தேடுதல்

Vatican News
லெபனான் மாரனைட் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை, கர்தினால் Bechara Boutros Rai லெபனான் மாரனைட் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை, கர்தினால் Bechara Boutros Rai  

புனித பூமி பற்றிய திட்டம், போரின் அடையாளம்

அரசுத்தலைவர் டிரம்ப் அவர்கள், புனித பூமிக்கென வெளியிட்டுள்ள திட்டம், ஒருதலைச்சார்பான முன்னெடுப்பு. இத்திட்டம், பாலஸ்தீனியர்களுக்கு மாண்பையும், உரிமைகளையும் வழங்காது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப் அவர்கள், புனித பூமிக்கென முன்வைத்துள்ள திட்டம், போர் மற்றும், வெறுப்புணர்வின் அடையாளம் என்று, லெபனான் மாரனைட் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை, கர்தினால் Bechara Boutros Rai அவர்கள் கூறியுள்ளார்.

அரசுத்தலைவர் டிரம்ப் அவர்கள், புனித பூமிக்கென வெளியிட்டுள்ள, “வளமைக்காக அமைதி” என்ற திட்டம், ஒருதலைச்சார்பான முன்னெடுப்பு என்று கூறிய கர்தினால் Rai அவர்கள், இத்திட்டம், பாலஸ்தீனியர்களுக்கு மாண்பையும், உரிமைகளையும் வழங்காது என, புனித பூமி திருஅவைத் தலைவர்கள் கூறியிருப்பதையும் குறிப்பிட்டார்.

முதுபெரும்தந்தையின் பெர்க் மையத்தில், கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து, லெபனான் நாட்டின் அமைதிக்காக தொடர்ந்து வழிபாடுகள் இடம்பெற்றுவரும்வேளை, இவ்வியாழனன்று நடைபெற்ற செபமாலை பக்திமுயற்சிக்குப்பின் பேசிய கர்தினால் ராய் அவர்கள், புனித பூமிக்காகச் செபிக்குமாறு அழைப்பு விடுத்தார்.

அரசுத்தலைவர் டிரம்ப் அவர்களின் இத்திட்டம், புனித பூமியை அழித்துவிடும் ஆபத்தை முன்வைக்கிறது என்றும், புனித பூமியானது, மீட்பராம் இயேசு பிறந்த இடம், மூவொரு கடவுள் வெளிப்படுத்தப்பட்ட இடம், திருஅவை உருவாக்கப்பட்ட இடம், மற்றும், உலகெங்கும் நற்செய்தி எடுத்துச் செல்லப்பட்ட இடம் என்று கூறினார், கர்தினால் ராய். 

இதற்கிடையே, சனவரி 28, இச்செவ்வாயன்று, அரசுத்தலைவர் டிரம்ப் அவர்கள் வெளியிட்டுள்ள “வளமைக்காக அமைதி” என்ற திட்டம் குறித்து, எருசலேம் உட்பட, புனித பூமியில் பணியாற்றும், பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் தலைவர்களும், லூத்தரன் உலக கூட்டமைப்பும், உலக கிறிஸ்தவ மன்றமும்,  இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்களும், தங்கள் ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் வெளியிட்டுள்ளனர். (Fides)

01 February 2020, 14:54