தேடுதல்

Vatican News
தென்கொரிய இளையோர் தென்கொரிய இளையோர்  (AFP or licensors)

கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவ உலகளாவிய செபம்

1945ம் ஆண்டிலிருந்து இரு கொரிய நாடுகளும் பிரிந்திருப்பது, 1950ம் ஆண்டில் தொடங்கிய கொரியப் போர் முடிவுறாமல் இருப்பது ஆகியவை, கொரிய மக்களின் வாழ்வுப் பாதுகாப்புக்கு எதிரான சமுதாய-புவியியல் பாவம்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவுவதற்காக, வருகிற மார்ச் முதல் தேதியிலிருந்து, ஆகஸ்ட் 15ம் தேதி வரை, உலக அளவில் அமைதிக்காக இறைவேண்டல்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏறத்தாழ எழுபது நாள்களுக்கு நடைபெறும் இந்த உலகளாவிய செப நடவடிக்கையில், “நாங்கள் செபிக்கின்றோம், அமைதி இப்போதே நிலவ வேண்டும், போரை முடிவுக்குக் கொணருங்கள்” என்று, ஆயிரக்கணக்கான மக்கள் அழைப்பு விடுக்கவுள்ளனர்.

இச்செப நடவடிக்கையின் தயாரிப்பு நிகழ்வு, பிப்ரவரி 6, இவ்வியாழன்று ஜெனீவாவிலுள்ள உலக கிறிஸ்தவ சபைகள் மன்றத்திலும், வாஷிங்டன் நகரிலும், செயோல் நகரிலும் நடைபெற்றன.

ஜெனீவாவில் நடைபெற்ற இந்நிகழ்வில், தென் கொரிய கிறிஸ்தவ கூட்டமைப்பு, வட கொரிய தேசிய கிறிஸ்தவ கூட்டமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள், கடந்த எழுபது ஆண்டுகால நிலவரம் மற்றும், வருங்காலம் பற்றிய தங்களின் எதிர்பார்ப்புக்களைப் பகிர்ந்துகொண்டனர். 

அணு ஆயுதமற்ற உலகை உருவாக்கும் நோக்கத்தின் ஒரு பகுதியாக, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பகுதியாக மாற்றுவதற்கும், இந்த உலகளாவிய செப நடவடிக்கையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 1945ம் ஆண்டிலிருந்து இரு கொரிய நாடுகளும் பிரிந்திருப்பது மற்றும், 1950ம் ஆண்டில் தொடங்கிய கொரியப் போர் முடிவுறாமல் இருப்பது ஆகியவை, கொரிய மக்களின் வாழ்வுப் பாதுகாப்புக்கு எதிரான சமுதாய-புவியியல் பாவம் என்று, கொரிய தேசிய கிறிஸ்தவ கூட்டமைப்பின் பொது செயலர் Hong-Jung Lee அவர்கள் கூறினார். (ICN)

07 February 2020, 14:48