தேடுதல்

Vatican News
கொல்கத்தாவில் கோவிட்-19லிருந்து காப்பாற்ற உதவும் விளம்பரம் கொல்கத்தாவில் கோவிட்-19லிருந்து காப்பாற்ற உதவும் விளம்பரம்   (AFP or licensors)

இந்திய காரித்தாஸ்-கோவிட்-19 எச்சரிக்கை நடவடிக்கை

புனித வெள்ளியன்று திருச்சிலுவையை முத்தி செய்ய வேண்டாம், கொரோனா தொற்றுக்கிருமியால் தாக்கப்பட்ட மக்களுடன் தொடர்புகொண்டவர்கள், இரு வாரங்களுக்கு பொது வழிபாடுகளில் கலந்துகொள்ள வேண்டாம்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கொரோனா தொற்றுக்கிருமி அச்சுறுத்தலை முன்னிட்டு அவசரகால நடவடிக்கையை மேற்கொள்ளவும், இச்சூழலை எவ்வாறு சந்திப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்துவதற்கு, நாடு தழுவிய அவசரகால கூட்டம் ஒன்றை கூட்டவும் இந்திய கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு திட்டமிட்டு வருகிறது.

இந்த திட்டம் குறித்து ஆசியச் செய்தியிடம் தெரிவித்த, இந்திய காரித்தாசின் தேசிய இயக்குனர் அருள்பணி Paul Moonjely அவர்கள், இந்திய ஆயர்களின் கத்தோலிக்க பிறரன்பு அமைப்பான காரித்தாஸ், ஏற்கனவே, கொரோனா தொற்றுக்கிருமி நெருக்கடி உருவாக்கியுள்ள அவசரகால சேவையில் ஈடுபட்டுள்ளது என்று எடுத்துரைத்தார்.  

காரித்தாஸ் அமைப்பு, இந்நெருக்கடியை யாரும் தனியாக எதிர்கொள்ள விட்டுவிடாது எனவும், ஒதுக்குப்புறங்களிலுள்ள சமுதாயங்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆதரவுதர திட்டமிட்டிருப்பதாகவும், அருள்பணி Moonjely அவர்கள் தெரிவித்தார்.

இந்த தொற்றுக்கிருமியின் ஆபத்தைக் குறைப்பதற்குரிய, தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு, காரித்தாஸ் அமைப்பின் பொதுத்தொடர்பு அலுவலக நிர்வாகி Patrick Hansda அவர்கள், ஏற்கனவே அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் என்றும், அருள்பணி Moonjely அவர்கள் கூறினார்

வழிபாடுகளில் விசுவாசிகள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்று ஏற்கனவே ஆயர்கள் செய்திகளை வெளியிட்டுள்ளனர் என்றும், புனித வெள்ளியன்று திருச்சிலுவையை முத்தி செய்ய வேண்டாமென்றும், இந்நோயால் தாக்கப்பட்ட மக்களுடன் தொடர்புகொண்ட யாரும், இரு வாரங்களுக்கு பொது வழிபாடுகளில் கலந்துகொள்ள வேண்டாமென்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர் என்று காரித்தாஸ் இயக்குனர் கூறினார். (AsiaNews)

17 March 2020, 15:01