லப்பட்ட ஷபாஸ் பாட்டி அவர்கள், 2008ம் ஆண்டு, பாகிஸ்தானில், சிறுபான்மையினரின் நலத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று, பணியாற்றினார். சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக, குறிப்பாக, கிறிஸ்தவர்களின் உரிமைகளுக்காக பாராளுமன்றத்தில் குரல் எழுப்பி வந்த ஷபாஸ் அவர்கள், 2011ம் ஆண்டு கொல்லப்பட்டார்.

மார்ச் 4, இப்புதனன்று, ஷபாஸ் அவர்கள் பிறந்த இடமான குஷ்பூர் கிராமத்திலும், இன்னும் பல இடங்களிலும் அவரது நினைவு நிகழ்வுகள் நடைபெற்றன என்றும், ஷபாஸ் அவர்கள் பிறந்த இல்லம், தற்போது, ஒரு கண்காட்சியகமாக மாறியுள்ளது என்றும் பீதேஸ் செய்தி கூறுகிறது.

சட்டம், நீதி, அமைதி, சம உரிமை, விடுதலை என்ற பல உயரிய கொள்கைகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் பாகிஸ்தான் நாட்டில், ஷபாஸ் பாட்டி அவர்கள் உண்மையான பாகிஸ்தான் குடிமகனாக வாழ்ந்து, அந்நாட்டின் உயர்ந்த கொள்கைகளை நிலைநாட்ட உழைத்தார் என்று, அவரது சகோதரரும், "ஷபாஸ் அறக்கட்டளை"யின் தலைவருமான, பால் பாட்டி (Paul Bhatti) அவர்கள், பீதேஸ் செய்தியிடம் கூறினார்.

ஷபாஸ் பாட்டி அவர்களை, அருளாளராக உயர்த்தும் பணிகள் இஸ்லாமாபாத்-இராவல்பிண்டி மறைமாவட்டத்தால் துவக்கப்பட்டுள்ளன என்பதும், அவர் தற்போது, இறையடியாராக கருதப்படுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கன. (Fides)

04 March 2020, 15:01