தேடுதல்

Vatican News
ஈராக்கில் கொரோனா தொற்றுக்கிருமி தடுப்பு நடவடிக்கை ஈராக்கில் கொரோனா தொற்றுக்கிருமி தடுப்பு நடவடிக்கை  (ANSA)

ஈராக்கில், கோவிட்-19 நெருக்கடி போரைவிட மோசம்

ஈராக்கில் போர்களும், வன்முறைகளும் இடம்பெற்றுள்ளன, ஆனால், இத்தகைய கடுமையான மற்றும், கட்டுப்பாடான ஊரடங்கு சட்டத்தை நாட்டு மக்கள் எதிர்கொண்டதே கிடையாது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கொரோனா தொற்றுக்கிருமி நெருக்கடி, போரைவிட மோசமாக உள்ளது என்றும், இக்கிருமி முன்வைக்கும் கடுமையான ஆபத்து குறித்து, ஈராக் மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் உள்ளனர் என்றும், பாக்தாத் கல்தேய வழிபாட்டுமுறை திருஅவை அதிகாரி ஒருவர் கூறினார்.

ஈராக்கில் போர்களும், வன்முறைகளும் இடம்பெற்றுள்ளன, ஆனால், இத்தகைய கடுமையான மற்றும், கட்டுப்பாடான ஊரடங்கு சட்டத்தை நாட்டு மக்கள் எதிர்கொண்டதே இல்லை என்று, பாக்தாத் துணை ஆயர் Shlemon Audish Warduni அவர்கள் கூறியுள்ளார்.

அண்மை நாள்களில் ஈராக் அரசு மேற்கொண்டுள்ள கடுமையான நடவடிக்கைகள் குறித்து ஆசியச் செய்தியிடம் பேசிய, ஆயர் Warduni அவர்கள், கொரோனா தொற்றுக்கிருமி புதிதாகப் பரவாமல் இருப்பதைத் தடை செய்வதற்காக, ஈராக் மத்திய அரசு, மார்ச் 17, இச்செவ்வாய் முதல், மார்ச் 24ம் தேதி வரை, பாக்தாத் நகரில் ஊரடங்குச் சட்டத்தை அறிவித்துள்ளது என்று கூறியுள்ளார்

ஆலயங்கள், மசூதிகள் மற்றும் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதைக் காணும் மக்கள், வேதனையிலும், அச்சத்திலும் உள்ளனர், அவர்களிடம் துணிச்சலை உருவாக்க வேண்டியது முக்கியம் என்றுரைத்த ஆயர் Warduni அவர்கள், குடும்பங்கள் மெல்ல மெல்ல தங்களைத் தனிமைப்படுத்தத் தொடங்கியுள்ளன மற்றும், செபிக்கின்றன என்றும் கூறினார். கொரோனா தொற்றுக்கிருமி அச்சத்திலிருந்து வெளிவருவதற்கு சிறந்த மருந்து செபம் என்றும் ஆயர் தெரிவித்தார்.

ஈராக்கில் கோவிட்-19 தொற்றுக்கிருமியால், 124 பேர் தாக்கப்பட்டுள்ளனர், இவர்களில் குறைந்தது பத்துப் பேர் இறந்துள்ளனர் என்று, அந்நாட்டு நலவாழ்வு அமைச்சகம் அறிவித்துள்ளது. பாக்தாத் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து புறப்படும் மற்றும், அங்கு வருகின்ற அனைத்து விமானச் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

ஈராக் நாடு, முப்பது நாள்களுக்கு அவசரகால நிலையை அறிவிப்பதற்கும் தயாராகி வருகிறது என்று ஆசியச் செய்தி கூறுகிறது. (AsiaNews)

17 March 2020, 15:21