தேடுதல்

திருத்தந்தை 12ம் பயஸ் திருத்தந்தை 12ம் பயஸ்  

சாம்பலில் பூத்த சரித்திரம்: 20ம் நூற்றாண்டு திருத்தந்தையர்-9

இரண்டாம் உலகப் போரில், 1941க்கும் 1945க்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில், நாத்சி ஜெர்மனியும், அதன் கூட்டணியும், ஏறத்தாழ அறுபது இலட்சம் யூதர்களை படுகொலை செய்தன. இவ்வெண்ணிக்கை, ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்களில் மூன்றில் இரண்டு பகுதியாகும்

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை 12ம் பயஸ்-2

நாத்சி கொள்கைகள் ஆதிக்கம் செலுத்திய காலக்கட்டத்தில், திருத்தந்தை 11ம் பயஸ் (1922-1939) அவர்களும், திருத்தந்தை 12ம் பயஸ் (1939-1958) அவர்களும், திருஅவையில் தலைமைப் பணியாற்றினார்கள். திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள், ஐரோப்பாவில் எழுச்சிகண்ட சர்வாதிகாரப்போக்கை கண்டித்து, மூன்று திருமடல்களை வெளியிட்டார். இத்தாலிய ஃபாசிசத்திற்கு எதிராக, “உங்களோடு எமக்குத் தொடர்பு தேவையில்லை” என்ற தலைப்பில் 1931ம் ஆண்டிலும், நாத்சிசத்திற்கு எதிராக, “ஆழ்ந்த ஏக்கத்துடன்” என்ற தலைப்பில் 1937ம் ஆண்டிலும், அதே ஆண்டில் கடவுள் நம்பிக்கையற்ற கம்யூனிசத்திற்கு எதிராக, “விண்ணக மீட்பர்” என்ற தலைப்பிலும்  திருமடல்களை வெளியிட்டார். இத்தாலிய ஃபாசிசம், அந்நியக் கடவுள் இயக்கம் என்று சொல்லி, அது இளைஞர்களை, திருஅவை மற்றும், இயேசு கிறிஸ்துவிடமிருந்து பறித்துச் செல்கின்றது, அது தன் சொந்த இளைஞர்களையே, வெறுப்புணர்வு, வன்முறை மற்றும், மரியாதையற்ற செயல்களுக்குத் தூண்டுகிறது என்றும், திருத்தந்தை குற்றம் சாட்டினார். இவர், ப்ரெஞ்ச் தீவிர தேசியவாத இயக்கத்திற்கும், அமெரிக்க ஐக்கிய நாட்டின் யூதமத விரோதப்போக்கிற்கும் சவால்விடுத்தார். இத்தகைய ஒரு சூழலில், 1939ம் ஆண்டில் திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள் இறைபதம் சேரவே, அவருக்குப்பின் திருஅவையின் தலைமைப்பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், திருத்தந்தையாக திருப்பொழிவு செய்யப்பட்ட நிகழ்வுக்கு, நாத்சி அரசை தவிர, மற்ற அரசுகள் அனைத்தும் தன் பிரதிநிதிகளை அனுப்பியிருந்தது. அந்நிகழ்வில், திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், போரைத் தவிர்க்குமாறு, உலகத் தலைவர்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்.

1942ம் ஆண்டில் ஜெர்மனியின் நாத்சி அரசு, ஐரோப்பாவிலுள்ள யூதர்களை ஒழித்துக்கட்டும் இறுதி தீர்மானத்தை நடைமுறைப்படுத்தத் துவங்கியது. முசோலினியின் பாசிச இனவெறி சட்டங்களின்கீழ், பல்வேறு முக்கிய யூத மத வல்லுனர்கள், இத்தாலிய பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். எனவே, அப்போதுதான் திருஅவையின் தலைமைப் பணியை ஆரம்பித்திருந்த திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், 1939ம் ஆண்டில், வத்திக்கானில் முக்கியமான வேலைகளில் யூத மத வல்லுனர்களைச் சேர்த்தார். அவ்வாண்டு ஜூன் 23ம் தேதி, பிரேசில் அரசுத்தலைவரிடம், போரின்போது, கத்தோலிக்கத்திற்கு மாறிய யூதர்களுக்கு, விசா எனப்படும் தங்கும் அனுமதி வழங்குமாறு வலியுறுத்தினார். இத்தகைய சூழலில், 1939ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் தேதி, “மனித சமுதாயத்தின் ஒற்றுமை” என்ற துணைத்தலைப்புடன் தனது முதல் திருமடலை வெளியிட்டார் அவர். அத்திருமடலை எழுதிக்கொண்டிருந்த சமயத்தில், கத்தோலிக்கப் போலந்து நாட்டை, நாத்சி ஜெர்மனி ஆக்ரமிக்கத் தொடங்கியது. இரண்டாம் உலகப் போரும் ஆரம்பமானது. யூதர்களை மனதில் வைத்து, கிறிஸ்துவில் யூதர் என்றும் கிரேக்கர் என்றும், விருத்தசேதனம் பெற்றவர், பெறாதவர் என்றும் இல்லை என்ற புனித பவுலடிகளாரின் (கலா.3,28) கூற்றை மேற்கோள்காட்டி திருத்தந்தை ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்தார். இத்திருமடலில், இவர், உலகெங்கும் வாழ்கின்ற கத்தோலிக்கர், போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருணை காட்டி உதவுமாறு அழைப்பு விடுத்தார். விரைவில் அமைதி திரும்ப வேண்டும், நீதி, அன்பு மற்றும் இரக்கப் பண்புகள் மேலோங்க செபத்தில் நம்பிக்கை வைத்து செபிக்க வேண்டும் என்றும் கூறிய திருத்தந்தை, போரில் அப்பாவி மக்கள் இறப்பது குறித்தும் கவலை தெரிவித்தார்.     

திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், இரண்டாம் உலகப் போரில் நடுநிலை வகிப்பது குறித்த, திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள் வகுத்த, வத்திக்கானின் கண்டிப்பான பொதுவான கொள்கையை, மீண்டும் உறுதிப்படுத்தினார். திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், இனப்பாகுபாடு மற்றும், யூதமத விரோதப் போக்கை கத்தோலிக்கத் திருஅவை எப்போதும் எதிர்க்கின்றது என்பதை, திரும்பத் திரும்ப கூறினார். 1939ம் ஆண்டில், போர்க் கைதிகள் மற்றும், போரினால் புலம்பெயர்வோர்க்கு, உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து உதவிகள் வழங்கும் மையமாக வத்திக்கானை மாற்றினார். திருத்தந்தையின் விண்ணப்பத்தின்பேரில், பின்னாளில் திருத்தந்தை 6ம் புவுல் என்ற பெயரில் திருஅவையை வழிநடத்திய, கர்தினால் ஜொவான்னி பத்திஸ்தா மொந்தினி அவர்கள் தலைமையில், வத்திக்கானில், போர்க் கைதிகள் மற்றும், புலம்பெயர்வோர் குறித்த தகவல் அலுவலகம் இயங்கியது. 1939ம் ஆண்டிலிருந்து, 1947ம் ஆண்டு வரை இயங்கிய அந்த அலுவலகத்தில், காணாமல்போன கைதிகள் குறித்து 98,91,497 தகவல்கள் கேட்கப்பட்டன. அதற்கு, 1 கோடியே 12 இலட்சத்து 93 ஆயிரத்து 511 பதில்களையும் அந்த அலுவலகம் வழங்கியது.

2ம் உலகப் போரில், இத்தாலி, ஹிட்லருடன் இணையாதிருந்த காலக்கட்டத்தில், திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், இத்தாலியர்கள், திருஅவைக்கு விசுவாசமாக இருக்குமாறு வலியுறுத்தினார். 1940ம் ஆண்டில் ஜெர்மனி, நெதர்லாண்டை ஆக்ரமிக்கவிருக்கும் திட்டத்தை எச்சரித்தார். போரில் இத்தாலிய சர்வாதிகாரி முசோலினி, ஹிட்லருடன் இணைய வேண்டாமென திருத்தந்தை விடுத்த விண்ணப்பம் வெற்றி பெறவில்லை. 1943ம் ஆண்டில் ஜெர்மனி, இத்தாலியை ஆக்ரமித்தபோது, அக்டோபர் 16ம் தேதி, வத்திக்கானுக்கு அருகில் 1,259 யூதர்கள் கைது செய்யப்பட்டனர். அதேநேரம், யூதர்களுக்கு அடைக்கலம் அளிக்குமாறு, திருத்தந்தை கத்தோலிக்க நிறுவனங்களுக்கு அறிக்கை அனுப்பினார். எனினும் திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், இரண்டாம் உலகப் போரில் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு போதிய அளவு கண்டனம் தெரிவிக்கவில்லை என்று சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.  எனவே திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள் தொடர்பாக, வத்திக்கான் ஆவண காப்பகத்தில் உள்ளவைகள், வருகிற மார்ச் மாதத்தில் ஆய்வாளர்களின் பார்வைக்கு வைக்கப்படும் என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் 4ம் தேதி அறிவித்தார். இரண்டாம் உலகப் போரில், 1941க்கும் 1945க்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில், நாத்சி ஜெர்மனியும், அதன் கூட்டணியும், ஏறத்தாழ அறுபது இலட்சம் யூதர்களை படுகொலை செய்தன. இவ்வெண்ணிக்கை, ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்களில் மூன்றில் இரண்டு பகுதியாகும். மேலும், ஹிட்லரின் நாத்சி கருணைக்கொலை திட்டத்தில், உடலிலும், மனத்தளவிலும் மாற்றுத்திறன்கொண்ட மூன்று இலட்சத்திற்கு அதிகமான கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 February 2020, 11:59