தேடுதல்

Vatican News
மறைந்த வேலூர் ஆயர் சவுந்தரராஜ் அவர்கள் மறைந்த வேலூர் ஆயர் சவுந்தரராஜ் அவர்கள் 

வேலூர் ஆயர் சவுந்தரராஜ் இறைவனடி சேர்ந்தார்

இறைவனடி சேர்ந்த வேலூர் ஆயர் சவுந்தரராஜ் அவர்கள், 36 ஆண்டுகள் அருள்பணியாளராகவும், 13 ஆண்டுகள் ஆயராகவும் பணியாற்றியுள்ளார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

தமிழகத்தின் வேலூர் மறைமாவட்ட ஆயர் சவுந்தரராஜ் பெரியநாயகம் அவர்கள், மார்ச் 21, இச்சனிக்கிழமை அதிகாலையில் கடுமையான மாரடைப்பால் தாக்கப்பட்டு உயிரிழந்தார் என்பதை வருத்தத்துடன் அறிவிக்கிறோம்.

சலேசிய சபையைச் சேர்ந்த, எழுபது வயது நிரம்பிய ஆயர் சவுந்தரராஜ் அவர்கள்,   திருவண்ணாமலை மாவட்டம், Kolappalurல், 1949ம் ஆண்டு ஜூன் மாதம் 6ம் தேதி பிறந்தார். பள்ளிப்படிப்பை முடித்து சலேசிய சபையில் சேர்ந்த இவர், 1970ம் ஆண்டு மே மாதம் 24ம் தேதி முதல் வார்த்தைப்பாட்டை எடுத்தார். இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் 1983ம் ஆண்டு ஜூன் மாதம் 25ம் தேதி அருள்பணித்துவ வாழ்வுக்காகத் திருநிலைப்படுத்தப்பட்டார். 2006ம் ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி வேலூர் மறைமாவட்டத்தின் ஆறாவது ஆயராக நியமிக்கப்பட்ட இவர், அதே ஆண்டு  ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி ஆயராக அருள்பொழிவு செய்யப்பட்டார்.

மறைந்த வேலூர் ஆயர் சவுந்தரராஜ் அவர்கள், திருப்பத்தூர் இயேசுவின் திருஇதய கல்லூரியில் பொருளாதாரயியலில் இளங்கலைப்பட்டமும், சென்னை இலொயோலா கல்லூரியில், முதுகலைப்பட்டமும் பெற்றவர்.

பிரித்தானியாவில் Durham பல்கலைக்கழகத்தின் Ushaw கல்லூரியில் இறையியலில் முதுகலைப்பட்டமும், திருச்சி புனித யோசேப்பு தன்னாட்சி கல்லூரியில் பொருளாதாரயியலில் முனைவர் பட்டமும் பெற்றிருப்பவர், ஆயர் சவுந்தரராஜ்.

இவர், திருப்பத்தூர் இயேசுவின் திருஇதய கல்லூரியில், பேராசிரியர் மற்றும், உதவி முதல்வராகவும் (1983-1988, 1991-1994), அதே கல்லூரியில் முதல்வராகவும் (1994-2000), சென்னை பெரம்பூர் புனித லூர்து அன்னை திருத்தலத்தில் அதிபர் மற்றும், பங்குத்தந்தையாகவும் (2001-2004), வேலூர் காந்தி நகர் தொன்போஸ்கோ மையத்தில் தலைவராகவும் (2004-2006) பணியாற்றியுள்ளார்.

ஆயர் அவர்களின் இறுதிச் சடங்கு, மார்ச் 25, வருகிற புதன்கிழமை காலை பத்து மணிக்கு, வேலூர் விண்ணரசி பேராலயத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. (Ind.Sec./Tamil)

21 March 2020, 15:28