தேடுதல்

Vatican News
இத்தாலியின் வடபகுதியில் மருத்துவமனை ஒன்றில் நலப்பணியாளர்கள் இத்தாலியின் வடபகுதியில் மருத்துவமனை ஒன்றில் நலப்பணியாளர்கள்  (ANSA)

அன்புள்ள நலப்பணியாளர்களே - வெனிஸ் பேராயரின் மடல்

பொதுவாழ்வில் காட்டப்படவேண்டிய பொறுப்பு, அக்கறை, ஆகியவற்றிற்கும், மனிதகுலத்தின் ஒருங்கிணைப்பிற்கும், நலப்பணியாளர்களின் உழைப்பு, கலங்கரை விளக்காக இருந்து, மக்களுக்கு நம்பிக்கையூட்டுகிறது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மருத்துவர்களின் கடமை என்ற வரையறைகளை, எல்லைகளைத் தாண்டி, நலப்பணிகளில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள், தாதியர் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் அனைவரையும், தான் மனதாரப் பாராட்டுவதாக, வெனிஸ் பெருமறைமாவட்டத்தின் பேராயர், முதுபெரும்தந்தை பிரான்செஸ்கோ மொராலியா அவர்கள் ஒரு மடலில் கூறியுள்ளார்.

COVID-19 தொற்றுக்கிருமியின் நெருக்கடியை அதிக அளவில் சந்தித்து வரும் வெனிஸ் நகரில் பணியாற்றும் மருத்துவர்களுக்கும், நலப்பணியாளர்கள் அனைவருக்கும், மார்ச் 11, இப்புதனன்று, முதுபெரும் தந்தை மொராலியா அவர்கள், தன் ஆழ்ந்த நன்றியை, ஒரு மடலின் வழியே வெளியிட்டுள்ளார்.

அன்புள்ள மருத்துவர்களே, தாதியர்களே நலப்பணியாளர்களே என்று தன் மடலைத் துவக்கியுள்ள முதுபெரும் தந்தை மொராலியா அவர்கள், நலப்பணியில் ஈடுபட்டிருக்கும் அவர்களை தான் நேரடியாக அறிந்திராவிடினும், அவர்கள் ஆற்றும் பணியினால், அவர்களை தன் அன்புக்குரியவர்கள் என்றழைப்பதில் தான் பெருமைப்படுவதாக கூறியுள்ளார்.

பொதுவாழ்வில் காட்டப்படவேண்டிய பொறுப்பு, அக்கறை, ஆகியவற்றிற்கும், மனிதகுலத்தின் ஒருங்கிணைப்பிற்கும், நலப்பணியாளர்களின் உழைப்பு, கலங்கரை விளக்காக இருந்து, மக்களுக்கு நம்பிக்கையூட்டுகிறது என்று முதுபெரும் தந்தை மொராலியா அவர்கள், தன் மடலில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நெருக்கடி நீங்கியபின், வெனிஸ் நகரமும், இத்தாலிய சமுதாயமும், நலப்பணியாளர்களுக்கு தங்கள் ஆழ்ந்த நன்றியையும், பாராட்டுக்களையும் தகுந்த முறையில் வெளிப்படுத்துவார்கள் என்று தான் நம்புவதாக, வெனிஸ் பேராயர் மொராலியா அவர்கள் கூறியுள்ளார்.

வெனிஸ் நகர திருஅவை, நலப்பணியாளர்களையும், அவர்கள் குடும்பத்தினர் அனைவரையும் தன் செபங்களால் தாங்கி நிற்கிறது என்று தன் மடலின் இறுதியில் கூறியுள்ள முதுபெரும் தந்தை மொராலியா அவர்கள், நலவாழ்வின் அன்னையாம் மரியாவின் பரிந்துரையை நலப்பணியாளர்கள் அனைவருக்கும் தான் வேண்டுவதாகக் கூறி, இம்மடலை நிறைவு செய்துள்ளார்.

12 March 2020, 14:54