தேடுதல்

Vatican News
வியட்நாமில் முக கவசம் வாங்க காத்திருக்கும் மக்கள் வியட்நாமில் முக கவசம் வாங்க காத்திருக்கும் மக்கள்  (ANSA)

கொரோனா கிருமி நோயாளிகளிடம் கிறிஸ்தவ அன்பு

கொரோனா நோய்க் கிருமிகள் பரவாமல் தடுப்பதற்கு உதவும், வாயை மூடும் கவசங்களை விற்பதில் கத்தோலிக்கர் இலாபம் தேட வேண்டாம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

கொரோனா தொற்றுக் கிருமியால் தாக்கப்பட்ட நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதில் நீதியோடு நடந்துகொள்ளுமாறும், மருத்துவப் பொருட்களை விநியோகிப்பதில் ஆதாயத்தைத் தேடாமல் இருக்குமாறும் வியட்நாம் கத்தோலிக்க ஆயர்கள், கத்தோலிக்கரைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

வியட்நாமின் Ha Tinh ஆயர் Paul Nguyen Thai Hop அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த உலகம் கொரோனா தொற்றுக்கிருமியால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், இந்த இக்கட்டான நேரத்தில், கிறிஸ்தவர்கள், இந்நோயால் தாக்கப்பட்டவர்கள் மீது கிறிஸ்தவ அன்பைக் காட்டுமாறும் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா நோய்க் கிருமிகள் பரவாமல் தடுப்பதற்கு உதவும், வாயை மூடும் கவசம் அதிகம் தேவைப்படுகின்றது என்றும், இக்கவசங்கள் அதிக விலையில் விற்கப்படும் சூழலில், கத்தோலிக்கர், இவற்றை விற்பதில் இலாபம் தேட வேண்டாம் என்றும், ஆயர் Paul Nguyen அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

வியட்நாமின் Ho Chi Minh நகில் பெருமளவான மருந்தகங்கள், தங்களிடம் கவசங்கள் இல்லையென அறிவித்துள்ள நிலையில், 1,50,000 கவசங்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக, Tan Son Nhat பன்னாட்டு விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், Ho Chi Minh நகர பேராயர் Joseph Nguyen Nang அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில், மக்களின் துன்பங்களை வைத்து பணம் திரட்டும் பேராசை மற்றும், தன்னலத்தைக் கைவிடுமாறு கூறியுள்ளார். 

மனித சமுதாயம் இத்தகைய இக்கட்டான சூழல்களில், ஒருவர் ஒருவரை அன்புகூரவும், தாராள மனதுடன் செயல்படவும் வேண்டுமென்று செபிப்போம் எனவும், பேராயர் Joseph Nguyen Nang அவர்கள் கூறியுள்ளார். (UCAN)

11 February 2020, 14:48