தேடுதல்

Vatican News
இயேசு சபை இல்லத்தில் அருள்பணி Marco Rupnik வண்ணக் கற்களால் உருவாக்கியுள்ள ஓவியம் இயேசு சபை இல்லத்தில் அருள்பணி Marco Rupnik வண்ணக் கற்களால் உருவாக்கியுள்ள ஓவியம் 

ஆண்டவரின் அர்ப்பணத் திருநாள் : ஞாயிறு சிந்தனை

தந்தையாம் இறைவன், நம் உலகப்பயணத்தில் குறிக்கிட்டு, "கொஞ்சநேரம் இக்குழந்தையை வைத்திருப்பாயா?" என்று, தன் அன்பு மகனை, ஒரு குழந்தையாக, நம் கரங்களில் ஒப்படைக்கிறார்.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

ஆண்டவரின் அர்ப்பணத் திருநாள் : ஞாயிறு சிந்தனை

கிறிஸ்தவ பாரம்பரியத்தின் தலைசிறந்த கருவூலங்களாகக் கருதப்படும் நான்கு நற்செய்திகளில், லூக்கா நற்செய்தி தனியொரு இடம் வகிக்கிறது என்பதில் ஐயமில்லை. 'கருணையின் நற்செய்தி' என்றழைக்கப்படும் இக்கருவூலத்தில் கூறப்பட்டுள்ள இயேசுவின் பிறப்பு தொடர்பான நிகழ்வுகள், கிறிஸ்மஸ் விழாவைக் கொண்டாட, நமக்கு அதிகம் துணையாக உள்ளன.

அதேவண்ணம், லூக்கா நற்செய்தியில் மட்டுமே கூறப்பட்டுள்ள மூன்று நிகழ்வுகளை அடித்தளமாகக் கொண்டு, கத்தோலிக்கத் திருஅவையில் மூன்று முக்கியத் திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. மார்ச் 25ம் தேதி சிறப்பிக்கப்படும், இயேசு பிறப்பின் அறிவிப்பு விழா (லூக்கா 1:26-38); ஜூன் 24ம் தேதி சிறப்பிக்கப்படும், திருமுழுக்கு யோவானின் பிறப்பு விழா (லூக்கா 1:57-66); மற்றும், இன்று, பிப்ரவரி 2ம் தேதி சிறப்பிக்கப்படும், ஆண்டவரின் அர்ப்பண விழா (லூக்கா 2:22-40) ஆகிய இம்மூன்று முக்கிய விழாக்களின் பின்புல நிகழ்வுகள், லூக்கா நற்செய்தியில் மட்டுமே பதிவாகியுள்ளன.

இன்று நாம் சிறப்பிக்கும் ஆண்டவரின் அர்ப்பணத் திருவிழா, நமக்குச் சொல்லித்தரும் ஒரு முக்கியப் பாடம் - குழந்தையின் வடிவில் வரும் இறைவனை, கரங்களில் ஏந்துவதால், நம்மில் உருவாகும் மாற்றங்கள் என்ற பாடம். இந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்ள, ஒரு சிறு கதை, உதவியாக உள்ளது.

பெருநகர் ஒன்றை நோக்கி விரைந்தது ஒரு பேருந்து. நீண்ட பயணம் என்பதால், வழியில், உணவு இடைவேளைக்கென பேருந்து நிறுத்தப்பட்டது. பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த ஓர் இளைஞர், அங்கிருந்த உணவு விடுதியில், சிற்றுண்டி அருந்த அமர்ந்தார். அந்நேரம், கையில் ஒரு குழந்தையை ஏந்தியவண்ணம் வந்த ஓர் இளம்பெண், இளைஞரை அணுகினார். அப்பெண், அவரிடம், "குழந்தையைக் கொஞ்சநேரம் வைத்திருக்கிறீர்களா? என் 'பர்ஸ்'ஸை 'டாய்லெட்'டில் வைத்துவிட்டு வந்துவிட்டேன்" என்று கூறியபடி, இளைஞரிடம் அக்குழந்தையை ஒப்படைத்தார். பின்னர், அப்பெண், கழிவறை பக்கம் செல்வதற்குப் பதில், உணவு விடுதியின் வாசலுக்கு விரைந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியுற்ற இளைஞர், குழந்தையுடன் அவர்பின்னே சென்றார். வாயிலை அடைந்ததும், அந்த இளம்பெண், வேகமாக ஓடி மறைந்துவிட்டார்.

இளைஞருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. குழந்தையுடன், அருகிலிருந்த காவல் நிலையத்திற்குச் சென்று, நடந்ததைக் கூறினார். காவல் துறையினர், உடனடியாகச் செயல்பட்டு, அக்குழந்தையின் தாயைக் கண்டுபிடித்தனர். அத்தாயைக் கண்ட இளைஞர் அதிர்ச்சியுற்றார். ஏனெனில், அவரிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டுச் சென்றது வேறொரு பெண். இப்போது வந்தவர், வேறொருவர். ஆனால், இவர்தான் உண்மையானத் தாய். ஓடிப்போன பெண், அக்குழந்தையை, அருகிலிருந்த ஊரிலிருந்து கடத்திவந்திருந்தார். அவர் மனசாட்சி உறுத்தியதோ, என்னவோ, அக்குழந்தையை இளைஞரிடம் ஒப்படைத்துவிட்டு, அவர் மறைந்துவிட்டார். குழந்தையை அதன் உண்மையானத் தாயிடம் ஒப்படைத்தத் திருப்தியுடன், இளைஞர், அவ்விடம் விட்டு அகன்றார்.

உலகின் பல இடங்களில் இதையொத்த நிகழ்வுகள் அடிக்கடி நடந்த வண்ணம் உள்ளன என்பதை அறிவோம். இந்நிகழ்வை ஓர் உவமைபோல எண்ணி, நாம் இன்றைய திருநாள் சிந்தனைகளைத் தொடர்வோம்.

குழந்தை இயேசுவை, கோவிலில் காணிக்கையாக அர்ப்பணித்தத் திருநாளை, இஞ்ஞாயிறன்று கொண்டாடுகிறோம். கிறிஸ்மஸ் விழா முடிந்து, சரியாக 40வது நாள், இத்திருநாள் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்மஸ், மற்றும் இன்றையத் திருநாள் இரண்டையும் இணைத்துச் சிந்திக்க, மேலே கூறிய கதையில் இடம்பெறும் ஒரு காட்சி நமக்கு உதவியாக இருக்கும். அதுதான், பயணம் செய்துகொண்டிருந்த ஓர் இளைஞரின் கரங்களில், எதிர்பாராதவிதமாக, குழந்தை ஒன்று ஒப்படைக்கப்பட்டக் காட்சி.

நாம் அனைவரும், உலக வாழ்வு என்ற பயணத்தை மேற்கொண்டவர்கள். இந்தப் பயணத்தில், திடீரென, ஒரு குழந்தை குறுக்கிடுகிறது. ஒவ்வொரு கிறிஸ்மஸ் காலத்திலும் நாம் சந்திக்கும் உண்மை இது. தந்தையாம் இறைவன், நம் உலகப்பயணத்தில் குறிக்கிட்டு, "கொஞ்சநேரம் இக்குழந்தையை வைத்திருப்பாயா?" என்று, தன் அன்பு மகனை, ஒரு குழந்தையாக, நம் கரங்களில் ஒப்படைக்கிறார்.

இயேசு என்ற குழந்தை, கோவிலில் காணிக்கையாக வழங்கப்பட்ட நிகழ்வை இன்று நாம் கொண்டாடும்போது, இக்குழந்தை, இவ்வுலகிற்காக அர்ப்பணிக்கப்பட்ட, அல்லது, நேர்ந்துவிடப்பட்ட குழந்தை என்பதை உணர்கிறோம். நேர்ந்துவிடப்பட்ட இக்குழந்தையைக் கரங்களில் ஏந்தும்போது, "இக்குழந்தையை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப்போகிறேன்?" என்ற கேள்வி, நம் மனங்களில் எழுகிறது. அத்துடன், அதைவிட இன்னும் ஆழமான, அடிப்படையான, "இக்குழந்தை யார்?" என்ற கேள்வியும் எழுகிறது. இந்த அடிப்படைக் கேள்விக்கு விடையாக, விவிலியம் முழுவதும், இயேசுவுக்கு, பல்வேறு அடைமொழிகள் தரப்பட்டுள்ளன. இந்த அடைமொழிகளில் சிலவற்றை, இறைவாக்கினர் எசாயா இவ்விதம் தொகுத்துள்ளார்.

எசாயா 9: 6

ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப்பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ வியத்தகு ஆலோசகர், வலிமைமிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர் என்று அழைக்கப்படும்.

குழந்தை இயேசுவுக்கு வழங்கப்படும் இந்த அடைமொழிகளை, கிறிஸ்மஸ் விழாவின் இரவுத் திருப்பலியில், நாம் ஒவ்வோர் ஆண்டும் கேட்கிறோம். இந்த அடைமொழிகள் அனைத்திற்கும் மேலாக, இக்குழந்தையைக் குறிப்பிட, நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஓர் அடைமொழி, இம்மானுவேல், அதாவது, கடவுள் நம்மோடு இருக்கிறார் (மத்தேயு 1:23). நம் கடவுள், விண்ணகத்தில், எட்டாத தூரத்தில் வாழ்பவர் அல்ல, மாறாக, அவர் நம்மில் ஒருவர் என்பதை, அழுத்தம் திருத்தமாகக் கூற விழைந்த இயேசு, கடவுளின் இல்லமான கோவிலில் தோன்றாமல், ஓர் எளிய மாட்டுத்தொழுவத்தில் பிறந்தார். பிறந்து 40 நாட்கள் சென்றபின்னரே, இறைவனின் இல்லம் என்று மக்களால் அழைக்கப்படும் கோவிலுக்கு, முதன்முறையாக, அவர் எடுத்துச் செல்லப்பட்டார்.

தன் சொந்த இல்லத்திற்கு இறைவன் வருவார்; அதுவும் யாரும் எதிர்பாராத வகையில் வருவார்; அவரது வரவு, சுகமான வரவாக இருக்காது என்பதை, இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் மலாக்கி இவ்விதம் கூறியுள்ளார்:

மலாக்கி 3: 1-2

நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரெனத் தம் கோவிலுக்கு வருவார். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உடன்படிக்கையின் தூதர் இதோ வருகிறார் என்கிறார் படைகளின் ஆண்டவர். ஆனால் அவர் வரும் நாளைத் தாங்கக் கூடியவர் யார்? அவர் தோன்றும்போது நிற்க வல்லவர் யார்? அவர் புடமிடுகிறவரின் நெருப்பைப் போலும் சலவைத் தொழிலாளியின் சவர்க்காரத்தைப் போலும் இருப்பார்.

இறைவாக்கினர் மலாக்கி இவ்விதம் எச்சரிக்கை விடுப்பதற்குக் காரணம் இருந்தது. அவர் வாழ்ந்த காலத்தில், எருசலேம் கோவில், தவறுகள் மண்டிப்போயிருந்த ஓர் இடமாக இருந்தது. இத்தவறுகளில் ஒன்றை, இறைவாக்கினர் மலாக்கி, இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்:

மலாக்கி 1: 7-8

உங்களைப் படைகளின் ஆண்டவர் கேட்கிறார். “என் பலிபீடத்தின் மேல் தீட்டான உணவைப் படைத்து என்னை அவமதித்தீர்கள். குருடானவற்றைப் பலியிடுகிறீர்களே, அது தவறில்லையா? நொண்டியும் நோயுமாய்க் கிடந்தவற்றைப் பலியிடக் கொண்டு வருகிறீர்கள். அது குற்றமில்லையா? அவற்றை உன் மாநிலத் தலைவனுக்குக் கொடுத்துப் பார். அவன் உன்னைக் குறித்து மகிழ்ச்சியடைவானோ? உனக்கு ஆதரவு அளிப்பானோ?” என்கிறார் படைகளின் ஆண்டவர்.

இவ்வுலகத் தலைவர்களிடம் கொடுக்கமுடியாத குறையுள்ள உயிரினங்களை கடவுளுக்குப் பலியிட்டுவந்த எருசலேம் கோவிலில், குறையேதும் அற்ற, முழுமையானப் பலிப்பொருளாக, இறைமகன் இயேசு கொண்டுவரப்பட்டார். அந்த முழுமையானப் பலிப்பொருளை, அடையாளம் கண்டுகொள்ள இயலாமல், மக்களின் பார்வை மங்கிப்போயிருந்தது. ஆனால், வயதில் முதிர்ந்த இருவர், அன்று, எருசலேம் கோவிலில் தங்கள் மீட்பரைக் கண்டுகொண்டனர். ஆவியாரின் தூண்டுதலால், அகக்கண்களில் தெளிவு பெற்றிருந்த சிமியோன், அன்னா என்ற இருவரும், குழந்தை இயேசுவின் வடிவில் வந்திருந்த பலிப்பொருளைக் கண்ணாரக் கண்டனர். "என் குழந்தையைக் கொஞ்சநேரம் வைத்திருக்கிறாயா?" என்று, கடவுள், சிமியோனின் உள்ளத்தைத் தூண்டியிருக்கவேண்டும். எனவே, அவராகவே முன்வந்து, மரியாவிடம், "அம்மா, உன் குழந்தையை நான் கொஞ்ச நேரம் வைத்திருக்கட்டுமா?" என்று கேட்டு, அவரைத் தன் கரங்களில் ஏந்தி நின்றார்.

ஒவ்வோர் ஆண்டும், பிப்ரவரி 2ம் தேதி சிறப்பிக்கப்படும், ஆண்டவரின் அர்ப்பணத் திருநாள், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வின் உலக நாள் என்றும் சிறப்பிக்கப்படுகிறது. 1997ம் ஆண்டு, திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த உலக நாள், இவ்வாண்டு, தன் 24வது உலக நாளைக் கொண்டாடுகிறது.

தங்கள் வாழ்வை, இறைவனுக்கு முழுமையாக அர்ப்பணமாக்கிய மரியா, யோசேப்பு, சிமியோன், அன்னா ஆகிய நால்வரும், குழந்தை இயேசுவை காணிக்கையாக அர்ப்பணித்த நிகழ்வைக் கொண்டாடும் திருநாள், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வின் உலக நாளாகச் சிறப்பிக்கப்படுவது பொருத்தமாக உள்ளது.

குழந்தை இயேசு, கோவிலுக்கு, காணிக்கையாகக் கொண்டுவரப்பட்ட இந்தக் காட்சியைச் சிந்திக்கும்போது, உரோம் நகரில் உள்ள ஒரு சிற்றாலயம் என் நினைவுக்கு வருகிறது. இயேசுசபையில், வயதில் முதிர்ந்து, நோயுற்றிருக்கும் துறவியரைக் கண்காணித்துவரும் ஓர் இல்லத்தின் சிற்றாலயத்தில், பீடத்திற்குப் பின்புறம், பொருத்தமான ஓவியம் வரைவதென்று முடிவு செய்தபோது, பல கருத்துக்கள் வெளிவந்தன. இயேசு குணமளிக்கும் ஏதாவது ஒரு நிகழ்வு, அந்த ஓவியத்தில் சித்திரிக்கப்பட வேண்டும் என்பதே பொதுவான கருத்தாக இருந்தது. அந்த ஓவியத்தை வண்ணக்கற்கள் கொண்டு உருவாக்கவிருந்த ஓவியர், Marco Rupnik என்ற இயேசுசபை அருள்பணியாளரிடம் கருத்து கேட்டபோது, தான் உருவாக்க விழைவதாக அவர் சொன்ன காட்சி வியப்பளித்தது. வயதில் முதிர்ந்த சிமியோன், எருசலேம் கோவிலில், குழந்தை இயேசுவைக் கரங்களில் ஏந்தி நிற்கும் காட்சியே பொருத்தமானது என்று, அருள்பணி Rupnik அவர்கள் கூறினார். அவரிடம் காரணம் கேட்டபோது, அவர் சொன்னது இதுதான்: “முதிர்ந்த வயதில், நோயுற்று, இந்த கண்காணிப்பு இல்லத்திற்கு வரும் இயேசுசபைத் துறவிகள், இறைவன் தங்களைக் குணப்படுத்தவேண்டும் என்று வேண்டுவதைவிட, அவர், தங்களை, இவ்வுலகிலிருந்து அமைதியாக அழைத்துக்கொள்ளவேண்டும் என்ற மனநிலையே அவர்களிடம் அதிகம் இருக்கும்” என்று அவர் விளக்கம் அளித்தார்.

அச்சிற்றாலயத்தில், சிமியோன், குழந்தை இயேசுவை, கரங்களில் தாங்கி நிற்கும் காட்சியே வடிவமைக்கப்பட்டுள்ளது. சிமியோன் முகத்தில் காணப்படும் அமைதி, "ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர். ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு, நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன" (லூக்கா 2:29-31) என்று அவர் கூறிய சொற்களை நினைவுறுத்துகின்றது.

குழந்தை இயேசுவைக் காணிக்கையாக அர்ப்பணித்தத் திருநாளில், இக்காட்சியைச் சிந்திக்கும்போது, வயதில் முதிர்ந்து, உடலால் தளர்ந்துள்ள அருள் பணியாளர்களையும், துறவியரையும் எண்ணிப்பார்ப்போம். இவர்கள் ஒவ்வொருவரும், இறைமகனை, தங்கள் உள்ளங்களில் ஏந்தியவண்ணம், மனநிறைவுடன், இவ்வுலக வாழ்விலிருந்து விடைபெற வேண்டுமென மன்றாடுவோம்.

அதேபோல், கோவிலைவிட்டு நீங்காமல், திருப்பணி செய்து வந்த கைம்பெண் அன்னா அவர்களும், அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப்பற்றிப் பேசினார் (லூக்கா 2: 37-38) என்று இன்றைய நற்செய்தியில் வாசித்தோம்.

எவ்வித விளம்பரமும் தேடாமல், நமது கோவில்களில், பல ஆண்டுகள் பணியாற்றிவரும் கைம்பெண்களையும், அருள் சகோதரிகளையும் நன்றியோடு எண்ணிப்பார்ப்போம். கைம்பெண் அன்னா, கடவுளின் வருகையை எல்லாரிடமும் எடுத்துரைத்த திருத்தூதராக மாறியதுபோல, இவர்களும் தங்கள் பணிகளின் வழியே, கடவுளின் அழகை அமைதியாகப் பறைசாற்றிவருவதற்காக இறைவனுக்கு நன்றி கூறுவோம். அவர்களை இறைவன் நிறைவாக ஆசீர்வதிக்க வேண்டுமென்றும் மன்றாடுவோம்.

01 February 2020, 14:24