தேடுதல்

Vatican News
மும்பை இரயில் நிலையத்தில் நலப்பாதுகாப்பு அறிவுரை மும்பை இரயில் நிலையத்தில் நலப்பாதுகாப்பு அறிவுரை  (AFP or licensors)

குழந்தைகள் காப்பகங்களில் பார்வையாளர்கள் தடை

குழந்தைகள் நலனை, குறிப்பாக, சிறப்பான தேவைகள் அதிகம் உள்ள குழந்தைகள் நலனை மனதில் கொண்டு, குழந்தைகள் காப்பகங்களில் பார்வையாளர்களின் வருகை நிறுத்தப்பட்டுள்ளது - அன்னை தெரேசா அருள்சகோதரிகள்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

குழந்தைகள் நலனை, குறிப்பாக, சிறப்பான தேவைகள் அதிகம் உள்ள குழந்தைகள் நலனை மனதில் கொண்டு, குழந்தைகள் காப்பகங்களில் பார்வையாளர்களின் வருகை நிறுத்தப்பட்டுள்ளது என்று, மும்பை நகரில் பணியாற்றும் அன்னை தெரேசா அருள் சகோதரிகள் கூறியுள்ளனர்.

COVID-19 தொற்றுக்கிருமி, மும்பை நகரில் பரவியுள்ளதாக செய்திகள் வெளியானதையடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று, அன்னை தெரேசா அருள்சகோதரிகளின் மும்பை பகுதியின் தலைவர், அருள்சகோதரி தெரேசா ஜோசப் அவர்கள் ஆசிய செய்தியிடம் கூறினார்.

இந்த நெருக்கடியால், பார்வையாளர்களின் வருகை மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளது என்றும், சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகள் தொடர்ந்து இவ்வில்லங்களில் வரவேற்கப்படுகின்றனர் என்றும் அருள்சகோதரி ஜோசப் அவர்கள் தெளிவுபடுத்தினார்.

இந்த நோயின் காரணமாக துன்புறும் இவ்வுலகைக் கண்டு தியானிக்கவும், இவ்வுலக மக்களுக்காக, குறிப்பாக துன்புறும் வறியோருக்காக செபிக்கவும் இந்த நெருக்கடி வழியே, பிறரன்பு மறைப்பரப்புப் பணியாளர்கள் சபையின் உறுப்பினர்கள் அழைப்பு பெற்றுள்ளதாக, அருள்சகோதரி ஜோசப் எடுத்துரைத்தார்.

மும்பை நகரில், Vile Parle எனுமிடத்தில் உள்ள "Shishu Bhavan" இல்லத்தில், சிறப்புத் தேவைகள் உள்ள 30 குழந்தைகள் உள்ளனர் என்றும், தென் மும்பையின் Byculla பகுதியில் அமைந்துள்ள "Asha Daan" இல்லத்தில், சிறப்புத் தேவைகள் உள்ள 45 குழந்தைகள் உள்பட, 260 பேர் உள்ளனர் என்றும் ஆசிய செய்தி கூறுகிறது. (AsiaNews)

11 March 2020, 15:20