தேடுதல்

Vatican News
முதுபெரும்தந்தை பர்த்தலோமேயு முதுபெரும்தந்தை பர்த்தலோமேயு   (ANSA)

மனித உடன்பிறந்த நிலை கூட்டத்தில் முதலாம் பர்த்தலோமேயு

அடிப்படைவாதத்தைக் களைந்து, உரையாடலை மேற்கொள்வது, இன்றைய உலகில், மதங்கள் ஆற்றவேண்டிய மிக முக்கியப் பணி - முதுபெரும்தந்தை பர்த்தலோமேயு

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மதங்கள், அரசியலுக்கு ஒரு மாற்றாக அமையமுடியாது, அப்படி அமைவது, மதங்களின் நோக்கமும் அல்ல என்றும், அதே வேளையில், மதங்கள் கூறும் விழுமியங்கள், அரசியல் செயல்பாடுகளை வழிநடத்தும் அளவுகோல்களாக அமைகின்றன என்றும் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை, முதலாம் பர்த்தலோமேயு அவர்கள் கூறினார்.

“உலக அமைதிக்கும், ஒன்றிணைந்து வாழ்வதற்கும், மனித உடன்பிறந்த நிலை”என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஏடு கையெழுத்திடப்பட்டதன் ஓராண்டு நிறைவை சிறப்பிக்க, அபு தாபியில் நடைபெற்ற கூட்டத்தில், முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு அவர்கள் வழங்கிய உரையில், இவ்வாறு கூறினார்.

அடிப்படைவாதத்தைக் களைந்து, உரையாடலை மேற்கொள்வது, இன்றைய உலகில் மதங்கள் ஆற்றவேண்டிய மிக முக்கியப் பணி என்பதை, தன் உரையின் மையக்கருத்தாக, முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு அவர்கள் வழங்கினார்.

சுற்றுச்சூழல் நெருக்கடி என்ற மிகப்பெரிய சவாலை, மனித குலம் முழுவதும் தற்போது சந்தித்துவருகிறது என்பதை, தன் உரையில் சுட்டிக்காட்டிய முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு அவர்கள், முன்னெப்போதும் இல்லாத அளவு நமக்கு அறிவியல் வளர்ச்சி இருந்தாலும், மனிதர்களாகிய நாம், இயற்கையின் மீதும், சக மனிதர் மீதும் முன்னெப்போதும் இல்லாத அளவு வன்முறைகளை மேற்கொண்டு வருகிறோம் என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

மதங்களுக்கிடையே அமைதி நிலவாதபோது, உலகில் அமைதி நிலவாது என்பதையும், மதங்களுக்கிடையே அமைதி உருவாக, உரையாடல் ஒரு முக்கிய கருவி என்பதையும் முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு அவர்கள் தன் உரையில் வலியுறுத்திக் கூறினார்.

கடவுள் மீது நம்பிக்கையும், உடன்பிறந்த உணர்வும் நம்மிடையே நிலவும் பல்வேறு பாகுபாடுகளை நீக்க மிகச் சிறந்த வழி என்பதை, முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு அவர்கள், தன் உரையின் இறுதியில் குறிப்பிட்டார். (AsiaNews)

05 February 2020, 15:04