தேடுதல்

Vatican News
திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள் பற்றிய ஆவணங்கள் திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள் பற்றிய ஆவணங்கள்  (AFP or licensors)

சாம்பலில் பூத்த சரித்திரம்: 20ம் நூற்றாண்டு திருத்தந்தையர்-12

திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், ஏறத்தாழ பத்து இலட்சம் யூதர்களை நாத்சிகளிடமிருந்து காப்பாற்றினார் - Pave the Way அமைப்பின் Gary Krupp

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை 12ம் பயஸ்-5

1933ம் ஆண்டுக்கும், 1945ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஜெர்மனியை ஆட்சிசெய்த நாத்சி கோட்பாட்டுத் தலைவர் அடால்ஃப் ஹிட்லர் அவர்கள், யூதர்கள் தாழ்த்தபட்ட இனம் என்றும், இந்த இனத்தவர், ஜெர்மன் இனத்தவரின் தூய்மைக்கும், அச்சமுதாயத்திற்கும் அச்சுறுத்தல் என்றும் எண்ணினார். அதன் எதிரொலியாக, ஐரோப்பாவில் வாழ்ந்த இலட்சக்கணக்கான யூதர்கள் திட்டமிட்டு வதைக்கப்பட்டனர் மற்றும், படுகொலை செய்யப்பட்டனர். ஹிட்லர், யூதர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பிற்கு, இறுதித் தீர்வாக, அவர் இரண்டாம் உலகப் போரைப் பயன்படுத்தினார். ஜெர்மனி ஆக்ரமித்திருந்த போலந்தில் அமைக்கப்பட்ட வதைமுகாம்களில், ஏறத்தாழ அறுபது இலட்சம் யூதர்கள், கொத்து கொத்தாகக் கொலை செய்யப்பட்டனர். மேலும், இன, அரசியல், கருத்தியல், மாற்றுத்திறன், ஓரினச்சேர்க்கை போன்ற காரணங்களுக்காக, இலட்சக்கணக்கான மற்ற மக்களும் கொலை செய்யப்பட்டனர்.

அத்தகைய கடினமானதொரு காலக்கட்டத்தில், திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள் (1939–1958), கத்தோலிக்கத் திருஅவையை  வழிநடத்தினார். இவர், யூதர்கள் படுகொலை செய்யப்பட்டதை தடுத்து நிறுத்துவதற்கு, நடவடிக்கை எடுக்கவில்லை, அதற்கு எதிராக கண்டனக் குரல் எழுப்பவில்லை, ஏன் அவர், “ஹிட்லரின் திருத்தந்தை” என்றுகூட குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2019ம் ஆண்டு மார்ச் மாதம் 4ம் தேதி, ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதாவது, திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள் பற்றிய அனைத்து இரகசிய ஆவணங்களும், அத்திருத்தந்தை தலைமைப்பணியேற்ற எண்பதாம் ஆண்டு நிறைவில் திறந்துவைக்கப்படும் என்று அறிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ். தனக்கு முந்தைய திருத்தந்தையர் பற்றிய ஆவணங்கள் பார்வையிடப்படுவதற்கு, ஒரு திருத்தந்தையால் மட்டுமே அனுமதி வழங்க முடியும். 1881ம் ஆண்டில், திருத்தந்தை 13ம் லியோ அவர்கள், 1815ம் ஆண்டு வரையுள்ள வத்திக்கான் ஆவணங்கள் திறந்துவிடப்பட அனுமதியளித்தார். 1921ம் ஆண்டில், திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள், இக்காலக்கட்டத்தை, 1830ம் ஆண்டு வரை நீட்டித்தார். அண்மைக் காலத்தில் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள் குறித்த ஆவணங்கள் திறந்து வைக்கப்பட அனுமதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரகசிய ஆவணங்கள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்த அறிவிப்பை வெளியிட்டபோது, திருஅவை வரலாறு பற்றி அச்சம் கொள்ளவில்லை, மாறாக, அதனை அன்புகூர்கின்றது, கடவுள் ஆற்றுவது போல, வரலாறை மேலும் மேலும் அன்பு கூர்கின்றது, எனக்கு முந்தைய திருத்தந்தையர் மீது நம்பிக்கை வைத்து, அவர்கள் பற்றிய ஆவணங்களை ஆய்வாளர்களுக்குத் திறந்து வைக்கிறேன் என்று கூறினார். அதன்படி, திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள் பற்றிய இரகசிய ஆவணங்கள், மார்ச் 2, இத்திங்கள் முதல், இந்த ஆய்வுக்கென விண்ணப்பித்த 85 ஆய்வாளர்களுக்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இதற்கு விரும்பி விண்ணப்பிக்கினறவர்களுக்கு ஆய்வு செய்வதற்குரிய நேரம் ஒதுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பீட செயலகம், திருப்பீடத்தின் பல்வேறு துறைகள், அலுவலகங்கள் போன்றவற்றின் காப்பகங்களிலிருந்து ஏறத்தாழ இருபதாயிரம் ஆவணப் பிரிவுகள் வரிசைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை, டிஜிட்டல் முறையில் வைக்கப்பட்டுள்ளன. ஏறத்தாழ 20 ஆண்டுகள் திருஅவையை வழிநடத்திச் சென்ற திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள் குறித்த அனைத்து ஆவணங்களையும் வரிசைப்படுத்தி, தலைப்பு வாரியாக பிரித்து ஒழுங்கமைக்க 14 ஆண்டுகள் எடுத்தன எனவும் கூறப்பட்டுள்ளது. வத்திக்கான் ஆவண காப்பகம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து இன்று வரையுள்ள ஆவணங்களைக் காத்துவருகிறது. இதன் அலமாரிகளை வரிசையாக அடுக்கினால், அது ஐம்பது மைல் தூரத்தை எட்டும் என்று கூறப்படுகிறது.

திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், போர்க் குற்றவாளிகள், விவசாயிகள், சுரங்கத் தொழிலாளர்கள், விளையாட்டு வீரர்கள், பத்திரிகையாளர்கள், விளையாட்டு உளவியலாளர்கள், மருத்துவர்கள், கலைஞர்கள், வானயியல் வல்லுனர்கள் போன்ற பலரைச் சந்தித்துள்ளார். இவற்றையெல்லாம், இவர் பற்றிய ஆவணங்கள் வெளிப்படுத்தும். மேலும், Gary Krupp என்பவர், தனது துணைவியார் Meredith அவர்களுடன் இணைந்து, Pave the Way அமைப்பை ஆரம்பித்து, இரண்டாம் உலகப் போரின்போது வத்திக்கானின் நடவடிக்கைகள் பற்றிய உண்மைகளை வெளியிடுவதற்கு உழைத்து வருகின்றார். இவ்விருவரும், மதங்களிடையே நிலவும் தடைகளை அகற்றி, நல்லுறவு நிலவ முயற்சித்து வருகின்றனர். திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், ஏறத்தாழ பத்து இலட்சம் யூதர்களை நாத்சிகளிடமிருந்து காப்பாற்றினார் என்று, ZENIT ஊடகத்திற்கு இவர்கள் அளித்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளனர்.

ஐரோப்பா

திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், இரண்டாம் உலகப் போருக்குப்பின், அப்போர் துவங்குவதற்கும், யூத இனப்படுகொலைக்கும் பொறுப்பான ஜெர்மனி குறித்த கருத்தியலை புறக்கணித்தார். அப்போரில் இடம்பெற்ற அளப்பரிய குற்றங்களைச் சுட்டிக்காட்டி, குற்றவாளிகள் தண்டனை பெற வேண்டும், போர்க்கால குற்றவாளிகள் அல்லது, மனித சமுதாயத்திற்கெதிராக குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று திருத்தந்தை வலியுறுத்தினார். நூரெம்பெர்க் விசாரணைகளுக்கு ஆதரவளித்தார்.   1945ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி, ஜெர்மனி முழுவதும் சரணனடைந்த பின்னரும், கூட்டணி நாடுகள், நாத்சி வதைமுகாம்களை, போர்க்கால கைதிகளுக்கும், புலம்பெயர்ந்தவர்களுக்குமென பயன்படுத்திவந்ததை, 1946ம் ஆண்டு ஜூன் மாதத்தில், திருத்தந்தை கேள்வி எழுப்பினார். போருக்குப்பின், நாடுகளின் எல்லைகள் மாற்றப்படுவதற்கு திருத்தந்தை ஆதரவளிக்கவில்லை. போலந்து-ஜெர்மனி எல்லை விவகாரம் போன்ற எல்லை விவகாரங்களில் திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், தலையிடவே இல்லை. அதேநேரம், இவர் ஒன்றிணைந்த ஐரோப்பாவுக்கு அழைப்பு விடுத்தார்.

கம்யூனிசத்தை எதிர்த்தவர்

திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், கம்யூனிசத்தையும், இத்தாலிய கம்யூனிச கட்சியையும் கடுமையாய் எதிர்த்தார். கம்யூனிசத்திற்கு எதிராக ஆணை பிறப்பித்து, கம்யூனிசக் கோட்பாடுளை அறிவிப்பவர்கள், கிறிஸ்தவ விசுவாசத்திலிருந்து பிறழ்கிறார்கள் என்று சொல்லி, அவர்களை கத்தோலிக்கத் திருஅவையை விட்டு விலக்குவதாக அறிவித்தார். இதற்குப் பதிலடியாக, கம்யூனிச நாடுகளில் கத்தோலிக்க அருள்பணியாளர்கள் மொத்தமாக நாடுகடத்தப்பட்டனர். திருஅவையும் கடுமையான சித்ரவதைகளுக்கு உள்ளானது. Munificentissimus Deus எனப்படும் திருத்தூது கொள்கை விளக்கத்தை வெளியிட்டு, மரியாவின் விண்ணேற்பு மறைக்கோட்பாட்டை அறிவித்தார். அதோடு திருத்தந்தையின் தவறா வரத்தையும் வலியுறுத்தினார். திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், ஏறத்தாழ ஆயிரம் உரைகள் ஆற்றியிருக்கிறார். வானொலி ஒலிபரப்புகளிலும் உரையாற்றியுள்ளார். இவர், திருஅவை, கிறிஸ்துவின் திருஉடல் என்பதை வலியுறுத்தும் Mystici corporis எனப்படும் திருமடல், திருவழிபாட்டில் சீர்திருத்தம் பற்றிய Mediator Dei எனப்படும் திருமடல், இறையியலாளர்கள், ஆயரின் போதனையைக் கடைப்பிடிப்பது பற்றிய Humani generis எனப்படும் திருமடல் உள்ளிட்ட 41 திருமடல்களை வெளியிட்டுள்ளார். கர்தினால்கள் அவையில் இத்தாலிய கர்தினால்கள் அதிகமாக இருப்பதை, 1946ம் ஆண்டில் குறைத்தார் திருத்தந்தை 12ம் பயஸ்.

தல மறைமாவட்டங்கள்

திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், 1951ம் ஆண்டு ஜூன் மாதம் 2ம் தேதி, Evangelii praecones என்ற திருமடலையும், 1957ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி Fidei donum என்ற திருமடலையும் வெளியிட்டு, கத்தோலிக்க மறைப்பணித் தளங்களில், தலத்திருஅவைகள் தீர்மானம் எடுப்பதை ஊக்குவித்தார். மேலும், உள்ளூர் கலாச்சாரத்தை, குறிப்பாக, ஆப்ரிக்காவில் அப்பகுதி கலாச்சாரத்தை அங்கீகரித்தார். தனக்கு முந்தைய திருத்தந்தையரைப் பின்பற்றி, இவரும், மறைப்பணித்தளங்களில், திருஅவை விவகாரங்களில், தல நிர்வாகம் உருவாக்கப்படுவதற்கு ஆதரவளித்தார் மற்றும், காலனி ஆதிக்கத்தைக் குறைத்தார். இதன் பயனாக, 1950ம் ஆண்டில், மேற்கு ஆப்ரிக்கா, 1951ம் ஆண்டில், தெற்கு ஆப்ரிக்கா, 1953ம் ஆண்டில் பிரித்தானிய கிழக்கு ஆப்ரிக்கா ஆகிய தலத்திருஅவைகள், காலனித் திருஅவைகளிலிருந்து விடுதலையடைந்தன. 1955ம் ஆண்டில், ஃபின்லாந்து, பர்மா, பிரெஞ்ச் ஆப்ரிக்கா ஆகியவை, தனிப்பட்ட மறைமாவட்டங்களாக மாறின. எனினும், அவை, நிதி தொடர்பாக, மேற்கத்திய திருஅவைகளைச் சார்ந்திருந்தன.

04 March 2020, 11:46