தேடுதல்

Vatican News
இத்தாலி கொரோனா தொர்றுக்கிருமி அவசரகாலநிலை இத்தாலி கொரோனா தொர்றுக்கிருமி அவசரகாலநிலை  (ANSA)

பாதிக்கப்பட்டுள்ள இத்தாலியுடன் ஒருமைப்பாடு

கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களோடு துணிச்சலுடன் சேவையாற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு தன் நன்றியை வெளியிட்டுள்ளார், முதுபெரும்தந்தை பார்த்தலேமேயு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கொரோனா தொற்றுக்கிருமியால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலிய மக்களுடன் தன்  ஒருமைப்பாட்டை வெளியிட்டு, சிறப்பு செய்தியொன்றை அனுப்பியுள்ளார் கான்ஸ்தாந்திநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு சபையின் முதுபெரும்தந்தை பார்த்தலேமேயு.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கும், இத்தாலிய அரசுத்தலைவர் செர்ஜியோ மத்தரெல்லா அவர்களுக்குமென முதுபெரும்தந்தை அனுப்பியுள்ள செய்தியில், இத்தாலிய மக்களுடன் தன் ஒருமைப்பாட்டை அறிவித்துள்ளதோடு, கோவிட்-19ஆல்  பாதிக்கப்பட்டிருக்கும் மக்களோடு துணிச்சலுடன் சேவையாற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு, தன் நன்றியையும் வெளியிட்டுள்ளார்.

தொற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்போருடனும், இந்நோயால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுடனும் தன்  அருகாமையை இச்செய்தியில்  வெளியிட்டுள்ள முதுபெரும் தந்தை பார்த்தலேமேயு அவர்கள், இந்நோயால் உயிரிழந்தோர், அவர்களின் குடும்பத்தினர், மற்றும், நண்பர்களுக்காக இத்தவக்காலத்தில் தொடர்ந்து செபிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கிருமியால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கையில் உலகில் இரண்டாவது இடத்திலும், இந்நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் முதலாவது இடத்திலும் இருக்கும் இத்தாலியில், இத்திங்கள் காலை வரை உள்ள புள்ளிவிவரங்களின்படி, 59,138 பேர் பாதிப்படைந்துள்ளனர், 5476 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

23 March 2020, 15:43