தேடுதல்

Vatican News
இந்தியாவில் குழந்தைகள் இணைந்து செபித்தல் இந்தியாவில் குழந்தைகள் இணைந்து செபித்தல் 

மார்ச் 25, நண்பகல் செபத்தில் திருத்தந்தையோடு இந்திய கிறிஸ்தவர்கள

இந்தியாவில் உள்ள கத்தோலிக்க தலத்திருஅவை, ஆர்த்தடாக்ஸ் பிரிவைச் சேர்ந்த சிரிய, கல்தேய, மலபார், மலங்கரா சபைகளும், லூத்தரன், பாப்டிஸ்ட், ஏவாஞ்செலிக்கல் கிறிஸ்தவ சபைகளும் திருத்தந்தையின் செப முயற்சியில் இணைந்தனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கொரோனா தொற்றுக்கிருமியைக் குறித்து இந்தியாவில் மக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர், இவ்வேளையில் நம் அனைவருக்கும் தேவையானது நம்பிக்கை நிறைந்த இறைவேண்டுதல், அந்த இறைவேண்டுதலை அனைவரும் இணைந்து மேற்கொள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்துள்ள அழைப்பில் இந்திய கிறிஸ்தவர்களும் அனைவரும் இணைகிறோம் என்று இந்தியாவின் வாசாயி பேராயர் பீலிக்ஸ் மச்சாடோ அவர்கள் ஆசிய செய்தியிடம் கூறினார்.

உலகெங்கும் வாழும் கத்தோலிக்கர்களும் கிறிஸ்தவர்களும் இணைந்து, இயேசு சொல்லித்தந்த "விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே" என்ற செபத்தை, மார்ச் 25, இப்புதன் நண்பகலில் சொல்வோம் என்று திருத்தந்தை விடுத்த அழைப்பை, இந்தியாவில் உள்ள கத்தோலிக்கர்களும், கிறிஸ்தவர்களும் ஏற்று செபித்தனர் என்று ஆசிய செய்தி கூறுகிறது.

இந்தியாவில் உள்ள கத்தோலிக்க தலத்திருஅவை, ஆர்த்தடாக்ஸ் பிரிவைச் சேர்ந்த சிரிய, கல்தேய, மலபார், மலங்கரா சபைகளும், லூத்தரன், பாப்டிஸ்ட், ஏவாஞ்செலிக்கல் கிறிஸ்தவ சபைகளும் இந்த முயற்சியில் இணைவதாக அறிவித்திருந்தனர்.

உரோம் உள்ளூர் நேரம் நண்பகல் 12 மணிக்கு, அதாவது, இந்திய நேரம் மாலை 4.30 மணிக்கு இந்த உலகளாவிய முயற்சியில் கிறிஸ்தவர்கள் இணைந்து வந்தனர்.

அதேவண்ணம், மார்ச் 27, வருகிற வெள்ளியன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 'ஊருக்கும், உலகுக்கும்' என்று பொருள்படும் Urbi et Orbi என்ற சிறப்பு ஆசீரை, உரோம் உள்ளூர் நேரம் மாலை 6 மணிக்கு, வழங்கவிருப்பதையடுத்து, அந்த நாளை, இறைவேண்டலின் நாளாக, இந்திய கிறிஸ்தவர்கள் கடைப்பிடிப்பர் என்று, இந்திய ஏவாஞ்செலிக்கல் கூட்டமைப்பின் தலைமைச் செயலர் விஜயேஷ் லால் அவர்கள் கூறியுள்ளார். (AsiaNews)

25 March 2020, 15:55