தேடுதல்

திருத்தந்தையுடன் சீரோ மலபார் வழிபாட்டுமுறை ஆயர்கள் திருத்தந்தையுடன் சீரோ மலபார் வழிபாட்டுமுறை ஆயர்கள் 

குடியுரிமை சட்டத்திருத்தம் – சீரோ மலபார் ஆயர்களின் கவலை

குடியுரிமை குறித்து, இந்தியாவின் நடுவண் அரசு, அண்மையில் வெளியிட்டுள்ள சட்டத்தைக் குறித்து, சீரோ மலபார் ஆயர்கள் மாமன்றத்தில், கவலை வெளியிடப்பட்டது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

குடியுரிமை குறித்து, இந்தியாவின் நடுவண் அரசு, அண்மையில் வெளியிட்டுள்ள சட்டத்தைக் குறித்து, கேரளாவின் கொச்சியில் நடைபெற்ற சீரோ மலபார் ஆயர்கள் மாமன்றத்தில், கவலை வெளியிடப்பட்டது.

சனவரி 7ம் தேதி முதல் 15ம் தேதி முடிய நடைபெற்ற இந்த மாமன்றத்தில், இஸ்லாமியரைப் புறந்தள்ளி, இந்து, புத்தம், சமணம், கிறிஸ்தவம், சீக்கியம் ஆகிய மதங்களைச் சார்ந்தவர்களுக்கு இந்தியா குடியுரிமை வழங்கும் என்று நடுவண் அரசு அறிவித்துள்ளது, சமயப் பாகுபாடுகளை மேலும் தூண்டும் என்று சீரோ மலபார் ஆயர்கள் கூறியுள்ளனர்.

இந்திய சட்டங்களின் அடிப்படையான மத சார்பற்ற நிலையை, இந்த புதிய சட்டம் கேள்விக்குள்ளாக்குகிறது என்றும், மத அடிப்படைவாதத்தை பாரதீய ஜனதா கட்சி வளர்க்கிறது என்பதற்கு இது மற்றுமோர் எடுத்துக்காட்டு என்றும், சீரோ மலபார் திருஅவையின் செயலர், அருள்பணி Antony Thalachelloor அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்தியாவில் குடியுரிமை பெறுவதற்கு இஸ்லாமியருக்கு மறுக்கப்பட்டுள்ள இந்த பாகுபாட்டு நிலையால், அண்டைய நாடுகளான பாகிஸ்தான், மியான்மார் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் துன்புறும் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த இஸ்லாமியர் மேலும் துன்புறும் நிலையை அடைந்துள்ளனர் என்று ஆயர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

நடுவண் அரசு வெளியிட்டுள்ள இந்த சட்டத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்ற வேண்டுகோளை, இந்திய ஆயர் பேரவை, அனைத்து கிறிஸ்தவ கழகம், மற்றும் இந்திய கிறிஸ்தவ பெண்கள் அமைப்பு ஆகியவை முன்வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 January 2020, 15:16