தேடுதல்

Vatican News
குழந்தை இயேசுவை வணங்கும் மூன்று ஞானிகள் குழந்தை இயேசுவை வணங்கும் மூன்று ஞானிகள் 

விதையாகும் கதைகள் : நான்காவது ஞானி

இயேசுவைச் சந்தித்த மூன்று ஞானிகளின் கதை வேறு பல அழகான கற்பனைக் கதைகளுக்கு வித்திட்டுள்ளது.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

இயேசுவைச் சந்தித்த மூன்று ஞானிகளின் கதை வேறு பல அழகான கற்பனைக் கதைகளுக்கு வித்திட்டுள்ளது. கல்வியாளரும், எழுத்தாளருமான Henry Van Dyke அவர்கள் எழுதிய “The Other Wise Man” மற்றுமொரு ஞானி என்ற கதையில் வரும் ஞானியின் பெயர் ஆர்த்தபான். தான் சந்திக்கச் செல்லும் மன்னனுக்குப் பரிசுகள் ஏந்திச்செல்ல நினைத்த ஆர்த்தபான், தன் சொத்துக்கள் அனைத்தையும் விற்று, விலையுயர்ந்த மாணிக்கம், வைரம், முத்து ஆகியவற்றை வாங்கிக்கொண்டார்.

அவர் செல்லும் வழியில், நோயுற்று சாகும் நிலையிலிருந்த ஒரு யூதரைப் பார்த்தார். நோயாளியை விட்டுவிட்டுச் செல்ல அவரது மனம் இடம் தரவில்லை. தன்னிடம் இருந்த மாணிக்கத்தை விற்று, அந்தப் பணத்தைக்கொண்டு, நோயாளிக்குத் தேவையான உதவிகளைச் செய்தார். இதனால், அவரது பயணம் கொஞ்சம் தாமதமானது.

அவர் பெத்லகேமை அடைந்தபோது, மற்ற மூன்று ஞானிகளும் மீண்டும் தங்கள் நாட்டுக்குப் போய்விட்டதை அறிந்தார். அதைவிட, பெரும் ஏமாற்றம்... குழந்தை இயேசுவை அவரது பெற்றோர் எகிப்துக்குக் கொண்டு சென்றுவிட்டனர் என்ற செய்திதான். ஆர்த்தபான், எகிப்து நோக்கி தன் பயணத்தைத் துவக்கியபோது, மன்னன் ஏரோதின் படைவீரர்கள் அங்குள்ள குழந்தைகளைக் கொல்வதற்கு வருவதைப் பார்த்தார். தன்னிடம் இருந்த வைரத்தைப் படைத் தளபதியிடம் கொடுத்து, ஒரு குழந்தையை அவர் காப்பாற்றினார்.

பின்னர், ஆர்த்தபான், 33 ஆண்டுகள் தனது மன்னனைத் தேடி அலைந்து, இறுதியில் எருசலேம் வந்து சேர்ந்தார். அங்கு, இயேசுவைச் சிலுவையில் அறைவதற்கு ஏற்கனவே கல்வாரிக்குக் கொண்டு சென்றுவிட்டனர் என்று கேள்விப்பட்டார். தன் கையிலிருக்கும் விலையுயர்ந்த முத்தை, அந்த வீரர்களிடம் கொடுத்து, இயேசுவை மீட்டுவிடலாம் என்று கல்வாரி நோக்கி விரைந்தார். போகும் வழியில், அடிமையாக விற்பதற்கென்று ஒரு பெண் இழுத்துச் செல்லப்படுவதைக் கண்டார். அப்பெண்ணை விடுவிக்க, தன்னிடம் இருந்த கடைசி பரிசான அந்த முத்தையும் கொடுத்தார்.

அந்நேரத்தில், திடீரென இருள் சூழ்ந்தது. நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆர்த்தபான், தலையில் அடிபட்டு கீழே விழுந்தார். அவ்வேளையில், "இந்தச் சிறியவர்களுள் ஒருவருக்கு நீர் இதைச் செய்யும்போது, எனக்கேச் செய்தீர்" என்ற குரல் கேட்டது. இக்குரலைக் கேட்டதும், ஆர்த்தபான் தான் தேடி வந்த அரசனைக் கண்டுகொண்ட மகிழ்வோடு, நிறைவோடு கண்களை மூடினார்.

04 January 2020, 14:42