தேடுதல்

Vatican News
புனித திருத்தந்தை 23ம் ஜான், லொரேத்தோவில் 04.10.1962 புனித திருத்தந்தை 23ம் ஜான், லொரேத்தோவில் 04.10.1962 

சாம்பலில் பூத்த சரித்திரம்: 20ம் நூற்றாண்டு திருத்தந்தையர்-14

புனித திருத்தந்தை 23ம் ஜான், 1960ம் ஆண்டில் உரோம் வரலாற்றில் முதல் மாமன்றத்தைக் கூட்டினார். 1962ம் ஆண்டில் 2ம் வத்திக்கான் பொதுச் சங்கத்தைக் கூட்டினார். 1963ம் ஆண்டில் திருஅவை சட்டத்தைச் சீரமைக்க, பாப்பிறை குழு ஒன்றை உருவாக்கினார்.

மேரி தெரேசா: வத்திக்கான்

புனித திருத்தந்தை 23ம் யோவான் (ஜான்) -1

திருத்தந்தை 12ம் பயஸ் அவர்களுக்குப்பின், 1958ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி, கர்தினால்கள் அவை, 76 வயது நிரம்பிய கர்தினால் ஆஞ்சலோ ஜூசப்பே ரொன்காலி அவர்களைத் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுத்தது. அவரும் திருத்தந்தை 23ம் ஜான் என்ற பெயரை ஏற்றார். கர்தினால் ரொன்காலி அவர்கள், திருஅவையின் தலைமைப்பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அவரின் வயதைப் பார்த்து, இவர் இடைக்கால திருத்தந்தையாக இருப்பார் என்று பலர், அவரின் புகழை சந்தேகத்தோடே நோக்கினர். ஆனால் 76வது வயதில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், திருஅவையின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக இருப்பார், திருஅவையில் ஒரு புதிய யுகத்தைத் தொடங்குவார் என்ற எண்ணம் எல்லாருக்கும் உதித்திருக்க வாய்ப்பில்லை. இயேசுவின் வருகையைத் தயார்செய்த திருமுழுக்கு யோவான், மற்றும், அன்புமிக்க சீடர், நற்செய்தியாளர் யோவான், ஆகிய இருவரையும் மதிக்கும் முறையில், ஜான் அதாவது யோவான் என்ற பெயரைத் தெரிவுசெய்து ஐந்தே ஆண்டுகளில் திருஅவையில் புதியதொரு காற்றை வீசச் செய்தவர், புனித திருத்தந்தை 23ம் யோவான் (1958-1963). திருஅவையின் தலைமைப்பணியை குறுகிய காலமே ஆற்றிய, யோவான் என்ற பெயரை ஏற்ற திருத்தந்தையரின் நீண்ட பட்டியலிலேயே இவரும் இணைய விரும்பி, அந்தப் பெயரையேத் தெரிந்தெடுத்தார்.

அருள்பணி ரொன்காலி

ஆஞ்சலோ ஜூசப்பே ரொன்காலி அவர்கள், 1881ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி, இத்தாலியின் பெர்கமோ மறைமாவட்டத்திலுள்ள Sotto il Monte என்ற ஊரில், விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். இவரது குடும்பம் மிகவும் வறிய நிலையில் இருந்தது என்று சொல்வது உண்மையல்ல. “எங்களது குடும்பம், வாழ்வுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கொண்டிருந்தது” என்று, இவரே கூறியிருக்கிறார். 13 பிள்ளைகளைக் கொண்ட இவரது குடும்பத்தில் இவர் மூன்றாவது பிள்ளை. தனது சொந்த ஊரிலே ஆரம்பக் கல்வியை முடித்த இவர், 12வது வயதில், பெர்கமோவில் அருள்பணித்துவப் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்தார். Cerasoli அறக்கட்டளை (1901) கல்வி உதவித்தொகை அளித்ததால், இவர், உரோம் நகர் சென்று அப்போலினாரிஸ் கல்வி நிறுவனத்தில் சேர்ந்தார். இத்தாலிய இராணுவத்தில் பணியாற்றவேண்டியிருந்ததால், படிப்பை இடையிலேயே நிறுத்தினார். பின்னர் மீண்டும் படிப்பைத் தொடர்ந்து, இறையியலில் முனைவர் பட்டம் பெற்றார். 1904ம் ஆண்டில் அருள்பணியாளராகத் திருப்பொழிவு பெற்ற இவர், திருஅவை சட்டப் படிப்பைத் தொடர்ந்தார். பெர்கமோ மறைமாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஆயர் Giacomo Radini-Tedeschi அவர்களுக்கு செயலராக நியமிக்கப்பட்டார், அருள்பணி ரொன்காலி. அவரிடம் பணியாற்றிய ஒன்பது ஆண்டு காலக்கட்டத்தில், அந்த ஆயரின் சமுதாயநலப் பார்வையில் அனுபவம் பெற்றார். உழைக்கும் மக்களின் பிரச்சனைகளைப் புரிந்துகொண்டார், அருள்பணி ரொன்காலி. கோட்பாட்டு இயல், திருஅவை வரலாறு, திருஅவை தந்தையர் ஆகிய பாடங்களையும் இவர் போதித்தார்.      

1915ம் ஆண்டில் இத்தாலி முதல் உலகப்போரில் இணைந்ததை முன்னிட்டு, அருள்பணி ரொன்காலி அவர்கள், இராணுவத்தில் ஆன்மீகப் பணியாற்றச் சென்றார். 1918ம் ஆண்டில் அப்பணியை நிறைவுசெய்து திரும்பிய அவர், பெர்கமோ அருள்பணித்துவப் பயிற்சி நிறுவனத்தில் ஆன்மீக இயக்குனராக நியமிக்கப்பட்டார். அச்சமயத்தில், பெர்கமோவில் மாணவர்களுக்கு விடுதி ஒன்றைத் தொடங்கினார். அக்காலக்கட்டத்தில்தான், புனித சார்லஸ் பொரோமேயோ அவர்கள், ஆயராக, பெர்கோமோவைப் பார்வையிட்டது பற்றிய ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டார். இந்த ஆய்வுகளின் கடைசி தொகுப்பு, இவர், திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபின் வெளியிடப்பட்டது. 1921ம் ஆண்டில் இவர், உரோம் நகரில் பணியாற்ற அழைக்கப்பட்டார். அச்சமயத்தில், விசுவாசப் பரப்பு கழகத்தை சீரமைக்கும் பணி இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. 1925ம் ஆண்டில் பேராயராக அறிவிக்கப்பட்டு, பல்கேரியாவுக்கு திருத்தந்தையின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். அச்சமயத்தில், உடனடியாக கீழை வழிபாட்டுமுறை திருஅவைகளின் பிரச்சனைகளைப் புரிந்துகொண்டு அச்சபைகளின் மீது கரிசனை காட்டினார். 1934ம் ஆண்டு துருக்கி மற்றும் கிரீஸ் நாடுகளுக்கு, திருத்தந்தையின் பிரதிநிதியாக அனுப்பப்பட்டார். துருக்கி சென்றவுடன், இஸ்தான்புல் நகரில், போர்க் கைதிகளுக்கென ஓர் அலுவலகத்தை அமைத்தார்.

பேராயர் ரொன்காலி

பேராயர் ரொன்காலி அவர்கள், 1944ம் ஆண்டில், பாரிஸ் நகருக்கு திருப்பீட தூதராக அனுப்பப்பட்டார். பிரான்சில், போருக்குப்பின் திருஅவை மேற்கொண்டுவந்த முயற்சிகளுக்கு உதவுமாறு அங்கு அவர் பணிக்கப்பட்டார். மேலும் அவர், பாரிசிலுள்ள ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும், கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவுக்கு, திருப்பீடத்தின் நிரந்தர பிரதிநிதியானார். யுனெஸ்கோவில், 1951 மற்றும், 1952ம் ஆண்டுகளில் நடந்த ஆறாவது மற்றும், ஏழாவது பொது அவைகளில், திருப்பீட பிரிதிநிதியாக உரையாற்றினார். இவர், 1953ம் ஆண்டில், கர்தினாலாக உயர்த்தப்பட்டு, இத்தாலியின் வெனிஸ் உயர்மறைமாவட்ட முதுபெரும்தந்தையாக நியமிக்கப்பட்டார். 1958ம் ஆண்டில், வெனிஸ் நகரில் நடந்த முதல் மறைமாவட்ட மாமன்றத் தீர்மானங்களைச் சரிபார்த்துக்கொண்டிருந்த சமயத்தில், திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கான்கிளேவ் எனப்படும் கர்தினால்கள் அவையில் கலந்துகொள்ள உரோம் நகருக்கு அழைக்கப்பட்டார், கர்தினால் ஆஞ்சலோ ரொன்காலி. இவர் அந்த அவையில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திருத்தந்தை 23ம் யோவான் என்ற பெயரையும் தெரிவு செய்தார்.

திருத்தந்தையாக, இவர் பொதுவில் ஆற்றிய முதல் உரையில், பிரிந்த கிறிஸ்தவ சபைகள் ஒன்றிணைய வேண்டும், உலகில் அமைதி நிலவ வேண்டும் என்ற ஆவலை வெளியிட்டார். திருத்தந்தையாகத் திருநிலைப்படுத்தப்பட்ட நிகழ்வில், தான் ஒரு மேய்ப்புப்பணி திருத்தந்தையாகப் பணியாற்ற விரும்புவதாக அறிவித்தார். திருத்தந்தை 4ம் சிக்ஸ்துஸ் காலத்தில் எழுபதாக இருந்த கர்தினால்கள் அவையின் எண்ணிக்கையை, நான்கு ஆண்டுகளுக்குள் 87 ஆக உயர்த்தினார். திருத்தந்தையாகப் பணியேற்ற 3 மாதங்களுக்குள், உரோம் மறைமாவட்டத்திற்கு, மாமன்றத்தையும் உலகளாவிய திருஅவைக்கு பொதுச் சங்கத்தையும் கூட்டவும்,  திருஅவை சட்டத்தை சீரமைக்கவும் விரும்புவதாக அறிவித்தார். 1960ம் ஆண்டில் உரோம் வரலாற்றில் முதல் மாமன்றத்தைக் கூட்டினார். 1962ம் ஆண்டில் 2ம் வத்திக்கான் பொதுச் சங்கத்தைக் கூட்டினார். 1963ம் ஆண்டில் திருஅவை சட்டத்தைச் சீரமைக்க, பாப்பிறை குழு ஒன்றை உருவாக்கினார். 1963ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி புனித திருத்தந்தை 23ம் யோவான் அவர்கள் இறந்த செய்தி கேட்டு, "குடும்பத்தில் ஓர் இறப்பு" என்று உலகம் கண்ணீர் சிந்தியது.            

18 March 2020, 10:12