தேடுதல்

அலகை இயேசுவை மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச் சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டியது - மத்தேயு 4,8 அலகை இயேசுவை மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச் சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டியது - மத்தேயு 4,8 

தவக்காலம் முதல் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை

கடவுளாக மாறுவதற்கு, அலகை, இயேசுவைத் தூண்டுகிறது. ஆனால், இயேசுவோ, கடவுள் மட்டுமே தன் மையம் என்பதை, உறுதியாக நிலைநாட்டுகிறார்

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

தவக்காலம் முதல் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை

இந்த ஞாயிறு சிந்தனையை செவிமடுக்க வந்திருக்கும் நம் இதயங்களை, COVID-19 என்ற தொற்றுக்கிருமியைப்பற்றிய செய்திகள், ஏதோ ஒருவகையில் கவலைகொள்ளச் செய்துள்ளன. கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம், சீனாவில் துவங்கிய இந்த தொற்றுக்கிருமி, தற்போது உலகின் பல நாடுகளில் பரவியுள்ளதை அறிவோம்.

இந்நோயைக் குறித்து ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும், பல்வேறு செய்திகள் பரவி வருகின்றன. வழக்கம்போல், ஒரு சில ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும், பொறுப்பற்ற முறையில், வதந்திகளையும் பரப்பி வருகின்றன.

இயற்கைப் பேரிடர்கள், தோற்று நோய்கள், கலவரங்கள், போர்கள், என்று, உலகில் எந்த ஒரு துயர நிகழ்வு இடம்பெற்றாலும், அவற்றைக்குறித்து ஊடகங்கள் பதிவு செய்யும் செய்திகளில், பங்குச்சந்தையின் மதிப்பு உயர்ந்துள்ளதா, தாழ்ந்துள்ளதா என்ற கணிப்பும் ஒரு முக்கிய இடம் பெறுகிறது.

உலகில் நிகழும் அனைத்தையும், மார்க்கெட், பங்குச்சந்தை என்ற இரு கண்ணாடிகளை அணிந்து பார்ப்பது நமக்குப் பழக்கமாகிவிட்டதென்றால், நம் அகப்பார்வையில் குறை உள்ளது என்பதை முதலில் உணரவேண்டும். அந்தக் குறையை நீக்க, நாம் ஓர் ஆன்ம ஆய்வை மேற்கொள்வது நல்லது. ஆன்மாவை ஆய்வு செய்வதற்கும், அங்குள்ள குறைகளை நீக்குவதற்கும், தவக்காலம், தகுந்ததொரு காலம்.

நாம் ஆன்ம ஆய்வு மேற்கொள்ளத் தேவையான கேள்விகளை, CNS (Catholic News Service) கத்தோலிக்க இதழில் பணியாற்றும், கெவின் பெர்னோத்தா (Kevin Pernotta) என்ற எழுத்தாளர், தன் ஞாயிறு சிந்தனைக் கட்டுரையில் வழங்கியுள்ளார். "தவக்காலத்தைத் துவக்க ஓர் ஆரம்பிக் கேள்வி" (A starter question for Lent) என்ற தலைப்பில் அவர் பகிர்ந்துள்ள கருத்துக்களில் ஒரு சில இதோ:

"இன்றைய முதல் வாசகம் (தொ.நூ. 2:7-9, 3:1-7) ஒவ்வொரு மனிதரும் வாழ்வில் சந்திக்கும் ஒரு முக்கியக் கேள்வியை, ஒரு கதையின் வடிவில் வழங்குகிறது. 'நான் எவ்வழியில் வாழப்போகிறேன் - கடவுள் வழியிலா, என் வழியிலா' என்பதே அக்கேள்வி.

இவ்வாசகம் கூறும் நிகழ்வில், பெண்ணும், மனிதனும் பழத்தை உண்ணுதல் என்ற சிறிய தவறை மட்டும் செய்யவில்லை. மாறாக, பழத்தை உண்ணலாம் என்ற முடிவை எடுத்ததன் வழியே, இன்னும் அடிப்படையான தவறைப் புரிகின்றனர். கடவுள் தந்த கட்டளைக்கு எதிராக, எது நல்லது, தீயது என்று தீர்மானிக்கும் அதிகாரத்தை, தங்களுக்குத் தாங்களே வழங்கிக்கொள்கின்றனர். சுருங்கச் சொன்னால், கடவுளைப்போல் செயல்பட விழைகின்றனர். கடவுள் வகுத்த வழியை விட்டு விலகி, தங்கள் வழியில் செல்கின்றனர். இது நம் அனைவரின் கதை.

இத்தகைய வழியைப் பின்பற்றாத ஒரு மனிதரை, இன்றைய நற்செய்தி (மத். 4:1-11) நமக்குக் காட்டுகிறது. கடவுளாக மாறுவதற்கு, அலகை, இயேசுவைத் தூண்டுகிறது. ஆனால், இயேசுவோ, கடவுள் மட்டுமே தன் மையம் என்பதை, உறுதியாக நிலைநாட்டுகிறார்" என்று, பெர்னோத்தா அவர்கள் கூறியுள்ளார்.

கடவுள் நம் வாழ்வின் மையமாக இல்லாதபோது, ஏனையப் போலிக்கடவுள்கள் நம் வாழ்வை நிறைத்துவிட வாய்ப்புண்டு. இறுதியில், உண்மையான கடவுளுக்குப் பதில், 'நான்' என்ற போலிக்கடவுளை நாம் பீடமேற்றி வைக்கிறோம். இத்தகைய மாயையிலிருந்து, நம்மை விழித்தெழச் செய்வதற்கு, பேரிடர்களும், பெரும் நோய்களும், எச்சரிக்கை மணிகளாக ஒலிக்கின்றன.

COVID-19 நோய்க்கிருமி, பங்குச் சந்தையை எவ்விதம் வீழ்த்தியுள்ளது என்பதில் உலகின் கவனம் திரும்பியுள்ள வேளையில், இந்த நோய்க்கிருமி, மனித சமுதாயத்தில் பீடமேற்றப்பட்டிருக்கும் பல்வேறு போலிக் கடவுள்களை வீழ்த்தியுள்ளது என்பதைச் சிந்திக்க, திருஅவைத் தலைவர்கள் உதவி வருகின்றனர். அவர்களில் இருவர், தங்கள் தவக்கால மடல்களில் பகிர்ந்துகொண்ட கருத்துக்களில் ஒரு சிலவற்றை, நாம் உள்ளத்தில் பதிக்க முயல்வோம்.

ஆசிய ஆயர் பேரவையின் தலைவரான, கர்தினால் சார்ல்ஸ் மாங் போ (Charles Maung Bo) அவர்கள் கூறியுள்ள கருத்து: "மனிதகுலம் இணைந்து வருவதற்கு, பேரிடர்கள் தகுந்ததொரு தருணம். அதேவேளை, நம் உள்ளங்களை ஆய்வு செய்வதற்கும் இதுவே தருணம். தொழில் நுட்பங்கள், ஆயுதக் குவிப்பு ஆகியவற்றின் துணைகொண்டு, உலகின் பல தலைவர்கள், கடவுளை அகற்றிவிட்டு, தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட முயல்கின்றனர். இவ்வுலகில் உண்மையான, உயர்ந்த சக்தி, கடவுள் மட்டுமே.

மனிதர்களாகிய நாம், அனைத்து சக்திகளும் கொண்டவர்கள் அல்ல என்பதை, நாம் சந்திக்கும் இயற்கை பேரிடர்களும், தொற்று நோய்களும் உணர்த்துகின்றன. இவ்வுலகம், சக்திமிக்கப் போர்க்கருவிகளைக் குவித்து வைத்தாலும், மிக நுண்ணிய கிருமியின் தாக்குதலை, இந்த ஆயுதங்கள், தடுக்க இயலாமல் போனது. மக்களைக் கொல்வதற்கு எண்ணற்ற ஆயுதங்கள் உள்ளன. ஆனால், இந்தத் தொற்றுக்கிருமியிலிருந்து மனிதரைக் காப்பாற்ற, நம்மிடம் மருந்து இல்லை" என்று கர்தினால் போ அவர்கள், வெளியிட்டுள்ள தவக்கால மடல் கூறுகிறது.

அண்மைய நாள்களில், இத்தாலியின் வடப்பகுதியில், COVID-19 தொற்றுக்கிருமி வெகு விரைவாகப் பரவியதையடுத்து, அப்பகுதியில், ஒரு சில மறைமாவட்டங்களில், திருநீற்றுப் புதன் திருப்பலி உட்பட, தவக்கால வழிபாடுகள் அனைத்தும், ஒரு சில வாரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இச்சூழலில், வெனிஸ் பெரு மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றும் முதுபெரும்தந்தை பிரான்செஸ்கோ மொராலியா (Francesco Moraglia) அவர்கள் வெளியிட்டுள்ள தவக்காலச் செய்தியில், இந்நோய் நமக்குச் சொல்லித்தரக்கூடிய பாடங்களைக் குறித்து, தன் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்:

"அறிவியல் தொழிநுட்பங்களின் பெருக்கத்தால் சக்தி பெற்றதைப்போல் உணர்ந்துவரும் நம் தலைமுறையினர், அனைத்திற்கும் உரிய தீர்வுகளை நாமே கண்டுபிடிக்கமுடியும் என்ற இறுமாப்பில் வாழ்கின்றனர். இந்த மாயையிலிருந்து நமது தலைமுறை விழித்தெழுவதற்கு வழங்கப்பட்டுள்ள ஒரு வாய்ப்பு, நாம் தற்போது சந்தித்துவரும் கொரோனா தொற்றுக்கிருமி நெருக்கடி.

நாம் சக்தியற்றவர்கள் என்ற உணர்வு, பழைமைத்தனம் கொண்ட மூட உணர்வு என்று எண்ணி, ஏளனம் செய்தவர்களுக்கு, நாம் சக்தியற்றவர்கள்தான் என்பதை, இந்நோய், மீண்டுமொருமுறை நினைவுறுத்தியுள்ளது. நம்மைப் படைத்தவரான கடவுள் இல்லாமல் வாழமுடியும் என்ற எண்ணம், வெறும் மாயை என்பதை இந்நெருக்கடி நமக்கு உணர்த்தியுள்ளது" என்று முதுபெரும்தந்தை மொராலியா அவர்கள் தன் மடலில் கூறியுள்ளார்.

வழிபாட்டுக் காலத்தின் முக்கியமானதொரு பகுதியாகக் கருதப்படும் தவக்காலத்தில், COVID-19 தொற்றுக்கிருமி நெருக்கடியால், ஒரு சில நாடுகளில், திருப்பலிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எனவே, இத்தவக்காலத்தில், வழிபாடுகளில் கலந்துகொள்ள இயலாத மக்களோடு நம்மையே இணைத்துக்கொண்டு, அவர்களை நம் செபங்களில் ஏந்திச் செல்வோம்.

அத்துடன், அண்மைய சில நாள்களாக இந்தியத் தலைநகர் டில்லியில் நடைபெற்ற கலவரங்களில் பாதிக்கப்பட்டோரையும், இஞ்ஞாயிறன்று, இறைவனின் சந்நிதிக்குக் கொணர்வோம். பிப்ரவரி 23, கடந்த ஞாயிறன்று துவங்கிய இந்த கலவரங்களில், 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர், இன்னும், 200த்திற்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர். குடியுரிமை சீர்திருத்த சட்டம், பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நாள் முதல், கடந்த 80 நாள்களில், நாடெங்கும் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில், இதுவரை, 69 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.

இவ்வேளையில், டில்லி பேராயர் அனில் கூட்டோ (Anil Couto) அவர்கள் உட்பட, தலைநகரில் உள்ள கிறிஸ்தவத் தலைவர்கள், இக்கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு அழைப்பு விடுத்துள்ளனர். வெறுப்பு என்ற உணர்வு, இந்தியர்களாகிய நம்மை வெற்றிகொள்ளவிடாமல் காத்துக்கொள்வோம் என்று, இத்தலைவர்கள், சிறப்பாக விண்ணப்பித்துள்ளனர்.

தவக்கால முயற்சிகளில் ஒன்றாக, கத்தோலிக்கர், இந்த வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்யவேண்டும் என்றும், கத்தோலிக்கப் பள்ளிகளும், பங்குத்தளங்களும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்கள் கதவுகளைத் திறந்துவைக்க வேண்டும் என்றும், பேராயர் அனில் கூட்டோ அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

உலகையே ஆட்டிப்படைக்கும் COVID-19 தொற்றுக்கிருமி, இந்தியத் தலைநகரை காயப்படுத்தியிருக்கும் மதக் கலவரம் ஆகியவற்றை எண்ணிப் பார்க்கும்போது, "இறைவா, எங்களுக்கு ஏன் இந்தச் சோதனைகள்?" என்ற கேள்வி, நம் உள்ளங்களில் எழுவதை உணர்கிறோம்.

"சோதனை மேல் சோதனை, போதுமடா சாமி" என்ற ஒரு பழைய திரைப்படப் பாடலை நாம் அறிவோம். தீர்க்கமுடியாத பிரச்சனைகளில் சிக்கிய ஒரு வீட்டுத்தலைவன் பாடுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. 'சாமி, இனி எனக்குச் சோதனைகளை அனுப்பாதே' என்று கெஞ்சும் பாணியில் அமைந்துள்ள இந்தப்பாடல் வரியில், சோதனைகளை அனுப்புவது கடவுள் என்ற கருத்து மறைமுகமாகக் கூறப்பட்டுள்ளது.

சோதனைகள் கடவுளிடமிருந்து வருகின்றனவா? அப்படித்தான் நம்மில் பலர் எண்ணுகிறோம். பேசுகிறோம். பிரச்சனைகள் நம்மைச் சூழ்ந்து பயமுறுத்தும்போது, "கடவுளே, ஏன் இப்படிச் சோதிக்கிறாய்?" என்று கடவுளிடம் முறையிடுகிறோம். அல்லது, "கடவுள் ஏன்தான் இப்படி என்னைச் சோதிக்கிறாரோ, தெரியவில்லை" என்று மற்றவர்களிடம் குறை கூறுகின்றோம்.

சோதனைகள் கடவுளிடமிருந்து வருகின்றனவா? என்ற கேள்விக்கு, இன்றைய நற்செய்தியின் முதல் வரிகள் ஓரளவு பதில் தருகின்றன. "இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதற்காகப் பாலை நிலத்திற்குத் தூய ஆவியால் அழைத்துச் செல்லப்பட்டார்" (மத். 4:1) என்ற வரிகளை ஆய்வு செய்யும்போது, இரு எண்ணங்கள் எழுகின்றன: 1. சோதனைகளைத் தருவது, அலகை. 2. சோதனைகளைச் சந்திப்பதற்கு நம்மை அழைத்துச் செல்வது, கடவுள். அலகையின் வழியாக, இயேசுவுக்கு வந்த சோதனைகளும், அவற்றை இயேசு சந்தித்த விதமும், நமக்கு, பாடங்களைச் சொல்லித்தருகின்றன.

கல்லை அப்பமாக்கி உண்ணும்படியும், எருசலேம் கோவிலின் மேலிருந்து குதிக்கும்படியும் கூறும் அலகையிடம், தன் பசியைப்போக்கும் அப்பத்தைவிட, கடவுளின் வாய்ச்சொல் முக்கியம் என்றும், தன் புகழை நிலைநாட்ட, கடவுளைச் சோதிப்பதைவிட, அவரைச் சோதிக்காமல் இருப்பதே மேல் என்றும், இயேசு திட்டவட்டமாகக் கூறுகிறார். இறுதியில், அவர், "'உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்' என்று மறைநூலில் எழுதியுள்ளது" (மத். 4:10) என்று ஆணித்தரமாகக் கூறியதும், அலகை அவரை விட்டு அகன்றது. உடனே வானதூதர் வந்து அவருக்குப் பணிவிடை செய்தனர் (மத். 4:11) என்று இன்றைய நற்செய்தி நிறைவு பெறுகிறது.

கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவருக்குப் பணி செய்வது என்ற முடிவு, நம் வாழ்வின் மையமானால், அங்கு அலகைக்கு இடமில்லாமல் போகிறது. இதற்கு மாறாக, இன்றைய உலகம், 'நான்' என்பதை மையப்படுத்தும் பல்வேறு போலிக் கடவுள்களை உருவாக்கி, அவற்றை, ஊடகங்களின் வழியே நம்மீது திணிப்பதற்கு முயன்று வருகிறது. இந்தப் போலிக்கடவுள்களின் பெயரால், மக்களைப் பிரித்து, அவர்கள் ஒருவரை ஒருவர் வேட்டையாடுவதை வேடிக்கை பார்க்கவும் இவ்வுலகம் தயங்குவதில்லை. இந்தக் கொடுமைகளின் விளைவுகளைச் சீர்தூக்கிப் பார்க்க, இறைவன் ஒருசில வாய்ப்புக்களை வழங்கியுள்ளார். சுற்றுச்சூழல் சீரழிவால், உலகின் ஒருசில நாடுகளில் பற்றியெரிந்த காடுகள், COVID-19 தொற்றுநோய், சிரியா போர், ஏமன் நாட்டு பட்டினிச் சாவுகள், ஆப்ரிக்காவில் நிகழும் மதக் கலவரங்கள், புது டில்லியில் நிகழ்ந்த கலவரங்கள் என்ற இவ்வாய்ப்புக்கள் வழியே, இறைவன், நம்மை, சிந்திக்கவும், செயலாற்றவும் அழைக்கிறார்.

போலி கடவுள்களை நம் வாழ்வின் மையமாக்க, இவ்வுலகம் விரிக்கும் அழகான சோதனை வலைகளுக்கு நாம் வழங்கும் பதில் என்ன? இயேசுவிடமிருந்து ஏதாவது பாடங்களை நாம் கற்றுக்கொள்ள முடியுமா? கற்றுக்கொண்டதை செயலாக்க விருப்பமா? இக்கேள்விகளுக்குப் பதில் சொல்ல, COVID-19 தொற்றுக்கிருமி வலம் வந்துகொண்டிருக்கும் இத்தவக்காலம் நல்லதொரு நேரம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 February 2020, 14:23