தேடுதல்

உகாண்டா ஜான் போஸ்கோ புலம்பெயர்ந்தவர் முகாம் உகாண்டா ஜான் போஸ்கோ புலம்பெயர்ந்தவர் முகாம் 

2021ல் நடைபெறும் தேர்தல்களுக்காக செபம்

உகாண்டாவில் எழுபது விழுக்காட்டினர் இளைஞர்கள். எனவே இவர்கள் நாட்டின் வருங்கால நீடித்த நிலையான அமைதித் திட்டத்தில் ஈடுபடுத்தப்பட வேண்டும் - ஆயர்கள்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உகாண்டா நாட்டில் 2021ம் ஆண்டில் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தல்களுக்காக, இறைவனிடம் மன்றாடுமாறு, அந்நாட்டு கிறிஸ்தவத் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஆப்ரிக்க நாடான உகாண்டாவில், பிப்ரவரி 23, கடந்த ஞாயிறன்று கடைப்பிடிக்கப்பட்ட தேசிய மறைசாட்சிகள் நாளன்று இடம்பெற்ற, தேசிய கிறிஸ்தவ ஒன்றிப்பு செப நிகழ்வில் உரையாற்றிய Kasana-Luweero ஆயர் Paul Ssemogerere அவர்கள், நாட்டின் அனைத்து கிறிஸ்தவ சபையினரும் கூடியிருக்கும் இவ்வேளையில், வருகிற ஆண்டில் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலுக்காகச் செபிப்போம் என்று கூறினார்.

கிறிஸ்தவர்கள் என்ற முறையில், நாம் அமைதியை ஊக்குவிக்க கடமைப்பட்டவர்கள் என்றுரைத்த ஆயர் Ssemogerere அவர்கள், நமது சொல்லும் செயலும், இறையுணர்வையும், அமைதியையும் பிரதிபலிக்க வேண்டும் என்றும் கூறினார்.

உகாண்டாவில் எழுபது விழுக்காட்டினர் இளைஞர்கள் என்பதால், நாட்டின் வருங்கால நீடித்த நிலையான அமைதித் திட்டத்தில் அவர்களும் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்றும் ஆயர் கூறினார்.

உகாண்டாவிற்கு அமைதியை ஊக்குவிக்கும் படைவீரர்களும், காவல்துறை அதிகாரிகளும் தேவைப்படுகின்றனர், ஆனால், தற்போது குடிமக்களுக்கு எதிராகத் துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுவது அவமானமாக உள்ளது, நம் சமுதாயத்தில் நிலவும் அனைத்துவித அநீதிகளையும் களைய நமக்குள்ளே அமைதி தேவைப்படுகின்றது என்று, அந்நாட்டு ஆர்த்தடாக்ஸ் சபையின் பேராயர் கான்ஸ்ட்டைன் அவர்கள் கூறினார்.

இந்த தேசிய செப நிகழ்வில், கத்தோலிக்கர், ஆங்லிக்கன், ஆர்த்தடாக்ஸ் சபையினர் உட்பட, பல்வேறு கிறிஸ்தவ சபையினர் பங்குபெற்றனர். (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 February 2020, 14:57