தேடுதல்

Vatican News
BREXIT கடவுச் சீட்டு BREXIT கடவுச் சீட்டு 

பிரிட்டனில் வெளிநாட்டவர் பற்றிய புதிய விதிமுறைகள்

பிரித்தானியாவில் வாழ்கின்ற EU நாடுகளின் குடிமக்கள், 2021ம் ஆண்டு ஜூன் 30ம் தேதிக்குள், பிரித்தானிய அதிகாரிகள் வரையறுக்கும் குடியேற்ற திட்டத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பிரிட்டன், EU எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து முழுவதுமாக வெளியேறிய Brexit நடவடிக்கையைத் தொடர்ந்து, அந்நாட்டு அரசு, அயல்நாட்டவர் குறித்து மேற்கொண்டுவரும் தீர்மானங்கள் பற்றி, கத்தோலிக்கர், தங்கள் அயலவர்களுக்கு எடுத்துரைக்குமாறு அந்நாட்டு ஆயர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பிரித்தானியாவில் வாழ்கின்ற ஐரோப்பியர்கள், அந்நாட்டில் சட்டமுறைப்படி தொடர்ந்து வாழ்வதற்குத் தேவையான நடைமுறைகளை மேற்கொள்வதற்கு, கத்தோலிக்கர் உதவுமாறு, ஆயர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

பிரித்தானியாவில் வாழ்கின்ற EU நாடுகளின் குடிமக்கள் மற்றும், சுவிட்சர்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே, ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள், 2021ம் ஆண்டு ஜூன் மாதம் 30ம் தேதிக்குள், பிரித்தானிய அதிகாரிகள் வரையறுக்கும் குடியேற்ற திட்டத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். ஆயினும், இதற்குத் தகுதியுடையவர்களில் 25 விழுக்காட்டினர், இதுவரை அனுமதிகேட்டு விண்ணப்பிக்கவில்லை என்று கூறப்படுகிறது.  

இக்காரணத்தினால், பிரித்தானிய கத்தோலிக்கர், தங்களின் ஐரோப்பிய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ஏனையோர்க்கு, அரசின் இந்த ஆணை குறித்து அறிவிக்குமாறு ஆயர்கள் கூறியுள்ளனர்.  

அயர்லாந்து குடிமக்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை எனக் கூறப்பட்டுள்ளது.     

22 February 2020, 15:56