தேடுதல்

Vatican News
ஷாஹீன் பாஹ் பகுதியில் பல்சமய செபக் கூட்டம் ஷாஹீன் பாஹ் பகுதியில் பல்சமய செபக் கூட்டம்  

இந்தியாவில் அமைதி நிலவ பல்சமயத்தவர் செபங்கள்

ஷாஹீன் பாஹ் பகுதியில் இவ்வெள்ளியன்று நடைபெற்ற பல்சமய செப நிகழ்வில், கிறிஸ்தவம், இந்து, இஸ்லாம், சீக் ஆகிய முக்கிய மதங்களைச் சார்ந்தவர்கள் கலந்துகொண்டு, தங்களின் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்தனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில், குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து ஐம்பது நாள்களுக்கு மேலாக தர்ணா இடம்பெற்றுவரும்வேளை, இந்த எதிர்ப்பு நடவடிக்கையில், முஸ்லிம்களுடன் அனைத்து மதத்தினரும் இணைந்து, அமைதி மற்றும், ஒற்றுமைக்காகச் செபித்தனர் என்று யூக்கா செய்தி கூறுகின்றது.

டெல்லியின் தெற்கே ஷாஹீன் பாஹ் பகுதியில், இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவைகளுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் இடம்பெற்றுவருவதையொட்டி, அச்சம் நிறைந்த மற்றும், வன்முறை எழக்கூடிய சூழலை மாற்றும் நோக்கத்தில், பல்சமய செபக் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

பிப்ரவரி 6, இவ்வெள்ளியன்று நடைபெற்ற பல்சமய செப நிகழ்வில், கிறிஸ்தவம், இந்து, இஸ்லாம், சீக் ஆகிய முக்கிய மதங்களைச் சார்ந்தவர்கள் கலந்துகொண்டு, தங்களின் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்தனர்.

சில வகுப்புவாத சக்திகள், மதத்தின் பெயரால், மக்களை பிளவுபடுத்த முயற்சிக்கின்றன, ஆயினும், அனைத்து மதங்களும், அன்பையும், அமைதியையுமே போதிக்கின்றன, நாங்கள் இங்கு மக்களுடன், குறிப்பாக, முஸ்லிம்களுடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிப்பதற்காக கூடியிருக்கிறோம் என்று, அச்செப நிகழ்வில் கூறப்பட்டது.

கடந்த 53 நாள்களுக்கு மேலாக, 24 மணி நேரமும் இதே இடத்தில் இருக்கும் முஸ்லிம் பெண்களை வாழ்த்துவதாக, அச்செபக்கூட்டத்தில் கலந்துகொண்ட இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபை போதகர் அலெக்சான்டப் பிளமிங் அவர்கள், யூக்கா செய்தியிடம் கூறினார். கடந்த டிசம்பர் 11ம் தேதி, குடியுரிமை சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதிலிருந்து, அதற்கு எதிராக இடம்பெற்ற போராட்டங்களில் குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.  (UCAN)

08 February 2020, 15:46