தேடுதல்

Vatican News
கோவிட்-19 சூழலில் பிலிப்பீன்ஸ் ஆலயம் கோவிட்-19 சூழலில் பிலிப்பீன்ஸ் ஆலயம்  (AFP or licensors)

மனிலா கத்தோலிக்கப் பள்ளிகள் வீடற்றவர்க்கு புகலிடங்கள்

கோவிட்-19 நெருக்கடிவேளையில், கத்தோலிக்கர் தங்களை மட்டுமல்ல, மற்றவரையும் நினைத்துப் பார்க்க வேண்டும், கொரோனா கொள்ளை நோய், பிறரன்பு என்ற தொற்றையும் உருவாக்க வேண்டும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 நெருக்கடியில், வீடற்றவர் மற்றும், நலவாழ்வுப் பணியாளர்களுக்கு, மனிலா நகரின் கத்தோலிக்கப் பள்ளிகள் திறந்துவிடப்பட்டுள்ளன என்று யூக்கா செய்தி கூறியது.

மனிலாவின் De la Salle பல்கலைக்கழகம், Malate கத்தோலிக்கப் பள்ளி, Paco கத்தோலிக்கப் பள்ளி, Holy Trinity பள்ளி, Espiritu Santo பங்குத்தளப் பள்ளி போன்றவை, வருகிற ஏப்ரல் 12ம் தேதி வரை, 500க்கும் அதிகமான தெருவில் வாழ்வோர் மற்றும், நலவாழ்வுப் பணியாளர்களுக்கு, தற்காலிக வீடுகளையும், உறங்கும் வசதிகளையும் அமைத்துக் கொடுத்துள்ளன.  

தங்கள் வீடுகளிலும் தஞ்சம் அளிப்பதற்கு இசைவு தெரிவித்துள்ள பெற்றோருக்கும், பள்ளி நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளார், மனிலா உயர்மறைமாவட்ட அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Broderick Pabillo.

வீடற்றவர், தெருவில் வாழ்பவர், மற்றும், நலப்பணியாளர்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு உதவியுள்ள பள்ளிகளின் இயக்குனர்களைப் பாராட்டியுள்ள ஆயர் Pabillo அவர்கள், தன்னார்வலர்கள் இவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை வழங்குவார்கள் என்றும் கூறியுள்ளார்.

கோவிட்-19 தொற்றுக்கிருமி முற்றிலும் ஒழிக்கப்பட்டபின், வகுப்பறைகள் சுத்தமாக வைக்கப்படும் என்றும், ஆயர் Pabillo அவர்கள், பெற்றோருக்கு உறுதியளித்துள்ளார்.

இதற்கிடையே, மனிலாவின் முன்னாள் பேராயரும், நற்செய்தி அறிவிப்புப் பேராயத் தலைவருமான கர்தினால் அந்தோனியோ லூயிஸ் தாக்லே அவர்கள், இந்நெருக்கடிவேளையில், கத்தோலிக்கர் தங்களை மட்டுமல்ல, மற்றவரையும் நினைத்துப் பார்க்க வேண்டும், கொரோனா கொள்ளை நோய், பிறரன்பு என்ற தொற்றையும் உருவாக்க வேண்டும் என்று, ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்ச் 26ம் தேதி நிலவரப்படி, பிலிப்பீன்சில் 707 பேர் கோவிட்-19 தொற்றுக்கிருமியால் தாக்கப்பட்டுள்ளனர். இதில் 45 பேர் இறந்துள்ளனர். (UCAN)

28 March 2020, 15:39