தேடுதல்

Vatican News
கானானியப் பெண் ஒருவர் இயேசுவிடம் வந்து, "ஐயா, தாவிதீன் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்" எனக் கதறினார் - மத்.15,22 கானானியப் பெண் ஒருவர் இயேசுவிடம் வந்து, "ஐயா, தாவிதீன் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்" எனக் கதறினார் - மத்.15,22 

விவிலியத்தேடல்: சிந்தும் சிறு துண்டுகள் போதும் 4

பாவிகள் என்று இஸ்ரயேல் மக்களால் முத்திரை குத்தப்பட்டு, ஒதுக்கி வைக்கப்பட்ட 'கானான்' இனத்தைச் சேர்ந்த ஒரு தாய், தீய ஆவி பிடித்த தன் மகளைக் குணமாக்கும்படி இயேசுவைத் தேடிவந்தார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

விவிலியத்தேடல்: சிந்தும் சிறு துண்டுகள் போதும் 4

இயேசு ஆற்றிய புதுமைகளில், மூன்று புதுமைகளைத் தவிர, ஏனைய அனைத்துமே, அவரது சொந்த இனத்தவரான இஸ்ரயேல் மக்கள் நடுவே ஆற்றப்பட்டன. நூற்றுவர் தலைவரின் பணியாளை இயேசு குணமாக்கியது (மத். 8:5-13; லூக். 7:1-10; யோவா. 4:43-54), அன்னியரான ஒருவர் உட்பட, பத்து தொழுநோயாளரை இயேசு குணமாக்கியது (லூக். 17:11-19), மற்றும், கடந்த சில வாரங்களாக, நாம் சிந்தித்துவரும் கானானியப் பெண்ணின் மகளை இயேசு குணமாக்கியது (மத். 15:21-28; மாற். 7:24-30) ஆகிய இம்மூன்று மட்டுமே, புறவினத்தாருக்காக இயேசு ஆற்றிய புதுமைகளாகச் சொல்லப்பட்டுள்ளன.

தன் மகளின் நலம் வேண்டி, இயேசுவைத் தேடிவந்த தாய், சிரிய பெனிசிய இனத்தைச் சேர்ந்த ஒரு கிரேக்கப்பெண் என்று நற்செய்தியாளர் மாற்கு குறிப்பிட்டிருக்க (மாற்கு 7:26), நற்செய்தியாளர் மத்தேயுவோ, அவரை, ஒரு கானானியப் பெண் (மத். 15:22) என்று குறிப்பிட்டுள்ளார்.

விவிலியத்தில், பயன்படுத்தப்பட்டுள்ள 'கானான்' என்ற சொல், இருவேறு பொருள்களை உணர்த்துகிறது. ‘வாக்களிக்கப்பட்ட நாடு’, மற்றும், ‘சபிக்கப்பட்ட இனம்’ என்ற, எதிரும் புதிருமான எண்ணங்களைக் குறிக்க, 'கானான்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆபிரகாமுக்கு இறைவன் வழங்கிய ஒரு வாக்குறுதியில், "நீ தங்கியிருக்கும் நாட்டையும் கானான் நாடு முழுவதையும் என்றுமுள்ள உரிமைச் சொத்தாக உனக்கும் உனக்குப்பின் உன் வழி மரபினருக்கும் வழங்குவேன். நான் அவர்களுக்குக் கடவுளாக இருப்பேன்" (தொ.நூ. 17:8) என்று கூறுவதாக, தொடக்க நூலில் காண்கிறோம். (காண்க. வி.ப. 6:4; லேவி. 25:38; இணை. 32:49; தி.பா. 105:11) அதே வேளையில், நோவா, தன் பேரன்களில் ஒருவரான கானான், ஏனையோருக்கு அடிமையாக இருப்பார் என்று சபிப்பதும் தொடக்க நூலில் கூறப்பட்டுள்ளது. அப்பொழுது நோவா, "கானான் சபிக்கப்பட்டவன்; தன் சகோதரருக்கு அவன் அடிமையிலும் அடிமையாக இருப்பான்" என்றார். (தொ.நூ. 9:25).

சபிக்கப்பட்டவர்கள், பாவிகள் என்று இஸ்ரயேல் மக்களால் முத்திரை குத்தப்பட்டு, ஒதுக்கி வைக்கப்பட்ட 'கானான்' இனத்தைச் சேர்ந்த ஒரு தாய், தீய ஆவி பிடித்த தன் மகளைக் குணமாக்கும்படி இயேசுவைத் தேடிவந்தார். அப்பெண், 'தம் மகளிடமிருந்து பேயை ஒட்டிவிடுமாறு இயேசுவை வேண்டினார்' (காண்க. மாற். 7:26) என்று, நற்செய்தியாளர் மாற்கு, சுருக்கமாகக் கூறியிருப்பதை, நற்செய்தியாளர் மத்தேயு, இன்னும் சிறிது விரிவாகக் கூறியுள்ளார்: கானானியப் பெண் ஒருவர் இயேசுவிடம் வந்து, "ஐயா, தாவிதீன் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்" எனக் கதறினார் (மத்தேயு 15:22) என்பவை, மத்தேயு நற்செய்தியில் நாம் காணும் அறிமுகச் சொற்கள்.

கானானியப் பெண், இயேசுவிடம் கூறும் முதல் கூற்று, நம் கவனத்தை ஈர்க்கிறது. அவர் இயேசுவை, "ஐயா, தாவீதின் மகனே எனக்கு இரங்கும்" என்ற சொற்களில் வேண்டுவது, நற்செய்திகளில் கூறப்பட்டுள்ள வேறு மூன்று நிகழ்வுகளில், "தாவீதின் மகனே எனக்கு இரங்கும்" என்று எழுப்பப்பட்டள்ள வேண்டுதலை நினைவுக்குக் கொணர்கிறது.

பார்வையற்ற ஒருவர், அல்லது, இருவர், இயேசுவிடம் இந்தச் சொற்களைப் பயன்படுத்தியதாக, நாம் ஒத்தமை நற்செய்திகள் மூன்றிலும் காண்கிறோம். (மத். 9:27-31; 20:29-34; மாற். 10:46-52; லூக். 18:35-42) 'தாவீதின் மகனே' என்று பார்வையற்றவர்கள் பயன்படுத்திய அதே அடைமொழியை, கானானியப் பெண்ணும் பயன்படுத்தியுள்ளார்.

இயேசுவை, 'தாவீதின் மகன்' என்று குறிப்பிடுவதில், நற்செய்தியாளர் மத்தேயு தனி கவனம் செலுத்தியுள்ளார் என்பதை அறிவோம். இந்நற்செய்தியின் துவக்கத்தில், அவர் வழங்கியுள்ள இயேசுவின் மூதாதையர் பட்டியலை, "ஆபிரகாமின் மகனும் தாவீதின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்" (மத். 1:1) என்று ஆரம்பித்துள்ளார்.

இஸ்ரயேல் மக்களின் குலப்பெருமையை நிலைநாட்டும் இரு பெரும் நாயகர்களான ஆபிரகாம், தாவீது ஆகியோரின் வழித்தோன்றலாக இயேசு பிறந்தார் என்ற கருத்தை, ஆணித்தரமாக அறிவித்து, புனித மத்தேயு தன் நற்செய்தியைத் துவக்கியுள்ளார். அதற்கு அடுத்த நிலையில், இயேசுவை, 'மேசியா' என்றும், 'மீட்பர்' என்றும் குறிப்பிட, 'தாவீதின் மகன்' என்ற அடைமொழி பயன்படுத்தப்பட்டுள்ளது.

இயேசுவை, தாவீதின் வழித்தோன்றல் என்ற அளவில் மட்டும் காண்பதற்கு, வரலாற்றுக் கண்ணோட்டம் போதுமானது. ஆனால், தாவீதின் மகன் என்ற அடைமொழி வழியே, அவரை, 'மீட்பராகவும்' 'மெசியாவாகவும்' ஏற்றுக்கொள்வதற்கு, வரலாற்றுக் கண்ணோட்டத்தைத் தாண்டி, நம்பிக்கைக் கண்ணோட்டம் தேவை. இந்த நம்பிக்கை கண்ணோட்டத்தை, பார்வையற்ற இருவரும், வேற்றினத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும், கொண்டிருந்தனர் என்று, புனித மத்தேயு, தன் நற்செய்தியில் வெளிப்படுத்தியிருப்பது, நம்மை, சிந்திக்கத் தூண்டுகிறது.

தங்கள் முற்சார்பு எண்ணங்களாலும், மூடப்பட்ட மனநிலையாலும் இயேசுவில் தங்கள் மீட்பரைக் காண இயலாமல், இஸ்ரயேல் மக்களும் அவர்களின் மதத்தலைவர்களும் தடுமாறிய வேளையில், இயேசுவை, மீட்பர் என்று அறிக்கையிடும் கருவிகளாக, பார்வையற்ற மனிதர்கள், மற்றும், புறவினத்தைச் சேர்ந்த பெண் ஆகியோரை, நற்செய்தியாளர் மத்தேயு பயன்படுத்தியிருப்பது, நாம் இயேசுவைக் காணும் நம்பிக்கைக் கண்ணோட்டத்தை ஆய்வு செய்ய அழைப்பு விடுக்கிறது.

'தாவீதின் மகனே' என்ற அடைமொழி வழியே, தன் நம்பிக்கையை பறைசாற்றியக் கானானியப் பெண், அதைத் தொடர்ந்து, "என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்" எனக் கதறினார் (மத். 15:22).

தன் மகளை இயேசு குணமாக்கவேண்டும் என்று, அவரிடம், விண்ணப்பம் எதையும் எழுப்பாமல், தன் மகளின் குறையை மட்டும் எடுத்துரைக்கும் இப்பெண்ணின் கூற்று, நம் நினைவுகளை, கானா ஊரில் நிகழ்ந்த புதுமைக்கு அழைத்துச் செல்கிறது. அங்கு, திருமண விருந்தில் ஏற்பட்ட ஒரு குறையை, அன்னை மரியா இயேசுவிடம் கூறியதாக நாம் வாசிக்கிறோம். அங்கு நிகழ்ந்ததை, யோவான் நற்செய்தி இவ்வாறு கூறுகிறது: இயேசுவின் தாய் அவரை நோக்கி, “திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது” என்றார். (யோவான் 2: 3-4)

"திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" என்று அன்னை மரியா கூறியதை, பல இறையியலாளர்கள், அழகானதொரு செபம் என்று கூறுகின்றனர். இரசம் தீர்ந்துவிட்டது என்பது, சாதாரணமான, எதார்த்தமான ஒரு கூற்று. அதை, செபம் என்ற கோணத்தில் எண்ணிப்பார்க்க நாம் தயங்கலாம். ஆனால், ஆழமாகச் சிந்தித்தால், இது ஓர் அழகிய செபம் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

செபம் என்றதும், இது வேண்டும், அது வேண்டும் என்ற நீண்ட பட்டியல் ஒன்று நம் உள்ளத்தில் விரியும். இல்லையா? கடவுளிடம் நீண்ட பட்டியல்களை அனுப்புவதற்கு பதில், உள்ளத்தைத் திறந்து வைப்பது, உண்மைகளைச் சொல்வது ஆகியவை இன்னும் அழகான செபங்கள். இத்தகையச் செபத்தைச் சொல்வதற்கு, ஆழ்ந்த நம்பிக்கை வேண்டும். நமது தேவைகளை, நம்மைவிட, நம் இறைவன் நன்கு அறிவார்; அவரிடம் குறையைச் சொன்னால் போதும்; என்ற எண்ணத்துடன், “இதோ நான், இவ்வளவுதான் நான்” என்று, நம் உண்மை நிலையை எடுத்துச் சொல்வதற்கு, நிறைவான நம்பிக்கை வேண்டும்.

நம் உண்மை நிலையை எடுத்துச் சொல்வது, எவ்விதம் செபமாகும் என்பதைப் புரிந்துகொள்ள, நம் இல்லங்களில் நிகழ்வதை, ஒரு கற்பனைக்காட்சியாகக் காண முயல்வோம். காலை வேளையில், வீட்டுத்தலைவர், ஒரு செய்தித்தாளைப் படித்தபடி, வீட்டின் முன்புறம் அமர்ந்திருக்கிறார். வீட்டுத்தலைவி காப்பி கலக்க சமையலறைக்குள் செல்கிறார். சர்க்கரை தீர்ந்துவிட்டது என்பதை உணர்கிறார். அங்கிருந்தபடியே, "என்னங்க, சக்கர தீந்துடுச்சுங்க" என்கிறார். இதன் பொருள் என்ன? ‘தயவு செய்து, செய்தித்தாளை கீழே வைத்துவிட்டு, கடைக்குப் போய், சர்க்கரை வாங்கி வாருங்கள்’ என்பதுதானே? வீட்டுத்தலைவர் சட்டையை மாட்டிக்கொண்டிருக்கும்போது, "ஆங்... சொல்ல மறந்துட்டேன். அரிசியும் தீந்துடுச்சுங்க" என்று சொல்கிறார் வீட்டுத்தலைவி. தலைவன், இக்குறைகளைத் தீர்க்க, என்ன செய்வார் என்று, தலைவிக்குத் தெரியும். அந்த நம்பிக்கையில் சொல்லப்பட்ட உண்மைகள் இவை. அன்னை மரியாவும் கானா திருமண விருந்தில், இப்படி ஓர் உண்மையை இயேசுவுக்கு முன் வைக்கிறார் - "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது."

அன்னை மரியா எழுப்பிய அந்த விண்ணப்பத்தை ஒத்திருந்தது, "என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்" என்று கானானியப் பெண் எழுப்பிய விண்ணப்பம். இயேசுவை, 'தாவீதின் மகன்' என்ற அடைமொழியால் அழைத்து, தன் நம்பிக்கையை பறைசாற்றிய அதே மூச்சில், அப்பெண், தன் மகளின் நிலையை மட்டும் எடுத்துரைக்கிறார். அவர் இச்சொற்களைக் கூறும்போது, 'கதறினார்' என்று நற்செய்தியாளர் மத்தேயு கூறியிருப்பது, அந்த அன்னையின் உள்ளத்தில் இருந்த வேதனையை வெளிக்கொணர்கிறது.

அந்த அன்னையின் கதறலுக்கு இயேசு வழங்கும் பதிலுரை நம்மை அதிர்ச்சியடையச் செய்கிறது. ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை. சீடர்கள் அவரை அணுகி, "நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும்" என வேண்டினர். (மத்தேயு 15:23)

'தாவீதின் மகனே' என்ற நம்பிக்கை அறிக்கையுடன், அப்பெண் எழுப்பியக் கதறலுக்கு இயேசு வழங்கிய மௌனமும், அப்பெண்ணை அனுப்பிவிடும்படி சீடர்கள் இயேசுவிடம் கூறியதும், பார்வையற்றவர், இயேசுவிடம் எழுப்பிய வேண்டுதலை நம் நினைவுக்குக் கொணர்கின்றன. பார்வையற்றவர், இயேசுவை, 'தாவீதின் மகனே' என்றழைத்தபோது, இயேசு உடனடியாக பதில் அளிக்கவில்லை. எனவே, பார்வையற்றவர் இன்னும் உரக்கக் கத்தினர் என்றும், "பேசாதிருக்குமாறு பலர் அவரை அதட்டினர்" (மாற்கு 10:48) என்றும் நாம் வாசிக்கிறோம்.

இதையொத்த சூழலே, கானானியப் பெண்ணுக்கும் உருவானது. கடினமான இச்சூழலைத் தொடர்ந்து, அந்த அன்னைக்கும், இயேசுவுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலை, நாம், அடுத்தத் தேடலில், தொடர்ந்து சிந்திப்போம்.

04 February 2020, 14:47