தேடுதல்

Vatican News
ஜப்பானின் டோக்கியோவில் ஜப்பானின் டோக்கியோவில்  (AFP or licensors)

செபத்தால் ஒன்றித்திருப்பதை எவரும் தடைசெய்ய முடியாது

மக்கள் அனைவரும் செபத்தில் ஒன்றித்திருப்பதைக் காணும்போது, தீமையிலும் ஒரு நன்மை பிறந்துள்ளதை உணர முடிகிறது என்கிறார் டோக்கியோ பேராயர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

பெரிய ஆலயங்களில் வழிபாடுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளபோதிலும், மக்கள் அனைவரும் செபத்தில் ஒன்றித்திருப்பதைக் காணும்போது, தீமையிலும் ஒரு நன்மை பிறந்துள்ளதை உணர முடிகிறது என்றார், ஜப்பானின் டோக்கியோ பேராயர்.

கொரோனா தொற்றுநோயால் நாம் எவரும் தனிமைப்படுத்தப்படவில்லை, மாறாக, அனைவரும் செபத்தால் ஒன்றித்திருக்கிறோம் என்பதை தன் உயர்மறைமாவட்ட மக்களுக்கு கூறி வருவதாக உரைத்த பேராயர் Tarcisio Isao Kikuchi அவர்கள், திருப்பலியை நிறைவேற்றமுடியா என்ற முடிவை எடுப்பது வெகு கடினமான ஒன்று என்றார்.

மக்கள், குறிப்பாக, முதியவர்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்கும் நோக்கத்தில் கடந்த மாதம் 27ம் தேதி முதல் பெரிய ஆலயங்களில் வழிபாடுகளை நிறுத்தியுள்ள ஜப்பான் தலத்திருஅவை, சிறிய குழுக்களின் பங்கேற்புடன் திருமணம், மற்றும், அடக்கச் சடங்குகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

தொற்றுநோய் பாதிப்பின் காரணமாக ஆலய வழிபாடுகள் நிறுத்தப்பட்டுள்ளபோதிலும், ஆன்மீகமுறையில் ஒன்றிணைந்து செபிப்பதை எவரும் தடைசெய்யமுடியாது என்ற பேராயர் Kikuchi அவர்கள், கோவிட்-19க்கு எதிரான சிறந்த ஆன்மீகப் பதிலுரையாக  செபம்  இருக்க முடியும் என்றார்.

திருப்பலிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதை ஒரு தோல்வியாக நோக்காமல், நம் ஆன்மீக வாழ்வை செபம் வழியாக பலப்படுத்துவதற்குரிய வாய்ப்பாக நோக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் பேராயர்.

ஜப்பான் நல அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படியே, அதிலும் குறிப்பாக, முதியோர், மற்றும், பலவீனமானவர்களுக்கு இந்நோய் தொற்றுவதை தடுக்கும் நோக்கிலேயே, கோவில் வழிபாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார் டோக்கியோ பேராயர் Kikuchi. (AsiaNews)

 

24 March 2020, 15:50