தேடுதல்

Vatican News
குடியுரிமை திருத்த சட்ட வரைவு குறித்து பேசும் பேராயர் பீட்டர் மச்சாடோ குடியுரிமை திருத்த சட்ட வரைவு குறித்து பேசும் பேராயர் பீட்டர் மச்சாடோ  

குடியுரிமை, மதத்தின் அடிப்படையில் வழங்கப்படக் கூடாது

இந்தியாவில், குடியுரிமை வழங்குவதில் ஒரு மதம் புறக்கணிப்பட்டால், அது, எல்லாரையும் உள்ளடக்கும் நாட்டின் மரபிலிருந்து விலகிச் செல்வதாக இருக்கும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மதத்தை அடிப்படையாக வைத்து அல்ல, மாறாக, ஒவ்வொரு தனி நபரின் நிலைமையை வைத்து குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று, பெங்களூரு பேராயர், பீட்டர் மச்சாடோ அவர்கள், இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு, சனவரி 9, இவ்வியாழனன்று அனுப்பிய விண்ணப்ப மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார். 

இந்தியா முழுவதும் குடியுரிமை திருத்த சட்ட வரைவுக்கு எதிராகப் போராட்டங்கள் தீவிரமடைந்துவரும்வேளை, கர்நாடக மாநிலத்தின், மனித உரிமைகள் குறித்த கிறிஸ்தவ கழகத்தின் தலைவரான பேராயர், பீட்டர் மச்சாடோ அவர்கள், குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு விடுத்துள்ள இந்த விண்ணப்ப மனுவை, கர்நாடக மாநில ஆளுனர்  Vajubhai Vala அவர்கள் வழியாகச் சமர்ப்பித்துள்ளார்.

குடியுரிமை வழங்குவதில் ஒரு மதத்தைப் புறக்கணித்தால், அந்நடவடிக்கை, எல்லாரையும் உள்ளடக்கும் இந்தியாவின் பாரம்பரியத்திலிருந்து விலகிச் செல்வதாக இருக்கும் என்றும், குடியுரிமை வழங்குவதில், மதம் ஒரு காரணியாக இருக்கக் கூடாது என்றும், பேராயர், பீட்டர் மச்சாடோ அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

இவ்விவகாரத்தில், இந்திய ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள் விடுத்த அழைப்பையே தாங்களும் வலியுறுத்துவதாக, பெங்களூரு பேராயரின் மனு கூறுகின்றது.

இந்த மனுவை, கர்நாடக மாநில கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகள் மற்றும், ஏராளமான அருள்பணியாளர்களுடன் ஆளுநர் மாளிகை சென்று சமர்ப்பித்தார், பேராயர், பீட்டர் மச்சாடோ.  

சென்னை-மயிலை பேராயர்

மேலும், இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்ட வரைவு விவகாரம் தொடர்பாக, தமிழக முதலமைச்சரிடம் மனு சமர்ப்பிப்பதற்காக, சென்னை-மயிலை பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி அவர்களும், இந்துமத அறிவாளர்கள், பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள் உட்பட பல்வேறு சமயங்களைச் சார்ந்த பொதுநிலை பிரதிநிதிகளுடன் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். (Agenzies) 

10 January 2020, 14:47