தேடுதல்

Vatican News
உலக துறவு சபை தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர், அருள்சகோதரி Jolanta Kafka. உலக துறவு சபை தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர், அருள்சகோதரி Jolanta Kafka. 

மார்ச் 22 – உலகளாவிய செபம் மற்றும் ஒன்றிப்பின் நாள்

கொரோனா கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டிருப்போருக்காக உலக அளவில் செபிப்பதற்கு, வரும் ஞாயிறை, அதாவது, மார்ச் 22ம் தேதியை, ஒருமைப்பாட்டின் நாளாக அறிவித்துள்ளது, உலக பெண் துறவியர் கூட்டமைப்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கொரோனா கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டிருப்போருடன் ஒருமைப்பாட்டை அறிவிக்கவும், அவர்களுக்காக உலக அளவில் செபிப்பதற்கும், வரும் ஞாயிறை, அதாவது, மார்ச் 22ம் தேதியை, ஒருமைப்பாட்டின் நாளாக அறிவித்துள்ளது, உலக பெண் துறவியர் கூட்டமைப்பு.

கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருப்போரையும், மற்றும், இந்நோய்க்கு உள்ளாக்கப்படும் ஆபத்திலிருக்கும் பலவீனர்களையும் மனதில் கொண்டு, இஞ்ஞாயிறன்று, சிறப்பான விதத்தில் செபித்து, தங்கள் ஒருமைப்பாட்டை அறிவிக்குமாறு, அனைத்து பெண் துறவியருக்கும் ஒரு காணொளிச் செய்தி வழியே அழைப்பு விடுத்துள்ளார், உலக துறவு சபை தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர், அருள்சகோதரி Jolanta Kafka.

உலக சுகாதார அமைப்பு, மற்றும், அவரவர் நாடுகள் முன்வைக்கும் வழிகாட்டுதல்களை பின்பற்றி நடப்பதுடன், ஒருமைப்பாடு, அக்கறை, மற்றும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய சிறப்பு நேரம் இது என அருள்சகோதரி Jolanta Kafka அவர்கள் எடுத்துரைத்தார்.

நோயுற்றோருடன் ஒருமைப்பாட்டை அறிவிக்கும் அதேவேளை, நோயுற்றோரிடையே பணியாற்றுவோர், இத்தொற்றுநோயின் தீர்வுகள் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டிருப்போர், பொதுநலப்பணிகளில் ஈடுபட்டிருப்போர் ஆகியோருக்கு நன்றியையும், தாராளமனத்தையும் வெளிப்படுத்தும் நாளாகவும், இஞ்ஞாயிறை சிறப்பிப்போம் என, மேலும் தன் செய்தியில் கூறியுள்ளார், உலக துறவு சபை தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர், அருள்சகோதரி Kafka.

19 March 2020, 15:17