தேடுதல்

Vatican News
எருசலேமில் மூடிய ஆலயத்திற்குமுன் பிரான்சிஸ்கன் துறவியர் எருசலேமில் மூடிய ஆலயத்திற்குமுன் பிரான்சிஸ்கன் துறவியர்  (AFP or licensors)

கோவிட்-19: எருசலேமில் பல்சமயத்தவர் வழிபாடு

கொரோனா தொற்றுக்கிருமி பரவலையொட்டி, இஸ்ரேல் அதிகாரிகளின் விண்ணப்பத்தின்பேரில், எருசலேம் புனிதக் கல்லறை பசிலிக்கா மூடப்பட்டுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உலக அளவில் நெருக்கடியை உருவாக்கியுள்ள கோவிட்-19 கிருமியால் துன்புறும் எல்லாருக்காகவும், எருசலேமில், கிறிஸ்தவ, யூத, இஸ்லாம், Druze மற்றும் Bahai மதங்களின் தலைவர்கள் இணைந்து செபித்தனர்.

எருசலேம் புனித நகரத்தில் ஆபிரகாமின் மூன்று மதத்தவர் இணைந்து செபித்தது பற்றி வத்திக்கான் செய்தித் துறையிடம் கூறிய, புனித பூமி பிரான்சிஸ்கன் காவலர் அருள்பணி Francesco Patton அவர்கள், இந்நிகழ்வு எருசலேம் மேயரின் முயற்சியால் மார்ச் 26, இவ்வியாழன் பகல் 12.30 மணிக்கு நடைபெற்றது என்று தெரிவித்தார். 

இந்நிகழ்வு, மிக ஆழமான ஆன்மீக முக்கியத்துவத்தை எடுத்துரைத்தது என்றும், ஒவ்வொரு மதமும், தங்கள் மத மரபுப்படி, செபங்கள் செபித்தனர் என்றும், அருள்பணி Patton அவர்கள் கூறினார்.

எருசலேம் புனிதக் கல்லறை பசிலிக்கா

மேலும், கொரோனா தொற்றுக்கிருமி பரவலையொட்டி, இஸ்ரேல் அதிகாரிகளின் விண்ணப்பத்தின்பேரில், எருசலேம் புனிதக் கல்லறை பசிலிக்கா மூடப்பட்டுள்ளது என்றும், அருள்பணி Patton அவர்கள் கூறினார்.

இந்தப் பசிலிக்காவிற்குப் பொறுப்பான, அர்மேனிய, இலத்தீன் மற்றும், கிரேக்க ஆரத்தடாக்ஸ் கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், இந்த பசிலிக்காக விரைவில் திறக்கப்படும் என்று நம்புவதாகவும், இம்மூன்று சபைகளும் தொடர்ந்து இங்கு செபங்களை நடத்தும் என்றும், இந்த பசிலிக்காவில் திருப்பயணிகள் இன்றி வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. (AsiaNews)

27 March 2020, 15:49