தேடுதல்

Vatican News
இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் இலட்சினை இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் இலட்சினை 

இந்திய ஆயர்கள் பேரவையின் 34வது நிறையமர்வு கூட்டம்

CBCI எனப்படும் இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை ஆரம்பிக்கப்பட்டதன் 75ம் ஆண்டு நிறைவு, 2020ம் ஆண்டில் சிறப்பிக்கப்படுகிறது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இந்திய கத்தோலிக்க ஆயர்கள், தங்களின் 34வது ஆண்டு நிறையமர்வு கூட்டத்தை, பிப்ரவரி 13ம் தேதி முதல், 19ம் தேதி வரை, பெங்களூரு, புனித யோவான் தேசிய மருத்துவ கல்லூரியில் நடத்தி வருகின்றனர்.

“உரையாடல்: உண்மை மற்றும், பிறரன்புக்குப் பாதை” என்ற தலைப்பில், பல்வேறு முக்கியமான விவகாரங்கள் குறித்து ஆயர்கள் கலந்துரையாடி வருகின்றனர்.

இந்தியாவின் இலத்தீன், சீரோ-மலபார், சீரோ-மலங்கார ஆகிய மூன்று வழிபாட்டுமுறைகளின் 174 மறைமாவட்டங்களைச் சார்ந்த ஏறத்தாழ 200 ஆயர்கள் கலந்துகொள்ளும் இக்கூட்டத்தில், சமுதாய நல்லிணக்கத்தை முன்னோக்கி நடத்திச் செல்வதற்கு ஒரே வழி, உரையாடல் கலாச்சாரத்திற்கு ஆதரவளிப்பதே போன்ற முக்கியமான விவகாரங்கள் பற்றி ஆயர்கள் கலந்துரையாடி வருகின்றனர்.

இந்திய திருப்பீட தூதர் பேராயர் ஜாம்பத்திஸ்தா திகுவாத்ரோ அவர்கள் தலைமையேற்று திருப்பலி நிறைவேற்றி, இந்த ஆண்டு நிறையமர்வு கூட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

CBCI எனப்படும் இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை ஆரம்பிக்கப்பட்டதன் 75ம் ஆண்டு நிறைவு, 2020ம் ஆண்டில் சிறப்பிக்கப்படுகிறது. இதற்கென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியிருந்த வாழ்த்துச் செய்தியை, பேராயர் திகுவாத்ரோ அவர்கள், இக்கூட்டத்தின் தொடக்கத்தில் வாசித்தார்.

சந்திப்பு கலாச்சாரத்தின் முக்கியத்துவம் பற்றி இக்கூட்டத்தில் உரையாற்றிய, மும்பை பேராயர் கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள், இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பவர்களுடன், இந்திய அரசு கலந்துரையாடல் நடத்த வேண்டுமென வலியுறுத்தினார். (AsiaNews)

15 February 2020, 13:37