தேடுதல்

Vatican News
மறைசாட்சி அருளாளர் தேவசகாயம் பிள்ளை மறைசாட்சி அருளாளர் தேவசகாயம் பிள்ளை  

வாரம் ஓர் அலசல் – யாரும் புனிதராகலாம்

மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை அவர்களை, 1752ம் ஆண்டு, சனவரி 14ம் தேதி, ஆரல்வாய்மொழியில் உள்ள காற்றாடி மலை என்னும் இடத்தில் சுட்டுக்கொன்று, அவரது உடலை காட்டிலே எறிந்தனர்.

மேரி தெரேசா: வத்திக்கான்

உங்கள் வாழ்வின் இலட்சியம் என்னவென்று யாராவது கேட்டால், வாழ்வை அனுபவித்தல், வாழ்வில் உயர்நிலையை எட்ட முயற்சித்தல், பிறருக்கு உதவி செய்தல், துறவறம் மேற்கொள்தல்... இவ்வாறு ஒவ்வொருவரும் பல்வேறு பதில்களை வைத்திருப்பீர்கள். ஒருசிலர் இந்தக் கேள்விக்குப் பதிலில்லாமல் திகைக்கவும் செய்வர். வாழ்வில் எவ்வித நோக்கமின்றி வாழ்வோரை வள்ளுவப் பெருந்தகையும், நிலையாமை என்ற அதிகாரத்தில், ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப, கோடியும் அல்ல பல. அதாவது “அறிவில்லாதவர்கள் ஒருபோதும் தாங்கள் எதற்காக வாழ்கிறோம் என்பதை ஆராய்வதே இல்லை, ஆயினும், அவர்களது இதர ஆய்வுகள் கோடிக்கணக்கில் உள்ளன” (குறள் 337) என்று சாடுகிறார். கொள்கைப்பிடிப்புள்ளவர்கள், எந்த ஓர் இக்கட்டிலும் தடம் மாறமாட்டார்கள், அதற்காக உயிரையும் காவுகொடுக்கத் தயங்கமாட்டார்கள். அவ்வாறு வாழ்ந்த தியாகச் செம்மல்களை, உலகம் தலைமுறை தலைமுறையாகப் போற்றி தன் நன்மதிப்பையும் வழங்கி வருகிறது. இதில் மதம், இனம், நிறம், மொழி என்ற பாகுபாடே கிடையாது. கிறிஸ்தவமும், இவ்வாறு புண்ணியப் பண்புகளில் வாழ்ந்து மறைந்தவர்களை, கிறிஸ்தவ நம்பிக்கைக்காக உயிர்த் தியாகம் செய்தவர்களை, புனிதர்களாக அறிவித்து, அவர்கள் வாழ்வுமுறையை எல்லாரும் பின்பற்றி வாழவும் அழைப்பு விடுக்கின்றது.

தேவசகாயம் பிள்ளையின் பரிந்துரையால் புதுமை

பிப்ரவரி 21, இவ்வெள்ளியன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் தமிழக மறைசாட்சி அருளாளர் தேவசகாயம் பிள்ளை அவர்களை, புனிதர்நிலைக்கு உயர்த்துவதற்கு அனுமதியளித்துள்ளார். கத்தோலிக்கத் திருஅவையில் ஒருவர் அதிகாரப்பூர்வமாக புனிதராக அறிவிக்கப்படுவதற்கு, சில படிநிலைகள் உள்ளன. கிறிஸ்து மீது கொண்டிருந்த அசையாப் பற்றுறுதி காரணமாக கொலைசெய்யப்பட்டவர்களும், இதே காரணத்திற்காக சிறைகளில் உடல் மற்றும் மனத்தளவில் கடுமையான சித்ரவதைகளை அனுபவித்து, விடுதலையானபின் உயிர்துறப்பவர்களும் மறைசாட்சிகள் என அழைக்கப்படுகின்றனர். இவர்களின் உறுதியான கிறிஸ்தவ வாழ்வுமுறை மற்றும், மறைசாட்சியத்தை தீர ஆராய்ந்து பார்த்த பின்னர், அவர்கள், அருளாளர் என்ற நிலைக்கு  உயர்த்தப்படுகின்றனர். ஆனால் அவர்கள் புனிதர்களாக அறிவிக்கப்படுவதற்கு, அவர்களின் பரிந்துரையால் குறைந்தது ஒரு புதுமை நடந்திருக்க வேண்டும். ஒருவர் நோயினின்று குணம் அடைந்ததாகச் சொல்லப்படும் புதுமை, மருத்துவமுறைப்படி குணமாக்க முடியாததாக இருக்க வேண்டும். இது உண்மையாகவே புதுமைதானா என்பதை, வத்திக்கானில் புனிதர்நிலை பேராயம் நியமித்துள்ள ஒரு குழு தீர ஆராயும். அருளாளர் தேவசகாயம் பிள்ளை அவர்களின் பரிந்துரையால் நடைபெற்ற ஒரு புதுமையும் இவ்வாறு பல ஆண்டுகள் ஆராயப்பட்டு, அது புதுமைதான் என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அருளாளர் தேவசகாயம் பிள்ளை அவர்களை, புனிதர்நிலைக்கு உயர்த்தும் வழிமுறைகளுக்கு, உரோம் நகரில் வேண்டுகையாளராகப் பணியாற்றிவரும் அருள்பணி முனைவர் எல்பின்ஸ்டன் அவர்கள், அப்புதுமை பற்றிச் சொல்லியுள்ளார்.

தேவசகாயம் பிள்ளையின் மனமாற்றம்

மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை அவர்கள், 1712ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ம் தேதி,  கன்னியாகுமரி மாவட்டம், நட்டாலம் என்ற ஊரில், பாரம்பரிய இந்துமத நாயர் குலத்தில் பிறந்தார். நீலகண்ட பிள்ளை என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், சமஸ்கிருதம், வில்வித்தை, வர்ம கலைகள், போர் ஆயுதங்களைப் பயன்படுத்தும் முறைகள் போன்ற பலவற்றைக் கற்றுத்தேர்ந்தார். இவர் பத்மநாபபுரம் கோட்டையில், மார்த்தாண்ட வர்மாவின் அரண்மனையில் பணியில் சேர்ந்தார். இவர், பர்கவியம்மாள் என்பவரைத் திருமணமும் செய்துகொண்டார். 1741ம் ஆண்டில் குளச்சல் துறைமுகத்தைக் கைப்பற்ற வந்த டச்சு படைகள், மார்த்தாண்ட வர்மாவின் படைகளால் தோற்கடிக்கப்பட்டன. டச்சு படைத்தலைவர், பெனடிக்டுஸ் தே டிலனாய் அவர்களும், அவருடைய படைவீரர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். நாளடைவில் டிலன்னாய் அவர்களும், நீலகண்ட பிள்ளை அவர்களும் நண்பராயினர். ஒருநாள் நீலகண்ட பிள்ளை மிகுந்த சோகமாய் இருப்பதைக் கண்ட அவர் நலம் விசாரித்தார். அப்போது நீலகண்ட பிள்ளை அவர்கள், தனது குடும்பத்தில் நிறைய கவலைக்குரிய நிகழ்வுகள் நடந்துவருவதாகக் கூறினார். அப்போது டிலனாய் அவர்கள், திருவிவிலியத்தில் யோபுவின் கதையை சொல்லி, அவருக்கு கிறித்தவத்தை அறிமுகப்படுத்தினார். கிறித்தவத்தின் மீது நல்லெண்ணம் வளரவே, திருமுழுக்குப் பெற்றார் நீலகண்ட பிள்ளை. "தேவசகாயம்" என்னும் பொருள்படும் "இலாசர்" என்னும் பெயரால் திருநீராட்டப்பட்டார். அதற்குப்பின், தேவசகாயம் பிள்ளை அவர்கள், பலரிடமும் இயேசு கிறிஸ்துவைப் பற்றிப் போதித்து, பலரை கிறிஸ்தவ மதத்திற்கு மனம் மாற்றினார்.

மறைசாட்சியம்

தேவசகாயம் பிள்ளை அவர்கள், இந்து நாயர் குடும்பங்களில் இருந்த மூட நம்பிக்கைகளை எதிர்த்தார். எனவே இவருக்கெதிராகப் பல பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இவர் தனது கிறித்தவ விசுவாசத்தில் உறுதியாக இருப்பதைக் கண்ட மன்னர் மார்த்தாண்ட வர்மா அவர்கள், அவருக்கு மரண தண்டனை விதித்து, சிறையில் அடைத்தார். அவருடைய உடம்பில் கரும்புள்ளியும், செம்புள்ளியும் குத்தப்பட்டன. கைகள் பின்புறமாகச் சங்கிலிகளால் கட்டப்பட்டு கழுத்தில் எருக்கம் பூ மாலை அணிவிக்கப்பட்டு, எருமை மாட்டின் மீது பின்னோக்கி அமரவைத்து கேவலப்படுத்தும் படியாகவும் கிறிஸ்தவத்திற்கு மாறினால் இப்படித்தான் மற்றவருக்கும் இருக்கும் என்பதற்கு பாடமாகவும் அவரை ஊர்ஊராக அழைத்துச் சென்றார்கள். இறுதியில், அவரை, 1752ம் ஆண்டு, சனவரி 14ம் தேதி, ஆரல்வாய்மொழியில் உள்ள காற்றாடி மலை என்னும் இடத்தில் சுட்டுக்கொன்று, அவரது உடலை காட்டிலே எறிந்தனர். குமரி மாவட்ட கத்தோலிக்கர், அவரது உடல் பகுதிகளை எடுத்து, நாகர்கோவிலில் உள்ள கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தில் நல்லடக்கம் செய்தனர். அவர், முட்டிடிச்சான் பாறையில் சிறையில் இருந்தபோது, குடிநீருக்காக ஏங்கி, தன் முழங்காலால் பாறையைத் தட்ட அவ்விடம் குழிந்து நீர்ஊற்று தோன்றியது என்று சொல்கிறார்கள். அவர் கொல்லப்பட்டபோது ஒரு பாறை பிளந்து விழுந்து மணியோசை எழுப்பியதால், அது, மணியடிச்சான் பாறை என்றும் அழைக்கப்படுகிறது. அன்றிலிருந்து இன்றுவரை இப்புனிதரிடம் நம்பிக்கையோடு மன்றாடும் பலர், பலனோடு செல்கின்றனர். 

மறைசாட்சி Rutilio Grande

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 21, இவ்வெள்ளியன்று, எல் சால்வதோர் நாட்டில் 1977ம் ஆண்டு மார்ச் மாதம் 12ம் தேதி கிறிஸ்தவ விசுவாசத்திற்காகக் கொல்லப்பட்ட இயேசு சபை அருள்பணி மறைசாட்சி Rutilio Grande García அவர்கள், மற்றும், அவரது இரு பொதுநிலைத் தோழர்களின் புண்ணிய வாழ்வு பற்றிய விவரங்களையும் ஏற்றுக்கொண்டார். சமுதாய நீதிக்காக உரத்த குரல் எழுப்பிய மறைசாட்சி Rutilio அவர்கள், எல் சால்வதோரில் உள்நாட்டுப் போர் தொடங்குவதற்குமுன் கொல்லப்பட்ட முதல் அருள்பணியாளர் ஆவார். 1928ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி எல் சால்வதோர் நாட்டின் El Paisnal எனும் கிராமத்தில் பிறந்த Rutilio Grande அவர்கள், 1945ம் ஆண்டு இயேசு சபையில் சேர்ந்து, வெனெசுவேலா, ஈக்குவதோர், இஸ்பெயின், பெல்ஜியம் உட்பட சில நாடுகளில் பயிற்சி பெற்று, 1959ம் ஆண்டில் அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். அருள்பணித்துவ மாணவர்களுக்கு மேய்ப்புப்பணி பயிற்சி, ஆன்மீக அன்பியங்களைத் தொடங்கியது, விவசாயிகளின் வளர்ச்சிக்கு உழைத்தது உட்பட, இவர் ஆற்றிய பல்வேறு சமுதாயநலப் பணிகளால், எல் சால்வதோரை ஆட்சிசெய்த நிலப்பண்ணையாளர் குழுவால் குறி வைக்கப்பட்டார். இவர் பொதுப்படையாக சித்ரவதைக்கு உள்ளானார். இறுதியில் இவர், 72 வயது நிரம்பிய வேதியர் Manuel Solórzano, 16 வயது நிரம்பிய Nelson Rutilio Lemus ஆகிய இருவருடன் புனித யோசேப் விழா நவநாள் பக்தி முயற்சிக்காக தனது கிராமத்திற்குச் சென்ற வழியில் தாக்கப்பட்டார். இவர், அச்சமயம் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த மூன்று சிறாரையும் வாகனத்தின் பின்புறம் ஏற்றிக்கொண்டு சென்றார். ஒரு குழு, இவர்களது வாகனத்தை ஓரம்கட்டி, துப்பாக்கியால் சுட்டதில் முதல் மூவரும் உயிரிழந்தனர். சிறார் தப்பிச் சென்றனர். அருள்பணி Rutilio அவர்கள் உடம்பை 12 குண்டுகள் துளைத்திருந்தன. அவரது மரணம், அவரது நண்பரான, சான் சால்வதோர் பேராயர் ஆஸ்கர் ரொமேரோ அவர்களின் வாழ்வையும், மறைப்பணியையும் தலைகீழாக மாற்றியது. இந்த மறைசாட்சிகளுக்காகத் திருப்பலிகளை நிறைவேற்றிய பேராயர் ரொமேரோ அவர்கள், அருள்பணி Rutilio அவர்கள் கொல்லப்பட்டது குறித்து அதிகாரப்பூர்வ விசாரணை இடம்பெற வேண்டுமென்று எல் சால்வதோர் அரசுக்கு அழைப்பு விடுத்தார். இறுதியில் இவரும் 1980ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி, திருப்பலி நிறைவேற்றிக்கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார்.

மறைசாட்சிகள், இயேசு போன்று, அன்பிற்காக, அன்போடு வாழ்ந்ததற்காக, தங்கள் வாழ்வைப் பலிகொடுத்தவர்கள். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியது போன்று, புனிதர்கள் என்பவர்கள் மனித சக்திக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல, அவர்கள் மிக சாதாரணமானவர்கள். தங்கள் இதயத்தில் இறைவனை அன்புகூர்ந்து அதில் கிடைத்த மகிழ்வை, அனுபவத்தை பிறருக்கு அறிவித்தவர்கள். இறைவழியில் நடந்து, அதில் வரும் இன்னல்களை பொறுமையோடு ஏற்று வாழ்ந்தவர்கள். எனவே நாமும் நம் வாழ்வை இறைவழியில் நெறிப்படுத்தி வாழ்ந்தால் புனிதராகலாம்.  

வாரம் ஓர் அலசல் – யாரும் புனிதராகலாம்
24 February 2020, 15:51